என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கரையான்செட்டி தெருவை சேர்ந்த மாணவி ஒருவர் மகாபலிபுரத்தில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிவிடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கொரோனா விடுமுறை காலங்களில் தனது வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்ற மாணவி அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தார்.
இதுபற்றி அறிந்த விடுதி வார்டன் செண்பகவள்ளி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாணவியை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் "உனது வயிற்று வலிக்கு என்ன காரணம்?" என்று கேட்டபோது, பதில் சொல்ல மறுத்த மாணவி, எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது டாக்டர்கள் செய்த பரிசோதனையில் மாணவி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப்பதிவு செய்து மாணவி படித்து வந்த உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு சுய நினைவு திரும்பியது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் தனது கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் பெயரை எழுதிக் காண்பித்தார்.
இதைத்தொடர்ந்து மாணவி வசித்துவரும் தெருவில் குடியிருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 31) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. ஹரிபிரசாத் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் தன்னிடம் நட்பாக பழகிய மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கைதான ஹரிபிரசாத் காதல் திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானது குறித்து குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்துக்காக விடுதி வார்டன் செண்பகவள்ளி, மற்றும் தலைமை ஆசிரியர் குமரகுருபரன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் இறப்பு ஏற்பட்டால் வடகரை நம்மியந்தல் மாதா கோவில் வழியாக பிணத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலனி பகுதியில் பெண் ஒருவர் இறந்தார். சுடுகாட்டு பாதை தற்போது சரியில்லை. அதனால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு பகுதியில் இறந்த பெண்ணின் பிணத்தை எடுத்து செல்ல முடிவு செய்திருந்தனர்.
இதற்கு வீரளூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து சென்றால் பல்வேறு பிரச்சனைகள் எழும் எனவே தற்போது செல்லும் பாதையிலேயே செல்லட்டும் என்று கூறினர்.
மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மறியல் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், ஆரணி கோட்டாட்சியர் கவிதா, கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் நள்ளிரவில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நடந்தது.
அப்போது சுடுகாட்டு பாதை விரைவில் சீரமைக்கப்படும். அதுவரை மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று இறந்த பெண் உடல் மெயின் ரோடு வழியாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.






