என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனத்தில் கடத்திய 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- போலீசார் எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறை இயக்குனர் அபாஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் திருவள்ளூர் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் மற்றும் போலீசார் எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வாகனம் சாலை ஓரத்தில் ஆளில்லாமல் கேட்பாரற்று நின்றது. அந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1100 கிலோ தமிழக அரசின் இலவச ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 1100 கிலோ ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி திருவள்ளூர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணையில் சோதனை சாவடியில் போலீசாரை பார்த்ததும் டிரைவர், ரேசன் அரிசியுடன் வாகனத்தை சாலையிலேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. அந்த வாகனம் யாருடையது? ரேசன் அரிசியை கடத்தி சென்றது யார் என்று போலீசார் தேடி வருகிறார்கள்.






