search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl tried to set herself on fire"

    • விபத்தில் மகன் மீது தவறு இருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக புகார்
    • கலெக்டர் சமாதானம் செய்தார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    காட்பாடி அடுத்த வடுகன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரது மனைவி கோட்டீஸ்வரி (வயது 49) என்பவர் திடீரென கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் கோட்டீஸ்வரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு குடியாத்தத்தில் நடந்த விபத்தில் என்னுடைய மகன் ரவிவர்மா (26) என்பவர் பலியானார். இதில் தவறுதலாக எனது மகன் மீது தவறு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது மகன் மீது எந்த தவறும் இல்லை. இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறினார்.

    அவரை சமாதானம் செய்த கலெக்டர் முறையாக மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும். எந்த காரணத்தைக் கொண்டும் தீக்குளிக்கும் எண்ணத்தோடு வரக்கூடாது என அறிவுரை வழங்கினார்.

    குடியாத்தம் அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அதில் குடியாத்தம் பலமனேர் சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதியில் 60 வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எங்களுக்கு மாற்று இடம் வழங்கி விட்டு பின்னர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி விருப்பாச்சிபுரம் குளவி மேடு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தினர். அதில் குளவி மேடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 5 வருடங்களாக குடியிருந்து வருகிறோம்.

    எங்கள் குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. கடந்த வாரம் குடியிருப்பில் பெண் ஒருவர் இறந்து விட்டார். அவரை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்றபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

    எங்கள் ஊர் மக்களுக்கு சுடுகாட்டில் அடக்கம் செய்யபோதிய இடவசதி இல்லை. எனவே இந்த ஒருவரை மட்டுமே இங்கே அடக்கம் செய்து கொள்ள லாம். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளனர். எங்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கூறியுள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் மனு ஒன்று அளித்தார். அதில் குடியாத்தம் கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார்.

    ×