என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    நுகர்வோர் தங்கள் உரிமைகளை அறிந்து எந்த பொருளையும் விழிப்புணர்வுடன் வாங்குவதே புத்திசாலித்தனம் என கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தார். இதில் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசும்போது கூறியதாவது:-

    நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.

    ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதா? என்பது கேள்விகுறியாக உள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இருந்தபோதிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் பயன் பெறுவார்கள்.வெளிநாட்டவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளது.

    ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த கிராம மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு இல்லை. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிமை என்ன உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போது அவை காலாவதியாகிவிட்டதா?, தரமாக உள்ளதா? என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். 

    கேள்வி கேட்கும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ஏன்?, எதற்கு? என்ற கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதே முதல் விழிப்புணர்வு ஆகும்.

    பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டி, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல் தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை கலெக்டர் பார்வையிட்டு எடையில் ஏமாற்றுதல், உணவு பொருட்களில் கலப்படம் செய்தல் போன்றவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி இல்லாதது விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேத்துப்பட்டு அருகே மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் டாக்டர் பரிதாபமாக இறந்தார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 55). இவரது மனைவி சுகந்தி (50). இருவரும் மகப்பேறு டாக்டர்கள். 

    ஆரணியில் கிளினிக் நடத்தி வருகின்றனர். இவர்களது மகள் சுகன்யா புதுச்சேரியில் டாக்டராக உள்ளார். 

    நேற்று காலை தனது மகளை புதுச்சேரியில் பார்த்துவிட்டு மீண்டும் ஜெயசீலன் மற்றும் சுகந்தி ஆகியோர் காரில் புதுச்சேரியிலிருந்து சேத்துப்பட்டு வழியாக ஆரணி செல்வதற்காக காரில் வந்தனர்.

    காரை டாக்டர் சுகந்தி ஓட்டி வந்தார். கார் சேத்துப்பட்டு அடுத்த கெங்கை சூடாமணியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தத்தனூர் கூட்ரோடு அருகே உள்ள மரத்தில் வேகமாக மோதியது. 

    இதில் டாக்டர் ஜெயசீலன் மற்றும் சுகந்தி பலத்த காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியே மீட்டனர் சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி தீ மளமளவென எரிந்தது உடனே தகவல் அறிந்த சேத்துப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். பின்னர் சேத்துப்பட்டுஅரசு மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் ஜெயசீலன் பிதாபமாக இறந்தார். 

    சுகந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    வெம்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    திருவண்ணாமலை:

    வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் ரோடு தெருவை சேர்ந்தவர் காமராஜி 65 இவர் நேற்று இரவு 9 மணி அளவில் அவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வீட்டுக்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.
     
    அப்போது காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு சென்ற அரசு பஸ் காமராஜி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காமராஜ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆரணியில் பெற்றோரை இழந்து தவித்து வரும் 3 குழந்தைகளுக்கு படிப்பு செலவு, வீடு கட்ட ஆணையை கலெக்டர் வழங்கினார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் டெய்லர். இவரது மனைவி வேண்டா தம்பதியினருக்கு கார்த்திகா (15) சிரஞ்சீவி (14) நிறைமதி (10) 2 மகள் 1 மகன் உள்ளனர்.

    கார்த்திகா அரசு பள்ளியில் 10ம் வகுப்பும் சிரஞ்சீவி 9ம் வகுப்பும் நிறைமதி 6ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். 3 குழந்தைகளை வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்துள்ளார். 

    இந்நிலையில் கடந்த 3மாதம் முன்பு வேண்டா புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதனால் தற்போது கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

    மதியம் நேரத்தில் அரசு பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு வாழ்வதாகவும் இரசு உணவு பகலில் உணவு வழங்க யாரும் இல்லாமல் 3 குழந்தைகளும் தவித்து வருகின்றனர். 

