என் மலர்
திருவள்ளூர்
- 70 ஏழை குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் புத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.
- தமிழக பாஜகவின் பிற மொழி பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
தீபாவளி திருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், ஏழைகளும் தீபாவளி திருநாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் பாஜக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.பிரகாஷ் சர்மா ஏற்பாட்டில் 70 ஏழை குழந்தைகளுக்கு பட்டாசு மற்றும் புத்தாடை இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் தமிழக பாஜகவின் பிற மொழி பிரிவு நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
- மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
- மற்ற அலகுகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற அலகுகளில் 1230 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
- ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது.
- இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஊத்துக்கோட்டை நகரம் தமிழகம், ஆந்திரா எல்லையில் அமைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதனால் எப்போதும் நகரம் பரபரப்பாக காணப்படும்.
தீபாவளி பண்டிகையையொட்டி தற்போது கூட்டம் அலைமோதுகிறது. இதையடுத்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி அறிவுறுத்தலின்படி ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 சாலைகள் சந்திப்பில் போலீசார் உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மாதர்பாக்கம் அருகே உள்ள கொள்ளாளனூரைச் சேர்ந்த உஷா 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
- அதே பகுதியில் உள்ள ஏரியில் மாணவி உஷா பிணமாக மிதந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள கொள்ளாளனூரைச் சேர்ந்தவர் உஷா. இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மாயமாகி இருந்தார். அவரை பெற்றோர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரியில் மாணவி உஷா பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
- பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம்பாக்கம், ஒதப்பை, மோவூர், மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனபன்சத்திரம் கூட்டு சாலை வழியாக பாய்ந்து எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.
பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம். இந்த தரைப்பாலம் வழியாகத் தான் ஊத்துக்கோட்டை- திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் மூழ்கி விட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது இடது-வலது புறங்களில் 2 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதில் முதல் கட்டமாக இடது புறத்தில் பாலம் அமைக்க ரூ. 11.30 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2019ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் பணிகள் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 180 மீட்டர் நீளத்த்தில்,9.50 மீட்டர் அகலத்தில் 8 மெகா தூன்களுடன் இது இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கு திசையில் ரூ.13.89 கோடி செலவில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இந்த பாலத்தை அமைக்கிறது. 33.4 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. 8 தூண்கள் அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும்.
பாலம் பணியை வருகிற ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தடையின்றி போக்குவரத்து நடைபெறும்.
- திருவள்ளூர் பஸ் நிலையம் ரெயில் நிலையம் பஜார் வீதி போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
- திருத்தணி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
தீபாவளி பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொது மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக திருவள்ளூர் நகர பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதன் காரணமாக திருவள்ளூர் பஸ் நிலையம் ரெயில் நிலையம் பஜார் வீதி போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன.
அதன்படி திருவள்ளூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 கண் காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குற்றவாளி முகத்தை அடையாளம் காட்டும் எப்.ஆர்.எஸ். செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
திருத்தணி, ஊத்துக்கோட்டை, கடம்பத்தூர், பேரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின்.
- மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராபின் (வயது24). இவர் கடந்த ஆகஸ்ட் 31-ந்தேதி இரவு போந்தவாக்கத்தில் நடந்ந நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.
ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராபினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23), காரனோடை யை சேர்ந்த சரவணன்(26), பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்த ராகுல்( 26) ஆகியோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
வேளாங்கண்ணி அருகே உள்ள மரக்காணத்தில் நடந்த கொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க ராபின் கொலை நடந்தது என்று விசாரனையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட கார்த்திக், சரவணன், ராகுல் ஆகியோர் மீது பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண், மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீசுக்கு பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் படி கார்த்திக், சரவணன், ராகுல் ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
- கிஷோர்-கோமதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த புல்லரம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிஷோர். இவரது மனைவி கோமதி (வயது19). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கோமதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி மது போதையில் வீட்டுக்கு வந்த கிஷோர் மனைவி கோமதியை அடித்து உதைத்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கோமதியின் தாயார் நாகம்மாள் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து கர்ப்பிணியான கோமதியை அடித்து துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலாளி அர்ஜுன் தாபா மாயமாகி போனார்.
- மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.
மணவாளநகர்:
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் தேவநாதன். இவருக்கு திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் இலுப்பூர் சாலையில் பண்ணை தோட்டம் ஒன்று உள்ளது. இந்த பண்ணை தோட்டத்தில் நேபாளத்தை சேர்ந்த அர்ஜுன் தாபா என்ற காவலாளி நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலாளி அர்ஜுன் தாபா மாயமாகி போனார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ணை தோட்டத்தின் உரிமையாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மின்சார மற்றும் பிளம்பிங் பொருட்கள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அவர் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து மின்சார மற்றும் பிளமிங் பொருட்களை திருடி சென்ற காவலாளி அர்ஜுன் தாபாவை தெடி வருகின்றனர்.
- கடந்த மாதம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றனர்.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மெதுர் எடகுப்பம் கிராமத்தில் நூக்கால் அம்மன் கோவில் உள்ளது. கடந்த மாதம் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வழக்கம் போல் நேற்று பூஜை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சென்றனர். இன்று காலை மண்டல பூஜைக்காக பூஜை செய்ய வந்தபோது கோவில் கதவு திறக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது 15 கிலோ எடை கொண்ட பித்தளை கோவில் மணி அலுமினிய சமையல் பாத்திரங்கள் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். இக்கோவிலில் நான்காவது முறையாக திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
- முகாமில் 250க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது
- கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.
பொன்னேரி:
இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் மற்றும் ஜே எஸ் டபிள்யூ இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார் ஏற்பாட்டில் வல்லூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை பரிசோதனை செய்யப்பட்டு கிட்டப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக உடனடியாக கண்ணாடி வழங்கப்பட்டது.
இதில் துணைத் தலைவர் இலக்கியா ராயல், ஒன்றிய கவுன்சிலர் ரவி, வார்டு உறுப்பினர்கள் புஷ்பா தசரதன், பொம்மி ராஜசேகர், சற்குணம் ஜான்சிராணி முனுசாமி, ராஜீவ் காந்தி, அந்தோணி, அஷ்டலட்சுமி, தாமோதரன், வேலுமணி, தேவதாஸ், ஊராட்சி செயலாளர் நாகம்மாள், இந்தியா விஷன் இன்ஸ்டிட்யூட் ஊழியர்கள் ம.மகேஸ்வரி சாம், அஜய், ஆர்.மகேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்த நிலையில் 95 பேருக்கு உடனடியாக கிட்டப்பார்வை கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
- இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.
- திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல்
திருவள்ளூர்:
திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவரச சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவான, மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்பதை நனவாக்கும் வகையில் ஏற்கெனவே திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.
தமிழக முதல்வர், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளன.
அதே போல், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் 14 இடங்கள் உட்பட 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், ஆவடி மாநகராட்சியில் புதிதாக ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.
ஆவடி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் வாங்கித் தரப்பட உள்ளது. அதே போல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.34.50 லட்சம் மதிப்பில் அதிநவீன வாங்கித் தரப்பட உள்ளது.
அதே போல் பெரியபாளையம், மீஞ்சூர் மற்றும் பீரகுப்பம் ஆகிய பகுதிகளில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.






