என் மலர்tooltip icon

    வேலூர்

    • காட்பாடியில் இன்று நடந்தது
    • உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் மாவட்ட வெல்லம் வியாபாரிகள் தர்ம ஸ்தாபனம், வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து 20-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. இந்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காட்பாடி காந்திநகரில் உள்ள ஆதிலட்சுமி தெய்வசிகாமணி திருமண மண்டபத்தில் நடக்

    கிறது. முகாமில் கண்பார்வை குறைபாடு, கண்புரை ஆகியவற் றுக்கு பரிசோதனை செய்யப்படும். கண்புரை நோயாளிகள் முகாம் நடைபெறும் அன்றே சென்னை பூந்தமல்லியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படு வார்கள். அவர்களுக்கு விழிலென்ஸ், மருந்து, தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவு அனைத்தும் இலவச மாக வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் கே.கோவிந்த ராஜுநாயுடு, ஆர்.ஜி.தர்மராஜ், வி.நரசிம்மன், டி.ராஜேந்திரன், டி.பாலமுரளி, கே.ஆர்.விஜயன், சி.குமரவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    • 500 போலீசார் குவிப்பு
    • எந்த பொருட்களும் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடு

    வேலூர்:

    வேலூரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. சலவன் பேட்டையில் உள்ள ஆனை குலத்தம்மன் கோவிலில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை 3 மாநில சேவா தள அமைப்பாளர் பத்மகுமார் தொடங்கி வைக்கிறார்.

    ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஊர்வலம் ரெட்டியப்பா முதலி தெரு, கண் ஆஸ்பத்திரி, திருப்பதி தேவஸ்தானம் வழியாக வந்து அண்ணா கலையரங்கத்தில் நிறைவடைகிறது.

    மாலை 6 மணிக்கு மேல் பொது கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை யொட்டி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊர்வலம் நடைபெறும் பாதை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும். மற்றபடி எந்த பொருட்களும் தங்களுடன் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பெங்களூரில் இருந்து ஜெனரேட்டர் ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்னை துறைமுகத்திற்கு சென்று கொண்டு இருந்தது.

    வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்தபோது கலெக்டர் அலுவலகம் அருகே பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த ஜெனரேட்டர் கீழே விழுந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து கிரேன் மூலம் லாரி மற்றும் ஜெனரேட்டரை மீட்டு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மும்பை விக்டோரியா துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 66 பேர் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா முழுவதும் மீட்பு பணியின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த ஒரு வார காலமும் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சி என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன.

    அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை மாரத்தான் போட்டி நடந்தது. இந்த மாரத்தான் போட்டியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர்கள் முகுந்தன், பழனி, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிக்கை வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    10 கிலோ மீட்டர் தூரம் நடந்த மாரத்தான் போட்டி தீயணைப்பு நிலையத்தில் தொடங்கி புதிய மாநகராட்சி அலுவலகம், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி மத்திய சிறை, பாகாயம் வழியாக சென்று மீண்டும் ஓட்டேரி, விருப்பாட்சிபுரம், வேலப்பாடி வழியாக வந்து தீயணைப்பு நிலையத்தில் நிறைவு பெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெணகள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுகளும், கேடயங்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து வேலூர் காங்கிரஸ் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்கா ராமன் தலைமையில் காங்கிரசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் போராட்டத்திற்கு எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில செயலாளர் சித்தரஞ்சன் முன்னிலை வகித்தார்.

    சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்தும், ஒரு சில கட்சி நிர்வாகிகள் ரெயிலின் மீது ஏறி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் காட்பாடி போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    இதனால் ரெயில் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. மறியலில் மண்டல தலைவர் ரகு ஐ.என்.டி. யு.சி மாவட்ட தலைவர் பிரேம்குமார், பொது குழு உறுப்பினர்கள் கப்பல் மணி கணேஷ் மனோகர் மதியழகன் ஹரி இளங்கோ வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் சரக டி.ஐ.ஜி. பேச்சு
    • போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

    வேலூர்:

    வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெற்றி தமிழா என்ற தலைப்பில் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்திய தொல்பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் ராம செல்வம் தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கலந்துகொண்டு பேசியதாவது, நான் படிப்பறிவு இல்லாத ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வந்தவன். கல்வி கற்கும் வாய்ப்பு இல்லை என்றால் நான் இங்கு இல்லை. கல்லூரி காலத்தை மாணவ மாணவிகள் வீணாக்கக்கூடாது.