    இதனை அறிந்த கலெக்டர் முருகேஷ் ஆவணியாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று பெற்றோரை இழந்த குழந்தைகளை சந்தித்து 3 குழந்தைகளின் படிப்பு செலவு அனைத்தும் மாவட்ட நிர்வாகமே ஏற்று கொள்ளபடும் என்றும் குடும்பத்தில் இறந்தவர்களின் நிவாரணமாக 22 ஆயிரம் ரூபாய் காசோலை. மேலும் மாதம் தலா 2 ஆயிரம் என 3 குழந்தைகளுக்கு வழங்க ஆணை வழங்கினார். 

    மேலும் வீட்டு மனை பட்டா பூர்வீக சொத்தின் பெயர் மாற்றம் வீடு கட்டும் பணி ஆணை மாவட்ட கல்விதுறை சார்பில் 5 ஆயிரம் ரொக்கம் 3 அரிசி சிப்பம் துணிகள் ஆகியவற்றை கலெக்டர் முருகேஷ் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
    திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் காவலர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி முதல்வருமான அ.பவன் குமார், திருவண்ணாமலை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் பயிற்சி காவலர்களுக்கு காவல் பணி குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்காலிக பயிற்சி பள்ளி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி காவலர்கள் ஆளுக்கொரு மரக்கன்று நடும் வகையில் மொத்தம் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

    இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் சூப்பிரண்டும், தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வருமான எஸ்.ராஜாகாளீஸ்வரன் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.சீனிவாசன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என நகராட்சி தலைவர் பணிதொடக்க விழாவில் எ.வ.வேலு பேசினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் நகரமன்றத் தலைவர், துணைத் தலைவர் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை வாழ்த்தி பேசினார். நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோரின் பணியை தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை நகர மன்றம் பழம்பெருமை வாய்ந்தது. இதற்கு முன்பு 13 பேர் தலைவராக இருந்து பணியாற்றி உள்ளனர். தற்போது முதன்முதலாக பெண் தலைவர் பொறுப்பை ஏற்கிறார். 

    திருவண்ணாமலை வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இங்கு எந்த வார்டும் வளர்ச்சிப்பணியில் புறக்கணிக்கப்படாது. 

    அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒருவரை ஒருவர் பிரித்துக் கொள்ளக்கூடாது. ஒற்றுமையாக மக்களின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்.

    திருவண்ணாமலைக்கு வெளிநாட்டினர், பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள் பலர் வருகின்றனர். எனவே நகரத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கிரிவல பாதையின் சில இடங்கள் சில ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பக்தர்களின் பார்வையில் அது நகராட்சிக்கு உட்பட்ட இடமாக தெரிகிறது. 

    எனவே கிரிவலப்பாதை நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர துறை சார்ந்த அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை வளர்ந்து வரும் நகராட்சியாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகரிப்பாலும் அடிக்கடி தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. இது குறித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அவர் இந்த பிரச்சினையை தீர்க்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்று கேட்டார். நான் ரூ.5,500 கோடி என்று தெரிவித்தேன். 

    உடனடியாக அவர் காவிரி குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. அதில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து நாமும் காவிரி கூட்டுக் குடிநீர் குடிக்க போகிறோம்.

    இந்த திட்டம் செயல்படுத்தும் போது அதை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். ஏனெனில் அதிகாரம் உங்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஜோதி, சரவணன், மு.பெ.கிரி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்த மாதம் பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி) பவுர்ணமி நாட்களான வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

    கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த கார்த்திகை மாத பவுர்ணமி நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தற்போதுதான் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே வருகிற பவுர்ணமி கிரிவல நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    சேத்துப்பட்டில் விஷ்ணு துர்க்கை அம்மன் அய்யப்பசுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழையபேட்டை வந்தவாசி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கை அய்யப்பன் கோவில் பஞ்ச வர்ணம் பூசி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி பூஜை அங்குரார்ப்பணம் வாஸ்து சாந்தி பிரவேச பலி இதைத் தொடர்ந்து 12-ந்தேதி சனிக்கிழமை கோ பூஜை பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 

    பின்னர் கோவிலின் அருகில் யாகசாலை பந்தல் அமைத்து 3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து பல்வேறு நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து சிவாச்சாரியார்கள் பல்வேறு மூலிகைகள் நெய் ஆகியவை மூலம் சிறப்பு யாகங்கள் நடந்தது.

