என் மலர்
திருவண்ணாமலை
- 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
- 86 வழக்குகளுக்கு தீர்வு
செங்கம்:
செங்கம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
செங்கம் சார்பு நீதிமன்ற நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.தாமரை இளங்கோ, குற்றவியல் நீதித்துறை நடுவர் பி.வித்யா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 749 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில் 86 வழக்குகளில் ரூ.66லட்சத்து 89 ஆயிரத்து 397 மதிப்பிலான தாவாக்கள் சமரசம் செய்து முடித்துவைக்கப்பட்டது.
- செங்கம், புதுப்பாளையத்தில் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் பங்கேற்பு
செங்கம்:
75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
அப்போது பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
புதுப்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் உஸ்னாபி தலைமையில் வீடுகள் தோறும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.
அப்போது இளநிலை எழுத்தர் ரமேஷ், பேரூராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
- ஊர்வலமாக சென்றனர்
- 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில்உள்ள ஏ.சி.எஸ் கல்வி குழும பொறியியல் கல்லூரியில் ஏ.சி.சண்முகம் வழிகாட்டுதலின்படி 75வது சுதந்திர தின அணிவகுப்பு விழாவிற்கு பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுகரசு அனைவரையும் வரவேற்றார்.
கலைக்கல்லூரி முதல்வர் சுகுமாரன் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு கல்லூரி குழும செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி, ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி பங்கேற்றார்.
மேலும் பொறியியல் கல்லூரி மைதானத்தில் பாலிடெக்னிக் பள்ளி மாணவ மாணவிகள் கலைக்கல்லூரி உள்ளிட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து ஓரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி கொடியை அசைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உற்சாகத்துடன்தேசிய கொடியை ஏந்தினர்.
பின்னர் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சமி தேசிய கொடியை மாணவர்களுக்கு வழங்கி அணிவகுப்பை தொடங்கி வைத்தார்.
பள்ளி மைதானம் முழுவதும் தேசிய கொடியை ஏந்தி மாணவர்கள் உற்சாகத்துடன் அணிவகுப்பு நடத்தி ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சமர்பணம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், பேராசிரியர் சிவா, பள்ளி கல்லூரி முதல்வர்கள் வையாபுரி, செலின்திலகவதி, ரஞ்சினி, அருளாளன், நிர்வாக அலுவலர் கார்த்திக்கேயன், துணை தாசில்தார்கள் கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முடிவில்பாலிடெக்னிக் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
- 108 பெண்கள் கலந்து கொண்டனர்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைதொடர்ந்து சுமங்கலி பெண்களை வரிசையாக அமர வைத்து வேதம் மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் திருவிளக்கிற்கு குங்கும் அர்ச்சனை செய்தனர்.
இதையடுத்து மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த திருவிளக்கு பூஜையை காண திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
- சப்-கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆரணி சப்-கலெக்டர் தனலட்சுமி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி பழைய பஸ் நிலையம் காந்தி ரோடு மார்க்கெட் வீதி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் பேரணி சென்றடைந்தன.
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் தரணி வருவாய் ஆய்வாளர் வேலுமணி, வி.ஏ.ஒ ஜெயசந்திரன், இளவரசன் உள்ளிட்டபள்ளி மாணவ மாணவிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி சார்பில் இன்று போதை ஒழிப்பு சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையாளர் கே ரகுராமன் முன்னிலை வகித்தார்.
செய்யாறு எம் எல் ஏ ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் திரு திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கோவேந்தன், கார்த்திகேயன், விஜயபாஸ்கர், கங்காதரன், தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், ஆசிரியர்கள் சரவணன், சக்தி நாராயணன், வரதன் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- 14 கிராமங்களில் சோதனை
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, வேளாண்மை விரிவாக்கம் மையம் சார்பில் சேத்துப்பட்டு, வட்டாரத்தில் உள்ள கொளக்கரவாடி, கரைப்பூண்டி, ஓதலவாடி, தச்சம்பாடி, இடையங்குளத்தூர், உலகம்பட்டு, உட்பட 14 கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 22-23 திட்டத்தின் கீழ் உணவு தட்டுப்பாடை குறைப்பதற்கும், தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்காக வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, உள்ளிட்ட 13 துறைகளை உள்ளடக்கி, கிராமப்புறங்களில் உள்ள தொகுப்பு தரிசு நிலங்களை கண்டறிந்து தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்.திட்டத்திற்காக தரிசு நிலங்களை ஆய்வு செய்யும் பணி வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், தலைமையில் நடந்தது.
