என் மலர்
நீங்கள் தேடியது "The heat exceeded 100 degrees"
- வேலூரில் இந்தாண்டு முதல்முறையாக சதத்தை தொட்டது
- அனல் காற்று வீசியது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாவட்டங்களை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
மே மாதம் கத்திரி வெயில் சமயத்தில் வேலூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் அளவு பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சதம் அடித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. தினமும் சிறிது சிறிதாக அதிகரித்த வெயில் நேற்று முன்தினம் 95.5 டிகிரி பதிவானது.
இந்த நிலையில் நேற்று வழக்கத்தை விட வெயிலின் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. காலை 10 மணியளவிலேயே உச்சி வெயிலை போன்று சுட்டெரித்தது.
மதியம் 12 மணியளவில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது. இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று வெயில் சதம் அடித்தது. 100.4 டிகிரி பதிவானது.
சுட்டெரித்த வெயிலால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
அதேபோன்று குறைவான வாகனங்களே சாலையில் சென்றதையும் காண முடிந்தது. இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தள்ளுவண்டி கடைகளில் தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு, அன்னாசி பழங்களின் விற்பனையும் களைகட்டியது.
பகல் வேளையில் அனல் காற்று வீசியதால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மதிய வேளையில் குடிநீர் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சூடாக இருந்தது. காலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மின்விசிறியில் இருந்து வந்த காற்றும் அனலாக இருந்தது.
அதனால் பொதுமக்கள் உறங்க முடியாமல் சிரமம் அடைந்தனர். கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
நாட்கள் செல்ல செல்ல மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.






