என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தெய்வகுமாரின் மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதி சாலையில் விழுந்ததில் கால் மற்றும் கை பகுதியில் காயமடைந்தார்.
    • திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாலங்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் தெய்வக்குமார் (வயது 35). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    இந்த நிலையில், திருவள்ளூர்-அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூடல்வாடி அருகே வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று எந்தவித சிக்னலும் செய்யமால் திடீரென திரும்பி உள்ளார். இதனால் தெய்வகுமாரின் மோட்டார் சைக்கிள் ஆட்டோவின் மீது மோதி சாலையில் விழுந்ததில் கால் மற்றும் கை பகுதியில் காயமடைந்தார்.

    இதையடுத்து, அவரை மீட்ட வாகன ஓட்டிகள் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை மீனாட்சி சுந்தரம் அளித்த புகாரின்பேரில், திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியை மேற்கொண்டனர். அகரம் ஏரிக்கரை அருகே சென்றபோது டாஸ்மாக் மதுபான பாட்டில்களை கள்ளத்தனமாக ஒருவர் அதிக விலைக்கு விற்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பது தெரியவந்தது.

    மேலும், அவர் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
    • பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

    பொன்னேரி தீ அணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பில் தீ தொண்டு வார விழாவாக வருகிற 30-ந்தேதி வரை கடைபிடிக்க படுகிறது.

    இந்த நிலையில் பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் பஸ் நிலையைம், நகராட்சி பகுதி, குடிசை பகுதி, பள்ளி கல்லூரி, மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனி தொழிலாளர்களுக்கு தீ பாதுகாப்பு ஒத்திகை மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடத்தப்பட்டது.

    • பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.

    பொன்னேரி அடுத்த ஒரக்காடு ஊராட்சியில் உள்ள இருளர் காலனியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் இருளின இன ஜாதி சான்றிதழ்கள், ரேஷன் அட்டை,நலவாரிய அட்டை, புதிய ஆதார் அட்டை திருத்தம் உள்ளிட்ட 106 மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலாசுரேஷ் மண்டல துணை தாசில்தார் தேன்மொழி,ஒன்றிய கவுன்சிலர் ஒரக்காடு பாஸ்கர் துணைத் தலைவர் லட்சுமணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூண்டி ஏரிக்கரையில் வளர்ந்துள்ள அதிக அளவிலான முட் செடிகளால் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • ஆங்காங்கே கரை நடுவில் பெரிய பெரிய பள்ளமும் உருவாகி உள்ளன.

    திருவள்ளூர்:

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறை வேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதி சதுரங்கப்பேட்டை, புல்லரம் பாக்கம், கொழுந்த லூர், கைவண்டூர், பாண்டூர், பட்டரைபெரும்புதுார், அரும்பாக்கம் வரை 12.5 சதுர கி.மீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ளது. 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 16 மதகுகள் உள்ளன.

    ஏரியை சுற்றிலும், 8 கி.மீ., துாரத்தில், 15 மீட்டர் அகலத்தில் கரை அமைக்கப்பட்டு தார் சாலை போடப்பட்டு உள்ளது. கரைகளை பலப்படுத்துவது, மதகுகளை சரிபார்ப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி வருகிறது.

    இந் நிலையில் பூண்டி ஏரிக்கரையில் வளர்ந்துள்ள அதிக அளவிலான முட் செடிகளால் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட தார் சாலையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஆங்காங்கே கரை நடுவில் பெரிய பெரிய பள்ளமும் உருவாகி உள்ளன.

    சில இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. கரையின் சுவர் இடிந்து உள்ள இடம் வழியாக, அருகில் உள்ள கிராம மக்கள், கால் நடைகளை கொண்டு வந்து, நீர்த்தேக்கத்திற்குள் மேய்ச்சலுக்காக விட்டுச் செல்கின்றனர். இதனால் கரைகள் மேலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    எனவே பூண்டி ஏரியைச் சுற்றிலும் சேதமடைந்த கரையை சீரமைத்து, அங்குள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது.
    • ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, காரணி சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த கல்வெட்டை கைப்பற்றினர். சுமார் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட மிகவும் பழமையான அந்த கல்வெட்டில் கால பைரவர் உருவம் இருந்தது.

