என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்ட காட்சி.
    X
    நுகர்வோர் விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்ட காட்சி.

    நுகர்வோர் தங்கள் உரிமைகளை அறிந்து எந்த பொருளையும் விழிப்புணர்வுடன் வாங்குவதே புத்திசாலித்தனம்- கலெக்டர் முருகேஷ் அறிவுரை

    நுகர்வோர் தங்கள் உரிமைகளை அறிந்து எந்த பொருளையும் விழிப்புணர்வுடன் வாங்குவதே புத்திசாலித்தனம் என கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா முன்னிலை வகித்தார். இதில் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசும்போது கூறியதாவது:-

    நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான்.

    ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதா? என்பது கேள்விகுறியாக உள்ளது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இருந்தபோதிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் பயன் பெறுவார்கள்.வெளிநாட்டவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு உள்ளது.

    ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த கிராம மக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு இல்லை. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிமை என்ன உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். பொருட்கள் வாங்கும்போது அவை காலாவதியாகிவிட்டதா?, தரமாக உள்ளதா? என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். 

    கேள்வி கேட்கும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ஏன்?, எதற்கு? என்ற கேள்வி கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதே முதல் விழிப்புணர்வு ஆகும்.

    பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப்போட்டி, கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல் தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை கலெக்டர் பார்வையிட்டு எடையில் ஏமாற்றுதல், உணவு பொருட்களில் கலப்படம் செய்தல் போன்றவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த நிகழ்ச்சியின்போது விநியோகம் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டிலில் உற்பத்தி செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி இல்லாதது விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×