    பின்னர் நேற்று காலையில் மேளதாளங்கள் முழங்க புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமானகோபுரத்தில் உள்ள புனித நீர் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள்.

    பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர். இதில் சேத்துப்பட்டு பழம் பட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு விஷ்ணு துர்க்கை அம்மன் ஐயப்பசுவாமி ஆகிய சுவாமிகள் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சேத்துப்பட்டு பழம்பேட்டை கிராம பொதுமக்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.
    போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கல்குவாரி வாகனங்களை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு.பவன் குமார் தூசி போலீஸ் நிலையத்தில் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது தொழிற் சாலைகளின் பாதுகாப்பு மற்றும் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது குறித்தும், அரசு வகுத்துள்ள விதிமுறை களின்படி குவாரிகளை நடத்த வேண்டும் என்பது குறித்தும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கலந்துரையாடினார்.

    அப்போது தூசி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வந்தவாசி -காஞ்சிபுரம் சாலையில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே குவாரி வாகனங்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் செல்லக் கூடாது என்றும், லாரிகளில் அதிக பாரம் ஏற்றக்கூடாது என்றும், தொழிற்சாலைகளில் வேலை கொடுக்க வேண்டும். 

    மாமுல் கொடுக்க வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுபவர்கள் குறித்து உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், கல்குவாரியினர் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் தூசி போலீஸ் நிலையத்தில் மரக்கன்றை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத் தினார்.
    ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.
    ஆரணி:

    ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டில் நடந்து சென்றார். 

    அப்போது அந்தவழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    ஆரணி தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் வேளையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

    இதனால் பகல்வேளையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 10-ந் தேதி 94 டிகிரியும், 11-ந் தேதி 94.2 டிகிரியும், 12-ந் தேதி 94 டிகிரியும், நேற்று 97 டிகிரியாகவும் பதிவாகியது. 

    வெயிலிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைக ளுக்கு படையெடுக்கின்றனர். மேலும் தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை அதிகரித்துள்ளது.
    பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் தவிக்கும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், வீட்டை பராமரிக்கவும், படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என முதலமைச்சருக்கும், கலெக்டருக்கும் 3 குழந்தைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் டெய்லர், இவரது மனைவி வேண்டா. தம்பதியினருக்கு கார்த்திகா (வயது15), சிரஞ்சீவி (14), நிறைமதி (10) 2 மகள் 1 மகன் உள்ளனர்.

    அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் கார்த்திகா 10-ம் வகுப்பும், சிரஞ்சீவி 9-ம் வகுப்பும், நிறைமதி 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லோகநாதன் நோய்வாய்பட்டு இறந்துவிட்டார்.

    வேண்டா 100 நாள் வேலைக்கு சென்று 3 குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த வேண்டா கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதனால் பெற்றோரை இழந்து நிர்கதியாய் தவிக்கும் கார்த்திகா, சிரஞ்சீவி, நிறைமதி ஆகிய 3 குழந்தைகளும் தங்களின் தட்டை வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கின்றனர்.

    மதிய நேரத்தில் அரசு பள்ளியில் வழங்கும் சத்துணவை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    காலை மற்றும் இரவில் சாப்பாடு கிடைப்பதில்லை. உணவு வழங்க யாரும் இல்லாத நிலையில் தவித்து வருவதாக 3 குழந்தைகள் கண்ணீர் மல்க கூறினர்.

    வீட்டின் அருகில் உள்ளவர்களும் உறவினர்களும் சில உதவிகள் செய்வதாகவும் தொடர்ந்து உறவினர்களிடம் உதவி கேட்க தயக்கமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    அவர்கள் வசித்து வரும் தட்டை வீடு மிகவும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. வீட்டில் எந்தவித பாதுகாப்பு வசதிகள் இல்லை. வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    அவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், வீட்டை பராமரிக்கவும், படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சருக்கும், கலெக்டருக்கும் 3 குழந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழக அரசு உடனடியாக பெற்றோரை இழந்து நிற்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.



    ×