    மேலும் கால பைரவர் உருவத்தின் கீழ் சில எழுத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அது எந்த காலத்தில் உள்ள மொழி என்பது தெரியவில்லை.

    இது குறித்து சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆராய்ச்சி செய்த பின்னர்தான் கல்வெட்டு எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். கண்டெடுக்கப்பட்ட காலபைரவர் கல்வெட்டு தற்போது ஆரணிஆற்றின் கரையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள்.

    • தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நேரில் அழைத்து பாராட்டினார்.

    திருவள்ளூர்:

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் அறிவுத் திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ராக்கெட் அறிவியல் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை தலைமையில் நடந்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    3 கட்ட பயிற்சிக்கு பின்னர் இறுதியாக 50 பேர் வருகிற ஜூன் மாதம் ரஷ்யா நாட்டில் உள்ள யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    திருப்பாச்சூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பி.இவாஞ்சிலின், புழலில் உள்ள பொப்பிலிராஜா மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பி மாணவி கீர்த்திகா, குமரவேல், கதிர்வேடு கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பிடிக்கும் ரூபேஷ், செங்குன்றம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் ரேஷ்மா, ஜீவிதா ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

    இந்நிலையில் ரஷ்யா செல்ல தேர்வான அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேரையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன், திருப்பாச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன்,ஆசிரியை ஜெகதீஸ்வரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள இவரது இளைய மகள் வீட்டிற்கு சென்றார்.
    • வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள இவரது இளைய மகள் வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதில் இருந்த 4 பவுன் நகை, மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    வீட்டின் பின்புறம் உள்ள கழிவறை ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் நகை-பணத்தை அள்ளி சென்று உள்ளனர். கட்டிலுக்கு அடியில் 36 பவுன் நகையை பார்த்த சாரதி மறைத்து வைத்து இருந்தார். அதனை கொள்ளையர்கள் பார்க்காததால் அந்த நகை தப்பியது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பை பாஸ் சாலையில் வசித்து வந்தவர் தணிகை வேல்(வயது49). இவர் திருவள்ளூர் உட்கோட்ட நெடுஞ்சாலை ரோந்துபணியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் பணி முடிந்து தணிகைவேல் வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் உள்ள தனி அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்த போது அறையில் உள்ள மின் விசிறியில் தணிகைவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேலின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. குடும்ப தகராறில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உப்பளமடுகு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்குள்ள கோவிலின் மீது மோதியது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லியை சேர்ந்தவர்கள் யுவராஜ், விஸ்வா. நண்பர்களான இருவரும் ஆந்திர மாநிலம் காளகஸ்தி அருகே உள்ள நீர்வீழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். காளகஸ்தி அருகே உப்பளமடுகு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அங்குள்ள கோவிலின் மீது மோதியது.

    இந்த விபத்தில் யுவராஜ், விஸ்வா ஆகிய 2பேரும் பலத்த காயம்அடைந்து பலியானார்கள். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருநீலகண்ணன் மட்டும் திரும்பி வந்த போது வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் கருநீலகண்ணன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார்கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். நேற்று காலை அவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பவுன் நகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இரவு கருநீலகண்ணன் மட்டும் திரும்பி வந்த போது வீட்டில் நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மணவாளநகர் கபிலர்நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்கிற சீனுவை போலீசார் கைது செய்தனர்.
    • கஞ்சாவை அவர்யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த பட்டரை பகுதியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய மணவாளநகர் கபிலர்நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்கிற சீனுவை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை அவர்யாரிடம் இருந்து வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×