ஆய்வின் போது இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர்கள் வடமலை, சத்தியமூர்த்தி, சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, வேளாண்மை அலுவலர் இலக்கியா, துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை, உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜாராம், சரவணன் மற்றும் வேளாண் துறை, பொறியல் துறை, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெரணமல்லூர், வேளாண்மை வட்டாரத்தில் உள்ள விளாநல்லூர், எறும்பூர், ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 22-23 கீழ் கிராமப்புறங்களில் உள்ள தொகுப்பு தரிசு நிளங்களை சாகுபடி நிளங்களாக மாற்றும் திட்டம் குறித்து வேளாண் துறை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம், கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது இணை இயக்குனர் பாலா, துணை இயக்குனர்கள் வடமலை, சத்தியமூர்த்தி, வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை துறையினர், பொறியியல் துறையினர், உடன் இருந்தனர்.
- 18 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா வயலூர் கிராமத்தில் முனீஸ்வரன், பூவாடை காரியம்மன், சப்த கன்னிமார்கள், ஆகிய கோவில்கள் புதியதாக கட்டப்பட்டு, பஞ்சவர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, 5யாக குண்டங்கள் அமைத்து.கடந்த 9ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஓமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, லட்சுமி பூஜை, ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் சிறப்பு யாகங்கள் செய்தனர். நேற்று காலை மேளதாளத்துடன் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள முனீஸ்வரன், சிலை மீது புனித நீரை அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர தீப ஆராதனை காண்பித்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.
- போதை ஒழிப்பு குறித்து நடந்தது
- மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சி மற்றும், வந்தவாசி ரோட்டரி சங்கம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அப்போது பேரணியில் நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற உறுப்பினர்கள், வந்தவாசி ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிள்களில் ஊர்வலமாக விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
இதையடுத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியானது வந்தவாசி தேரடி பகுதியில் இருந்து தொடங்கி காந்தி சாலை பிராமினர் தெரு, பழைய பஸ் நிலையம், பஜார் சாலை வழியாக முடிவடைந்தது.
வந்தவாசி நகராட்சி, ரோட்டரி சங்கம், வந்தவாசி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இணைந்து போதை பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தினர்.
- புதிதாக கால்வாய் கட்டும் பணி நடைபெற்றது
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி :
ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கிராம தேவதை பூவாடையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ரூ. 1லட்சத்து 84 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய பக்க கால்வாய் பணி நடைபெற்று தற்போது கிராம தேவதை பூவாடையம்மன் கோவில் வளாகம் அருகாமையில் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் அமைத்தது.
இதனை கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகில் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அமைப்பதை அகற்ற கோரி திடிரென சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்த வந்த ஊராட்சி மன்ற நிர்வாகம் கோவில் அருகாமையில் அமைக்கும் உறிஞ்சி குழியுடன் கூடிய பக்க கால்வாய் அகற்றி மாற்று இடம் தேர்வு செய்யபடும் என உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உடன் வந்தவர்கள் சிரமத்துடன் தூக்கிச் சென்ற அவலநிலை
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வந்தவாசி:
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெறும் என திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த முகாம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. முகாம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டது குறித்து எந்த முன்னறிவிப்பும் மாற்றுத் திறனாளிகளுக்கு தெரிவிக்க ப்படவில்லையாம்.
