என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது

     முத்தூர் : 

    காங்கயம், சென்னிமலை சாலையில் ஆலாம்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து காங்கயம் - பழையகோட்டை சாலையில் உள்ள மூலக்கடை வரை பல வருடங்களுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை வழியாக பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வேன் மற்றும் கனரக லாரிகள், அரசு பஸ், தனியார் வாகனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன்கள், தனியார் பள்ளி வேன்கள் என தினசரி எண்ணற்ற வாகனங்கள் இந்த வழியாக சென்று வருகின்றன. மேலும் விவசாய பொருட்களையும் விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் தற்போது இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்க்கே பயன்படாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது : இருசக்கர வாகனத்தில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை கூட்டிச் செல்ல முடியாத அளவிற்கு இந்த சாலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது குண்டும் குழியுமான சாலையால் கீழே விழுந்து செல்லும் சூழ்நிலையும் உள்ளது. இருசக்கர வாகனங்களும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. இந்த நிலை பல வருடங்களாக உள்ளது. 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையை கடந்து செல்வதற்கு வெகு நேரம் ஆகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40).
    • அவரது கார் தானாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது

    முத்தூர் : 

    திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 40). இவர் நேற்று இரவு காங்கயம், கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு திருமண விசேஷத்திற்காக வந்தார். அப்போது மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு மண்டபத்திற்கு உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரது கார் தானாக திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அருகில் இருந்தவர் உடனடியாக ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் மூலம் தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்த பேட்டரி கோளாறால் தீப்பிடித்தது தெரியவந்தது. திருமண மண்டப வளாகத்தில் நிறுத்தி இருந்த கார் தானாக தீப்பிடித்து எரிந்ததால் மண்டபத்தில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

    • தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்கு பங்களிப்பை வழங்குவது தொடர்பான அனைத்து தனியார் சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் தரத்தை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு தனியார் பங்களிப்பை வழங்கும் முன்னோடி திட்டமான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கும் தரமான கல்வி கிடைத்திடும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தனியார் பங்களிப்புடன் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 1,331 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.இப்பள்ளிகளுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தொழில்துறையினர், முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்திட அடித்தளமாக அமைந்திருக்கிறது. குழந்தைகளின் கல்வி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நீங்கள் செலுத்தக்கூடிய நன்கொடையை பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எந்த பள்ளிகளுக்கு என்ன வசதிகள் தேவை என்கிற விபரம் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் www.nammaschool.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி செய்ய விரும்பும் நிறுவனங்கள் தங்களால் என்ன விதமான வசதிகளை பள்ளிக்கு ஏற்படுத்தி தர முடியும் என்பதை அறிந்து அதற்கேற்ற பங்களிப்பை வழங்கலாம். வழங்குபவர்கள் நிதியாகவும், பொருளாகவும் மற்றும் சேவையாகவும் வழங்கலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் முதலீடு என்பது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முதலீடாக இருக்கும். இத்திட்டத்தில் நிறுவனங்களால் வழங்கும் பங்களிப்பானது நாளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்படும். திருப்பூர் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் கொண்ட வளர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளதால் நிறுவங்களின் பங்களிப்போடு பள்ளிகளில் சிறப்பாக பயின்று உயர்கல்வி பயிலும் போது திறமையான மாணவர்களை உருவாக்க முடியும். இன்றைய மாணவர்கள் வருங்காலத்தில் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும், கல்வி மேம்பட பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். எனவே அனைத்து தனியார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் நல்உள்ளத்துடன் தங்களது பங்களிப்பை தாராளமாக வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் .அண்ணாதுரை ( உதவி திட்ட அலுவலர்) 94438-56934, தனலட்சுமி (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்) 88387-99374, கெரோலீன் (மாவட்ட திட்ட ஒருங்கிணை ப்பாளர்) 90804-41057 ஆகியோரை தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்களைபெறலாம்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த தனியார் தொழில் நிறுவனங்கள் தங்களது சமூக பங்களிப்பு நிதியை வழங்கலாம். அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சமூக பங்களிப்பு நிதி வழங்க பொறுப்பு அலுவலர் அருண்பாபுவை 99949-94944 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, பொதுமேலாளர் (மாவட்ட தொழில்மையம்) ராமலிங்கம், இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) கனகராணி, இணை இயக்குநர்கள் (தொழிலகப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) புகழேந்தி, சரவணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்கம், அச்சுக்கூடம் உரிமையாளர்கள் சங்கம், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், உணவு எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில் பாதுகாப்பு சங்கம் மற்றும் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கம், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45).
    • காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    முத்தூர் : 

