என் மலர்
திருவள்ளூர்
- எண்ணூர் வ.உ.சி. நகர், 7- வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற ஜாகீர் உசேன் பிரபல ரவுடி.
- கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
எண்ணூர், வ.உ.சி. நகர், 7- வது தெருவை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற ஜாகீர் உசேன் (வயது 32). பிரபல ரவுடி.
இவர் மீது பல்வேறு வழக்குகள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. தற்போது ஜாகிர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ஜாகிர் உசேன் அதே பகுதி காமராஜர் நகர், 7-வது தெருவில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது 6 பேர் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜாகீர் உசேன் ஓட்டம் பிடித்தார்.
ஆனாலும் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம், கை கால்களில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே கொலைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொலைகுறித்து தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜாகிர் உசேனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக கார்த்திக் என்ற அட்டு கார்த்திக், அருண்குமார், ரமேஷ்குமார், கிஷோர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் முக்கிய குற்றவாளியான பாம் ராஜேஷ்,நிஜாமுதின் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் சிக்கினால் தான் முன்விேராதத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரிய வரும். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்தனர்.
- கொள்ளை சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பூங்காநகர் ஆவாரம் பூ தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட மகளை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கேயே இருந்தனர்.
இந்த நிலையில் கேசவனின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம கும்பல் டி.வி., ஒரு பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
- சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் தாமோதரனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார்.
திருவள்ளூர்:
தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்களின் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.176-ல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிந்துள்ளது.
இதில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் தாமோதரனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார். மேலும் அவருக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை 100 சதவீதம் இணைக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மீஞ்சூர் அடுத்த நாலூர், ஞாயிறு ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்.
- பட்டா சிட்டா முதியோர் உதவித்தொகை ஆதார் எண் இணைப்பு இதர மனுக்கள் உள்ளிட்ட 180 மனுக்கள் பெறப்பட்டன.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த நாலூர், ஞாயிறு ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பட்டா சிட்டா முதியோர் உதவித்தொகை ஆதார் எண் இணைப்பு இதர மனுக்கள் உள்ளிட்ட 180 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. இதில், மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், சேர்மன் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், தலைவர் சுஜாதா ரகு, துணைத்தலைவர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
- கிராமங்களில் வாகனங்களில் வரும் மர்ம கும்பல் வீடுகளில் ஆடுகளை குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த ஆவூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் மதிவாணன், அஸ்வந்த், சீதாபதி.இவர்களது வீடுகளில் இருந்து மொத்தம் 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பொன்னேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாகனங்களில் வரும் மர்ம கும்பல் வீடுகளில் ஆடுகளை குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
- திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையெடுத்து இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருவேற்காடு பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (24), சுரேந்தர் (26) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுக்குறித்து அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலங்களாக பிரித்து அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர், யாருக்கெல்லாம் விநியோகித்தனர், இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து திருவேற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை இயக்குனர் அபாஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் திருவள்ளூர் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனம் சாலை ஓரத்தில் ஆளில்லாமல் கேட்பாரற்று நின்றது. அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1100 கிலோ தமிழக அரசின் இலவச ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 1100 கிலோ ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி திருவள்ளூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் சோதனை சாவடியில் போலீசாரை பார்த்ததும் டிரைவர், ரேசன் அரிசியுடன் வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. அந்த வாகனம் யாருடையது? ரேசன் அரிசியை கடத்தி சென்றது யார் என்று போலீசார் தேடி வருகிறார்கள்.
- சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
- சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ரெயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னையில் இருந்து வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வரும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.
இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த பயணிகள் மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் மின்சார ரெயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் வேலைக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
இதையடுத்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை ரெயில்வே என்ஜினீயர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.
இதையடுத்து அனைத்து ரெயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
குறித்த நேரத்திற்கு ரெயில்கள் வராததால் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் தவிப்புடன் காத்திருந்தனர்.
- கஜேந்திரன் இன்று அதிகாலை கடலுக்கு படகில் மீனவர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார்.
- கஜேந்திரன் கடலுக்குள் செல்லும்போது திடீரென படகிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட வைரவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். மீனவர். இவர் இன்று அதிகாலை கடலுக்கு படகில் மீனவர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். கடலுக்குள் செல்லும்போது திடீரென படகிலேயே மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனால் படகில் சென்ற சக மீனவர்கள் அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்.
பின் மேல் சிகிச்சைக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது கஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் டவுன் போலீசார் திருவள்ளூர் நகரை சுற்றி இருக்கும் 4 டாஸ்மாக் பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
- கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
டாஸ்மாக் பார்களில் அரசு அறிவித்த நேரத்தை தாண்டி மற்ற நேரங்களிலும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்தி ரதாசனுக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் பேரில் இன்று காலை 8 மணி அளவில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் டவுன் போலீசார் திருவள்ளூர் நகரை சுற்றி இருக்கும் 4 டாஸ்மாக் பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இதில், கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
ஆரணி அடுத்த பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவரது மகன் தனசேகரன். இருவரும் இருசக்கர வாகனத்தில் பொன்னேரி எல்.என்.ஜி. கல்லூரிக்கு சென்று தனசேகரனை கல்லூரியில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வரும்போது பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குன்னமஞ்சேரி அருகில் வரும்போது ஏலியம்பேட்டில் இருந்து பொன்னேரி வந்து கொண்டிருந்த டிராக்டர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பாஸ்கர் தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். லேசான காயத்துடன் தனசேகரன் தப்பினார். அருகில் உள்ளவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்சில் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியில் பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். மகனை கல்லூரியில் படிக்க வைக்க சென்றபோது பரிதாபமாக தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
- ஓரிரு நாட்களில் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சுமார் 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் வந்து செல்லும் பொது வழிப்பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்தும், உடனடியாக தீண்டாமை சுவரை அகற்றக் கோரியும் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் கடந்த 12-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது அவர்கள் தாசில்தார் அருண் குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ஓரிரு நாட்களில் சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இந்தநிலையில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வயலட் ஆகியோரின் முன்னிலையில் சுமார் 200 மீட்டர் நீளம், 5 அடி உயரம் கொண்ட தீண்டாமை சுவர் இடித்து அகற்றப்பட்டது. இதனை அறிந்து ஏராளமான மலைவாழ் மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் இனிப்புகள் வழங்கி இதனை கொண்டாடினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டதையொட்டி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.