இதனால் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு காலை மாற்றுத் திறனாளிகள் வரத் தொடங்கினர். அங்கிருந்த போலீஸார் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதாக கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் கூறியதாவது:-
அலைகழிப்பு
நாங்கள் எங்கள் ஊரிலிருந்து பெரும் சிரமப்பட்டே முகாமில் பங்கேற்க வருகிறோம். எங்களால் தனியாக வர இயலாததால் உடன் ஒருவரை அழைத்துக் கொண்டும் வருகிறோம். ஆனால் இங்கு வந்தால் முகாம் நடைபெறும் இடத்தை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர்.
எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் முகாம் இடத்தை மாற்றினால் நாங்கள் என்ன செய்வது. மீண்டும் இங்கிருந்து நடந்தோ, ஆட்டோவிலோ சுமார் அரை கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.
அரசின் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு நாங்கள் வந்தால், எங்களை அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.
எங்களை அலைக்கழித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் முகாமிலும் சரிவர ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்தனர். சக்கர நாற்காலி வசதி சரிவர செய்து தரப்படாததால் நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளை உடன் வந்தவர் சிரமத்துடன் தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டதாக முகாமிலிருந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணியிடம் அவர்கள் புகார் கூறினர்.
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
- மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியினை வாசிக்க மாணவர்கள் அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
போதைப் பொருட்கள்
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு எதிராக ஒரு ஜனநாயக போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம், ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.
ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற முடியும். ஒழுக்கமாக இருப்பவர்கள்தான் வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறார்கள் வரலாறும் அதையேதான் நமக்கு உணர்த்தி இருக்கிறது.
ஒழுக்கமாக இருப்பவர்கள்தான் விஞ்சானியாக, மருத்துவராக பல்வேறு உயர் பதவிகளை அடைய நமக்கு வழிகாட்டுகிறது. சமூகத்தில் பல்வேறு நிலைகளில் இந்த போதைப் பொருட்கள் மக்களை ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நமது வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒருவன் பணத்தை இழந்தால் சம்பாதித்துக்கொள்ள முடியும் ஆனால் வாழ்க்கையை இழந்தால் சம்பாதிக்க முடியாது.
போதைப் பழக்கத்தால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து உள்ளது. போதைப் பழக்கத்தால் நாம் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் இழந்து இருக்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்கப்படுவது இல்லை என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் பெற்றோர்கள் பல்வேறு துன்பங்களை சத்தித்து, பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என நினைத்து நினைத்து உயர்ந்த கனவுகளுடன் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
போதைப் பழகத்தில் அவர்களின் கனவுகள் சிதைந்து விடக் கூடாது. நமது திருவண்ணாமலை மாவட்டம் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்துவது மற்றும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் முன்னனியில் இருக்க வேண்டும்.
போதை என்பது ஒரு தனிநபர் பிரச்சனையல்ல அது ஒரு சமுதாய பிரச்சனை போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள், சாதி வன்முறைகள் என பல்வேறு சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்கைள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ளவேண்டும்.
தமிகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவில் பல்வேறு மாநிலத்திற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது, தமிழ்நாடு அரசு 180 நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று செல்ல ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
அதுபோல போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க முதல்வர் அவர்கள் நினைக்கிறார்கள். திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக இருப்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பொது மக்கள் வருகிறார்கள். அதனால் நமது காவல்துறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் போதைப் பொருட்கள் தடுப்பதற்கு காவல்துறை இரவில் ரோந்து பணியில் மேற்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரிடம் கிரிவலப்பாதைக்கு என தனியாக காவல் நிலையம் வேண்டும் என மனு அளித்து இருக்கிறேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கும் எந்த நிலையிலும் போதைப் பொருட்கள் நுழைய முடியாது என்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை மட்டும் பொறுப்பு அல்ல பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.
ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை பக்குவப்படுத்த முடியும். பள்ளி பள்ளி ஆசிரியர்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் திருவண்ணாமலை மாவட்டம் வரும் காலத்தில் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முன்னின்று பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்கா கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேசமூரத்தி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






