என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    400 ஆண்டு பழமையான கல்வெட்டை படத்தில் காணலாம்.
    X
    400 ஆண்டு பழமையான கல்வெட்டை படத்தில் காணலாம்.

    சிங்களர்கள் வென்றதை குறிப்பிடும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

    தண்டராம்பட்டு அருகே சிங்களர்களை வென்றதை குறிப்பிடும் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம் என்னும் ஊரில் உள்ள வயல்வெளியில் அண்ணா மலையார் கோவிலுக்கு தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து கள ஆய்வு செய்த பொழுது, திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் ஆதிசிவன் கோவிலுக்கு எதிரே உள்ள வயல்வெளியின் மத்தியில் வேப்பமரத்தின் கீழ் பலகை கல் ஒன்று இருப்பதைக் கண்டு, அங்குள்ள மக்களிடம் விசாரித்த பொழுது, அது பலகாலமாக மண்ணில் விழுந்து கிடந்ததாகவும், சில வருடங்கள் முன் அதனை எடுத்து மரத்தின் கீழ் நிறுவியதாகவும் தெரிவித்தனர்.

    மண்ணில் பலவருடம் இருந்ததால், கற்பலகை மிகவும் அரித்து கருப்பாகக் காட்சி தந்தது. அதனைச் சுத்தம் செய்து பார்க்கையில் விஜயநகர காலத்திய எழுத்து தென்பட்டது.

    சுமார் 5 அடி உயரமும் 3 அகலமும் கொண்ட இப்பலகை கல்லில் முதல் பாதியில் இடது புறம் சூரிய சந்திரருடன் திருவண்ணாமலை கோயிலுக்குத் தரப்பட்ட தானத்தைக் குறிக்கும் சோணாசலகிரியும், நடுவில் சூலம் மற்றும் வலது புறத்தில் இரு குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது. இதற்குக் கீழ் உள்ள மீதி பாதியில் 16/ 17ம் நூற்றாண்டின் எழுத்தமைதியில் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது.

    கல்வெட்டு செய்தி : ஸ்ஸ்ரீ எனத் தொடங்கும் இக்கல்வெட்டு சோழர் களையும் சிங்களவர் களையும் வென்றதாக வெற்றி செய்தியைக் குறிப்பிட்டு "இராவிந குமாரர் வேங் இராச" என்பவர் வக்கையூர் என்ற ஊரைத் தானமாக அளித்து அதன் மூலம் அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை நாச்சியாருக்கும் அர்த்தசாம கட்டளைக்கு 30 பாக்கும் 20 வெற்றிலையும் அடங்கிய அடைகாய அமுது அளித்துள்ளார். இதனை நிறைவேற்ற அவ்வூரைச் சேர்ந்த மெய் சொல்லும் பெருமாள் அண்ணாமலையார் என்னும் மாகேஸ்வரரை நியமித்துள்ளார்.

    இக்கல்வெட்டில் பெரும் பாலான வார்த்தைகள் பாதி சொற்களாக இருப்பதோடு மன்னர் பெயர் மற்றும் காலம் தெளிவாகத் தரப்படவில்லை. எனினும் இக்கல்வெட்டில் பயின்று வரும் "வேங்" என்ற சொல்லை வைத்து இதனை வேங்கடபதி மன்னராகக் கருதலாம் என்று இக்கல்வெட்டைப் படித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற மூத்த கல்வெட்டாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

    பிற்கால விஜயநகர ஆட்சியில் இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586&1614) மற்றும் மூன்றாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1632-1642) என்று இருவர் உள்ளனர். மூன்றாம் வேங்கடபதி ராயர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் பெரும் அளவில் வீழ்ச்சி கண்டு முந்நூறு வருட ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரின் காலம் முழுவதும் போரில் கழிந்ததாக வரலாறு கூறுகிறது.

    முதலாம் ஸ்ரீரங்கா ஆட்சியில் பெரிதும் வீழ்ச்சி கண்ட விஜயநகர சாம்ராஜியத்தை மீட்டு எடுத்து விஜயநகர பேரரசின் இரண்டாம் பொன் அத்தியாயத்தை எழுதி சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இரண்டாம் வேங்கடபதி ராயர் (கி.பி 1586-1614) காலத்தில் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்குக் கொடை வழங்கி இருந்தாலும் குறிப்பாகத் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலுக்குப் பல கொடைகள் வழங்கி யுள்ளதை இக்கோவிலில் பதிவாகியுள்ள 9 கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிறது. எனவே இவரின் காலத்தில் தான் இத்தானம் வழங்கி இருக்ககூடும் என்று அனுமானிக்கப்படுகிறது.

    சுமார் 400 வருடம் பழமையான இக்கல்வெட்டு மூலம் திருவண்ணாமலையைச் சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்குக் கொடை பெறப்பட்டது போலவே இவ்வூரிலிருந்தும் தரப்பட்ட தானத்தை அறியமுடிகிறது.
    Next Story
    ×