    காங்கயம் அருகே சிவன்மலை, செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). அப்பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தகர குடிசை வீட்டில் சிவகுமாரின் தாயார் நாச்சம்மாள் நேற்று இரவு சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் அடுப்பின் அருகே இருந்த ஓலையில் திடீரென தீ பிடித்தது. தீயானது மளமளவென பரவி குடிசை வீடு முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது. வீட்டிலிருந்த பாத்திரங்கள் மூலம் தண்ணீரை எடுத்து ஊற்றியும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு நிலைய வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அனைவரும் எவ்வித தீக்காயங்களும் இன்றி உயிர் தப்பினர். குடிசை வீட்டில் நகை, பணம் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் இல்லாததால் பொருட் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் முற்றிலும் இருந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை.
    • மத்திய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழக விவசாயிகள் தற்போது பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தில் ராபி கால நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, அவகாசம் முடிந்த நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை. எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை இணை செயலாளருக்கு, தமிழக வேளாண்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார்.

    இதை ஏற்று, மத்திய அரசு பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை வருகிற 22-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் பொது சேவை மையங்களில் நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்.இந்த தகவலை திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார்

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என்று கலால் உதவி ஆணையாளர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

    • சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    குடிமங்கலம்:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    அகல் விளக்கு தயாரிப்பு குறித்து மண்பாண்ட தொழிலாளி ரஞ்சித் கூறியதாவது:-

    உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை. மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.
    • இரு மையங்களும் தலா 3.6 கோடி லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது.

    திருப்பூர்,நவ : 

    திருப்பூர் நகராட்சியாக இருந்த போது 2007ல் புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் சார்பில் எஸ்.பெரியபாளையம் பகுதியில் 1.2 கோடி லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இது கடந்த 2009ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில் 16 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.நகரம் வளர்ச்சியடைந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வார்டு பகுதிகளும் அதிகரிக்கப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை பயன்பாடு அதிகரித்தது. அதனடிப்படையில் அம்ரூத் திட்டத்தில் 640 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான பணி துவங்கியது.

    அவ்வகையில் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு மற்றும் எஸ்.பெரியபாளையம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி துவங்கி முடிவடைந்துள்ளது. இதில் 10 மண்டலங்களாக இணைப்பு பகுதிகள் திட்டமிடப்பட்டு 17 பகுதிகளில் சேகரமாகும் கழிவு நீர் 11 நீரேற்று மையங்கள் வழியாக உந்தப்பட்டு இந்த மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இரு மையங்களும் தலா 3.6 கோடி லிட்டர் கழிவு நீரை கையாளும் திறன் கொண்டது. ஏறத்தாழ 75 ஆயிரம் பாதாள சாக்கடை இணைப்புகள், 600 கி.மீ., நீளத்தில் குழாய்கள் பதித்து கொண்டு செல்லும் வகையில் பணிகள் நிறைவடைந்து தற்போது வீட்டு இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது.

    முழுமையாக தயார் நிலையில் உள்ள சுத்திகரிப்பு மையத்தில் தற்போது சோதனை அடிப்படையில் சுத்திகரிப்பு பணி நடைபெறுகிறது. கழிவு நீரேற்று மையங்களிலிருந்து ராட்சத குழாய் மூலம் சேகரிக்கப்படும் கழிவு நீர் பல்வேறு கட்டங்களாக சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.அதன்பின் கழிவு நீர் துர்நாற்றமில்லாத நல்ல நீராக மாற்றப்படுகிறது. தொடர்ந்து, ஜிக் ஜாக் முறையில் குளோரின் கலந்து பின் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர் நொய்யல் ஆற்றுக்கு சென்று சேருகிறது. சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலம், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு இதை வழங்கினால் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நீர் தேவைக்கு தீர்வு ஏற்படும்.பிரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் தனித்தனியாக சேகரித்து அதற்குரிய பகுதிகளில் அகற்றப்படுகிறது. இதில் மக்கும் கழிவுகளாக பிரிக்கப்படும் கழிவுகள் மற்றொரு பகுதியில் பிராசஸிங் செய்து உரமாக மாற்றப்படுகிறது.திடக்கழிவுகள் மறு சுழற்சி பயன்பாட்டுக்காக பிரித்து அதற்குரிய வகையில் கையாளப்படுகிறது. பாலிதீன் போன்ற கழிவுகள் தனியாகவும், கண்ணாடி பாட்டில் போன்ற கழிவுகள் தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    • நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • 22 அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    ெவள்ளகோவில் : 