    3 ஆண்டுகள் நீங்கள் படிக்கும் கல்விதான் வருங்காலத்தில் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கும். பல ஏழை எளிய மாணவர்கள் படித்து வருவீர்கள்.

    இலக்கு நிர்ணயித்து படிக்க வேண்டும். அனைவராலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆகிவிட முடியாது. ஆசிரியர், போலீஸ், ராணுவ வீரர், தொழிலதிபர், விவசாயி என்று எதுவாக வேண்டு மானாலும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

    கல்லூரி காலத்தில் அறிவு, தலைமைப் பண்பு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். 3 ஆண்டு படிப்பை முடித்து வெளியே செல்லும்போது தகுதி உள்ளவர்களாக உங்களை மாற்றி கொள்ள வேண்டும் என்றார்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • குறைந்த செலவில் செய்வதற்கு பாராட்டு தெரிவித்தார்

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் நாராயணி ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கருத்தரிப்பு மையம் திறப்பு விழா இன்று நடந்தது.

    ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் கீதா ராணி வரவேற்புரை ஆற்றினார். நாராயணி மருத்துவ மனை இயக்குனர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கி பேசியதாவது, இந்த கருத்தரிப்பு மையத்திற்கு வரும் ஏழை எளிய பெண்களுக்கு மாதத்திற்கு 4 முதல் 5 பேருக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என்றார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    உணவு பழக்க வழக்கம் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு காரணமாக பெண்களுக்கு குழந்தையின்மை ஏற்படுகிறது.

    குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டும் காரணம் இல்லை ஆண்களும் தான். குழந்தையின்மையினால் கணவர் மனைவியை விவாகரத்து செய்வது, கொடுமைப்படுத்துவது, உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் ஏளனமாக பேசுவது உள்ளிட்டவை நடக்கிறது.

    மேலும் குழந்தை இல்லாத பெண்களின் கணவர்கள் 2-வது திருமணம் செய்து கொள்கின்றனர். ஒருபுறம் குழந்தை இல்லாததால் பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மறுபுறம் குழந்தையை பெற்ற தாய்மார்கள் குழந்தையை சாலை ஓரங்களில் வீசி செல்லும் கொடுமை நடந்து வருகிறது.

    குழந்தை வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கின்றனர். குழந்தையின்மைக்கு தற்போது மருத்துவ உலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் பெண்களுக்கு கருத்தரிப்பு செய்கின்றனர். இந்த மையத்தில் குறைந்த செலவில் கருத்தரிப்பு செய்வது பாராட்டத்திற்குரியது என்றார்.

    • ஜெயில் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
    • மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம்

    வேலூர்:

    தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள் உட்பட 142 சிறைகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைத்துறை டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பதவி ஏற்ற பின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சட்டசபையில் நடந்த கூட்டத்தின் போது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என தெரிவித்து இருந்தார்.

    அதன்படி நேற்று சென்னை புழல் சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை டிஜிபி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார். கொரோனா காலத்தில் கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலூர் ஆண்கள் சிறையில் ஏற்கனவே வீடியோ கால் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் வேலூர் பெண்கள் தனி சிறையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ கால் பேசும் வசதியை வேலூர் சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    பெண் கைதிகள் தங்களது உறவினர்களிடம் 3 நாளைக்கு ஒருமுறை 12 நிமிடங்கள் பேசலாம். அல்லது மாதத்திற்கு 10 நாட்கள் பேசலாம் என்பதற்கு ஏற்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    • 3 பேர் கைது
    • சி.சி.டி.வி. கேமரா மூலம் போலீசார் மடக்கி பிடித்தனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு கணக்கர் தெருவை சேர்ந்தவர் பிரதீப்குமார் இவரது மகன் காமேஷ் (வயது 23). இவர் பால்வண்டி டிரைவராக உள்ளார்.

    காமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல தனது நண்பரின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பரதராமிக்கு வந்துள்ளார்.

    பரதராமியில் உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். குடியாத்தம் அடுத்த ராமாலை கிராமம் அருகே வரும்போது மகேசை தடுத்து நிறுத்திபோலீஸ் எனக்கூறி ஒருவர் குடியாத்தம் அழைத்து வந்து சிலருடன் சேர்ந்து கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி மோட்டார் சைக்கிள் செல்போன் 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மேலும் 30 ஆயிரம் கொண்டு வந்து தருமாறும் இல்லை என்றால் கஞ்சா வழக்கு போட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதனையடுத்து காமேஷ் உறவினர்களுக்கு தெரிவித்து அவர்களுடன் காவல் நிலையத்திற்கு வந்து விசாரித்த போது நாங்கள் யாரும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

    அப்போது போலீஸ் என கூறி காமேசை ஏமாற்றி மோட்டார் சைக்கிளைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காமேஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன்,சிலம்பரசன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தனிப்படை யினருக்கு போலீஸ் என மிரட்டி பறித்து சென்ற மோட்டார் சைக்கிளுடன் இருவர் குடியாத்தம் சித்தூர் கேட்பகுதியில் வந்து கொண்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பறித்து சென்ற மோட்டார் சைக்கிளில் இருவர் வந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சீனிவாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர்

    தான் கடந்த செவ்வாய்க்கிழமை ராமாலை அருகே மகேசை மடக்கி திருட்டு மோட்டார் சைக்கிள் என கூறியது தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மாதனூரைச் சேர்ந்த கிரி (22), மோகன்குமார் (27) என தெரியவந்தது.

    இதில் மோகன்குமார் போலீஸ் என கூறியதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த உள்ளி மேம்பாலம் அருகே கார் மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவத்தில் தம்பதியை பட்டாக்கத்தி காட்டி மிரட்டிய சம்பவத்தில் குடியாத்தம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.

    அந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை விற்பதற்காகவும் அதனை விற்க மனோஜை உடன் அழைத்துச் செல்ல வந்த போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் 1500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 308 பெண்கள் பங்கேற்றனர்
    • சிறப்பு தீபாராதனை நடந்தது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.

    மேலும் 308 பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    விழாவையொட்டி உற்சவர் எல்லையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கணபதி ஹோமம், வரலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல், ஆடை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் பூஜை நிறைவடைந்ததும் சிறுமிகள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை குமார் தேன்மொழி குடும்பத்தினர் மற்றும் கோவில் செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி செய்திருந்தனர்.

    • மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    • காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்க்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    • பாதுகாப்பு இல்லத்தில் சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மற்றும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் சிலர் கட்டிடத்தின் மேலே ஏறி தங்களை ஜாமீனில் வெளியே விடும்படி ரகளையில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 6 சிறுவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகளை தாக்கி விட்டு சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். ஒருவர் சேலத்தில் சரண் அடைந்தார். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இல்லத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு இல்லத்தில் சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் மற்றும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் அதே பாதுகாப்பு இல்லத்தில் 5 சிறுவர்கள் சுற்றுச்சுவர் ஏறி குதித்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து அதே இல்லத்தில் மீண்டும் அடைத்தனர்.

    இதற்கிடையே இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் சிலர் கட்டிடத்தின் மேலே ஏறி தங்களை ஜாமீனில் வெளியே விடும்படி ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் தப்பி ஓடிய 5 சிறுவர்கள் மீதும், ரகளையில் ஈடுபட்ட 7 பேர் மீதும் வேலூர் வடக்கு போலீசில் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்பேரில் 12 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×