search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ma Subramanaian"

    • இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.
    • திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவரச சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவான, மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்பதை நனவாக்கும் வகையில் ஏற்கெனவே திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.

    தமிழக முதல்வர், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளன.

    அதே போல், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் 14 இடங்கள் உட்பட 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், ஆவடி மாநகராட்சியில் புதிதாக ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஆவடி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் வாங்கித் தரப்பட உள்ளது. அதே போல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.34.50 லட்சம் மதிப்பில் அதிநவீன வாங்கித் தரப்பட உள்ளது.

    அதே போல் பெரியபாளையம், மீஞ்சூர் மற்றும் பீரகுப்பம் ஆகிய பகுதிகளில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×