    வெள்ளக்கோவிலில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் தீா்க்கும் வகையில் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    அதன்படி, வெள்ளக்கோவில் நகராட்சியில் உப்புப்பாளையம் சாலையிலுள்ள ஜே.கே.கே. திருமண மண்டபத்தில் வருகிற 22-ந் தேதி முகாம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், முகாமை சிறப்பாக நடத்துவது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில் மின்வாரியம், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம், காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அதிகாரிகள் உள்பட 22 அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

    கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணவும், தக்க பதில் தரவும் சம்பந்தப்பட்ட துறையினா் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வெள்ளக்கோவில் நகராட்சியில் 22- ந் தேதி நடைபெறும் முகாமில் வாா்டு எண் 1, 2, 3, 4 மற்றும் 11, 12, 13 ஆகிய 7 வாா்டுகளைச் சோ்ந்தவா்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.பிற வாா்டுகளுக்கான முகாம் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் தெரிவித்தாா்.

    • திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான உலா் களங்கள் செயல்பட்டு வருகின்றன
    • பண்டிகை முடிந்து தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனா்.

     காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம் காங்கயம், குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான உலா் களங்கள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் உள்ளூா் தேங்காய் வியாபாரிகள் தாங்கள் கொள்முதல் செய்யும் தேங்காய்களை தாங்களே சொந்தமாக களங்களை அமைத்து தேங்காய்களை உடைத்து பருப்புகளை உலா்த்தி விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

    தேங்காய் பறித்தல், களங்களில் மட்டை உரித்தல், பருப்புகளை உலா்த்துதல் ஆகிய பணிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த தொழிலாளா்கள், வடமாநில தொழிலாளா்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா். ஆண்டுதோறும் தை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை இந்த பகுதிகளில் அதிக அளவில் வெயில் நிலவும். அப்போது தேங்காய் உடைப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறும். ஆடி மாதம் மழை சீசன் தொடங்கியதும் உலா் களங்களில் பணிகள் தொய்வடையும்.

    மழைக்காலத்தில் தேங்காய் வெட்டுவதும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் நடப்பாண்டு கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் தேங்காய் களங்களில் பணிகள் குறைவாகவே நடைபெற்று வந்தன.வெயில் அதிகம் இல்லாத காரணத்தால் உடைத்த பருப்புகளை உலரவைப்பதிலும் தாமதம் எற்பட்டு, பணிகள் மந்த கதியிலேயே நடைபெற்று வந்தன. மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளா்களும் குடும்பங்களுடன் சொந்த ஊருக்கு சென்று விட்டனா்.

    இந்நிலையில் பண்டிகை முடிந்து தொழிலாளா்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கியுள்ளனா்.மேலும், மழை குறைந்து வெயிலும் அதிகரிக்கத் தொடங்கியதால் தேங்காய் உரிப்பு, உடைப்பு, உலரவைத்தல் உள்ளிட்ட பணிகள் காங்கயம், குண்டடம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    • கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம்
    • உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

     குடிமங்கலம் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம்.இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    அகல்விளக்கு தயாரிப்பு குறித்து மண்பாண்ட தொழிலாளி ரஞ்சித் கூறியதாவது:-

    உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை. மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
    • தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டம் 2022-2023-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.51.10 லட்சத்தில் 7 புதிய இலகு ரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த 18 வார்டுகளில் இருந்து காங்கயம் நகராட்சிக்கு கழிவுகளை சேகரிக்கும் வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளில் சென்று தினசரி சுமார் 13 டன் குப்பைகளை சேகரம் செய்து வருகிறது. 4 இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே குப்பைகளை சேகரிக்க பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் நகராட்சியின் தேவைக்காக மேலும் 7 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு பயன்பாட்டிற்கு வந்தது.

    இதனை காங்கயம் நகர் மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையர் கனிராஜ், சுகாதார ஆய்வாளர் சரவணன், பொறியாளர் குணசீலன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ×