என் மலர்tooltip icon

    வேலூர்

    • அரசு ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடந்தது
    • 496 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து வட்டார அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் 52 நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்பு கோரி 1200 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 496 பேருக்கு பணியாணைகள் வழங்கப்பட்ட ன.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். திருமலை வரவேற்றார்.

    மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் ஜி.பரமேஸ்வரி ஆகியோர் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

    சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். முடிவில் மகளிர் திட்ட குடியாத்தம் வட்டார மேலாளர் திவ்யா நன்றி கூறினார்.

    இதில் மகளிர் திட்ட பணியாளர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு துறை பணியாளர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்திட வேண்டும்.

    அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்தவுடன் வழங்கிட வேண்டும். முடக்கப்பட்ட சரண் விடுப்பை வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

    சிறப்புக்காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • மாங்காய், புளி சாதம் சாப்பிட்டதால் ஏற்பட்டதாக டாக்டர்கள் தகவல்
    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை

    வேலூர்:

    காட்பாடி கசம் பகுதியில் தனியார் பள்ளி விடுதி இயங்கி வருகிறது. இங்கு 52 மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை உணவு சாப்பிட்ட பிறகு மாணவர்கள் 2 பேருக்கு திடீரென வயிற்றுப் போக்கு, மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்களை மீட்டு பள்ளிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாங்காய் மற்றும் புளி சாதம் சாப்பிட்டதன் காரணமாக மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கேவலமாக பேசுவதாக புகார்
    • சம்பள உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் நேற்று தப்பி ஓடி விட்டனர்.

    இந்த நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் காவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அதில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசினர் பாதுகாப்பு இடத்தில் பணியாற்றி வருகிறோம். கடந்த சில மாதங்களாக இல்லத்தில் உள்ள சிறார்களின் நடவடிக்கை களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் பணியில் இருக்கும் எங்களை சிறார்கள் கேவலமாகவும் அசிங்கமாகவும் பேசுகிறார்கள்.

    நேற்று பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு 6 பேர் தப்பி ஓடி விட்டனர். இதனால் எங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

    எனவே எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பள உயர்வு, பணி நிரந்தரம் போன்றவற்றை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    • வேலூரில் இந்தாண்டு முதல்முறையாக சதத்தை தொட்டது
    • அனல் காற்று வீசியது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாவட்டங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    மே மாதம் கத்திரி வெயில் சமயத்தில் வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சதம் அடித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினமும் சிறிது சிறிதாக அதிகரித்த வெயில் நேற்று முன்தினம் 95.5 டிகிரி பதிவானது.

    இந்த நிலையில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணியளவிலேயே உச்சி வெயிலை போன்று சுட்டெரித்தது.

    மதியம் 12 மணியளவில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று வெயில் சதம் அடித்தது. 100.4 டிகிரி பதிவானது.

    சுட்டெரித்த வெயிலால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    அதேபோன்று குறைவான வாகனங்களே சாலையில் சென்றதையும் காண முடிந்தது. இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தள்ளுவண்டி கடைகளில் தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு, அன்னாசி பழங்களின் விற்பனையும் களைகட்டியது.

    பகல் வேளையில் அனல் காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    மதிய வேளையில் குடிநீர் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சூடாக இருந்தது. காலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மின்விசிறியில் இருந்து வந்த காற்றும் அனலாக இருந்தது.

    அதனால் பொதுமக்கள் உறங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

    நாட்கள் செல்ல செல்ல மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
    • அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்தாண்டு ஆகஸ்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    5 சட்டமன்ற தொகுதிகளில் 1,300 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து வருகின்றனர்.

    இதில், போதிய முன்னேற்றம் காணப்படாததால் கடந்த 25, 26 ஆகிய 2 நாட்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில், கடந்த 25-ந் தேதி 4,595 பேரின் ஆதார் எண்ணும், 26-ந் தேதி 3,994 பேரின் ஆதார் எண்ணும் என்றும் 2 நாட்களில் 8,589 பேரின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர்.

    அதில் 71 சதவீதம் பேரின் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடியில் அரசு நூற்பாலை உள்ளது. மூடப்பட்ட இந்த தொழிற்சாலையில் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    அணைக்கட்டு அருகே உள்ள கலங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த காவலாளி கணபதி என்பவர் 2 நாட்களுக்கு முன்பு பணியில் இருந்தார்.

    அப்போது தொழிற்சாலையில் புகுந்த 2 பேர் அங்கிருந்த இரும்பு தகடுகள் மற்றும் கம்பிகளை திருடி சென்றனர்.

    அவர்களை காவலாளி கணபதி விரட்டிச் சென்றார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்புக்கம்பி திருடியவர்களை தேடி வந்ததனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகளை திருடியது அரியூர் மலைக்கோடி நம்பிராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகர் (வயது 25) ராஜாராம் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • காவலாளிகளை தாக்கி விட்டு துணிகரம்
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆற்காடு சாலையோரம் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது.

    இதன் கண்காணிப்பாளராக விஜயகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இங்கு வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை விதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட 42 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பாதுகாப்பு இல்லத்தில் திருட்டு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சென்னையை சேர்ந்த சிறுவன் கடந்த 25-ந் தேதி தன்னை வேறு இல்லத்துக்கு மாற்றக்கூடாது என்று கூறி கட்டிடத்தின் மேலே ஏறி ரகளையில் ஈடுபட்டான்.

    மேலும் அங்குள்ள வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., மின்விளக்குகளை கம்பால் அடித்து உடைத்தான்.

    இளஞ்சிறார் நீதித்துறை நீதிக்குழும நீதிபதி பத்மகுமாரி சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து அவன் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கி வந்தான். இதுதொடர்பாக பாதுகாப்பு இல்ல அலுவலர்கள் மற்றும் சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் வழக்கம்போல் இல்ல பாதுகாப்பு பணியில் குமரவேலு, பிரபு உள்பட 3 காவலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டிடத்தின் மேல் ஏறி ரகளையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட

    சென்னையை சேர்ந்த 2 பேர், திருவள்ளூரை சேர்ந்த 2 பேர், சேலம் மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 2 பேர் என்று மொத்தம் 6 பேர் அறையை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் திடீரென கை மற்றும் கட்டையால் சரமாரியாக காவலாளி குமரவேலை தாக்கினர்.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு மற்ற 2 காவலாளிகளும் அங்கு விரைந்து சென்றனர். அவர்களையும் 6 பேரும் சரமாரியாக தாக்கி விட்டு பின்னர் பின்பக்க சுற்றுச்சுவரில் ஏறி குதித்து தப்பியோடினார்.

    இதில், காயமடைந்த காவலாளிகள் இதுகுறித்து இல்ல கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு செல்போனில் புகார் கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர்.

    பஸ்நிலையங்கள், ரெயில்நிலையங்கள், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். வேலூர் மாநகர பகுதி முழுவதும் நேற்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.ஆனாலும் சிறுவர்கள் பிடிபடவில்லை. தப்பி ஓடியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    6 பேரில் 4 பேர் ஆட்டோவில் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் ரெயில் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    எந்த ரெயிலில் ஏறி தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து கண்டறிய காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் 2 சிறுவர்கள் பஸ்சில் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    தப்பி ஓடிய சிறுவர்களின் சொந்த ஊர்களிலும் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அரசு பாதுகாப்பு இல்லத்தில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வருகிற 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்க தேர்வு நடக்க உள்ளது
    • அதிகாரிகள் முன்னிலையில் வினாத்தாள்கள் சரிபார்க்கப்பட்டன

    வேலுார்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, வருகிற 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக, அரசுத் தேர்வுகள் துறை மூலம் வினாத்தாள்கள் தயார் செய்து அச்சிடப்பட்டு, மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

    வேலுார் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வினாத் தாள்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளிக்கு நேற்று வந்து சேர்ந்தது.

    இதைத்தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் முன்னிலையில், வினாத்தாள்கள் பாதுகாப்பாக இறக்கி வைத்து சரிபார்க்கப்பட்டன.

    தொடர்ந்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 வினாத் தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு, வினாத்தாள் பண்டல்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வினாத்தாள்கள் வைக்கப்பட்டு அறைகளுக்கு 'சீல்' வைத்து, 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    மேலும், இந்த 8 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களிலிருந்து, 21 வழித்த டங்கள் மூலம், தேர்வின்போது 104 தேர்வு மையங்களுக்கு தேவையான வினாத்தாள்கள், போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர்.

    • நிலத்தை அளந்து கொடுக்காததால் ஆத்திரம்
    • மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    குடியாத்தம் அடுத்த மேல் சேம்பள்ளியை சேர்ந்த பழனி கார்த்திகேயன் ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து கொடுக்க கோரி 2 ஆண்டுகளாக மனு கொடுத்தும் இதுவரை நிலத்தை அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி சகோதரர்கள் இருவரும் காயிதே மில்லத் அரங்கம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர்.

    குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, பேரணாம்பட்டு அடுத்த செண்டத்தூரில் அரசு பள்ளி கூட்டுறவு வங்கி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள பகுதியில் 3 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் வங்கி மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்கின்றனர். எனவே டாஸ்மாக்களே அகற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

    • கல்வி, மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவிதொகை வழங்கினர்
    • மேற்படிப்பு படிக்க உதவி

    வேலூர்:

    நடிகர் ரஜினிகாந்த் 47 ஆண்டாக கலைத்துறையில் சேவையாற்றி தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26-ந்தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணத்தால் ரத்து செய்யப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.ரவி அப்போது வெளியிட்ட அறிக்கையில் தேர்ந்தெடு க்கப்பட்ட பயனாளி களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    அதனடிப்படையில் ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    ேவலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 5 பேருக்கு இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது. நேற்று கிரகப்பிரவேஷம் செய்து அதற்கான சாவியை பயனாளிகளுக்கு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற செயலாளர் சோளிங்கர் என்.ரவி வழங்கினார்.

    வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து கொடுத்து ள்ளனர். கணவனால் கைவிட ப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட ஊதுவத்தி தயாரிக்கும் எந்திரம், 2 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இட்லி மாவு அரைக்கும் எந்திரம், தையல் எந்திரம் 5 பேருக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த 15 மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு 3 சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. 2 பேருக்கு கறவை மாடுகள் வழங்கினர்.

    நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினிகாந்த்துக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கேட்டுக் கொண்டனர்.

    • 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானாது
    • இரவு சாரல் மழை பெய்தது

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சாதாரணமாக 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகும்.

    ஆனால் இந்த ஆண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெயிலின் தாக்கம் இல்லாமல் மழையால் இதமான காலநிலை நிலவியது. மார்ச் மாதம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இப்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று வேலூர் மாவட்டத்தில் 95.5 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பொதுமக்கள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானாலும் இரவு 8 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் பகலில் இருந்த வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

    ×