என் மலர்tooltip icon

    தேனி

    • 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பட்டாளம்மன், கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2 நாட்கள் யாக பூஜையை தொடர்ந்து இன்று காலை கோவில் கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் சேது ராஜா, கடமலை-மயிலை ஒன்றிய பெருந்தலைவர் சித்ரா சுரேஷ், மாடசாமி, ராஜபட்டர் எஜமான் பாண்டி முனீஸ்வர், கடமலைக்குண்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கபாண்டியன், கடமலைக்குண்டு கிராம கமிட்டி தலைவர் கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.

    • குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
    • வாகனத்தில் வந்த 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியிலும், வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேனி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் தேனி அல்லிநகரம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் தனியாக ஒரு அறை அமைத்து அதில் 800 கிலோ குட்கா பொருட்கள் 40 மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்காவை பெங்களூரிலிருந்து தேனி பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த விஜயராகவன் (32) என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

    வாகனத்தில் வந்த கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த கெம்புராஜ் (23), கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முகமுது யூசுப் (33), கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா பகுதியை சேர்ந்த தீபக் (23), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த உதயகுமார் (31), கார்த்திகேயன் (31), ஆனந்தகுமார் (32) ஆகிய 7 பேர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    கர்நாடகாவை சேர்ந்த குட்கா வியாபாரிகள் தேனி வியாபாரியிடம் விற்பதற்காக முதன்முறையாக இங்கு வந்ததாகவும், வழி தெரியாமல் அங்கும் இங்கும் வாகனத்தில் சென்றதால் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. 7 பேர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 மூடை குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மதுவிற்றவர்களை கைது செய்தனர்.
    • அவர்களிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி போலீசார் பழைய பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற ஆண்டிபட்டி அருகே சிங்கராஜபுரத்தைச் சேர்ந்த ஆசை (வயது 46) என்பவரை கைது செய்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தேனி மது விலக்கு போலீசார் பழனிசெட்டிபட்டி பகுதியில் மது விற்ற கோபி (43), காமராஜபுரம் பகுதியில் மது விற்ற அமராவதி (60), ஆகியோரை கைது செய்து 7 மற்றும் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    போடி தாலுகா போலீசார் சங்கராபுரம் டாஸ்மாக் கடை பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற பால்சாமி (75) என்பவரை கைது செய்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் மது விலக்கு போலீசார் ரோந்து சென்ற போது உழவர் சந்தை அருகே மது விற்ற ராஜா (56), சின்னமனூர் பகுதியில் மது விற்ற சங்கிலி ராஜன் (40) என்பவரை கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உத்தமபாளையம் போலீசார் உ.அம்மாபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற ஜெயராஜ் (61) என்பவரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
    • கண்காணிப்பு காமிரா மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.

    கூடலூர்:

    கேரள மாநிலம் குமுளி அருகே வண்டிபெரியாறு மூங்கிலாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    மேலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.

    குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கால்நடைகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

    மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை யொட்டியுள்ள எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    தேனி:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவச் சான்று, தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான உதவி மையம் போன்ற பல்வேறு விதமான சேவைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இச்சிறப்பு முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பிற சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இம்முகாமில் 66 நபர்களுக்கு அடையாள அட்டை பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது, 42 நபர்களுக்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டைகளும், 132 நபர்களுக்கு ரயில் மற்றும் பஸ் பயண அட்டைகளையும், 89 நபர்களுக்கு தேசிய தரவுத்தள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு புதிய ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கான 201 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் 214 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, டாக்டர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
    • தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்

    தேனி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் உரிமை தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறுவதற்காக நடைபெற்ற முதற்கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இந்நிலையில், விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு நாளை முதல் அனுப்பி வைக்கப்படும்.

    தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யும் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியர் அளவில் விசாரணை செய்யப்பட்டு, தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்

    மேலும் முக்கியமாக பயனாளிகளின் கைப்பேசி எண்ணிற்கு வங்கியிலிருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்திலிருந்தோ அழைக்கிறோம் என போலியான அழைப்பு வந்து ஏதேனும் கடவுச்சொல் அல்லது ஏ.டி.எம். அட்டையின் பின்பக்கத்தில் உள்ள 3 இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வங்கி கணக்கில் இருக்கும் தொகையை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள் விழிப்புணர்வுடன் இருந்திட வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார்.

    தேனி:

    தமிழக முதல்-அமைச்ச ரின் சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசிய தாவது,

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறு ப்பேற்றவுடன், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையிலும், அவர்களின் வளர்ச்சி, முன்னேற்றம், பாதுகாப்பு, ஆகியவற்றினை உறுதி செய்யும் வகையில் இலவச பேருந்து பயண திட்டம், பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதே போல் அனைத்து குழந்தைகளையும் தன் குழந்தைகளாக கருதி இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இல்லாத வகையில், காலையில் மாண வர்கள் உணவரு ந்தாமல் பள்ளி செல்ல கூடாது என்றும் காலை உணவை தவிர்ப்பதனால் ஏற்படும் சத்து குறை பாட்டினை கருத்தில் கொண்டு வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

    மேலும், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெ ண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக ரூ.1.6 கோடி மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை இன்று தொடங்கி வைத்து மக்களின் முதல்வர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இதன்மூலம் பெண்கள் மற்றவர் உதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையாகவும், தன்னம்பிகையாகவும் வாழ வழிவகை செய்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

    • வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்ததை நோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.
    • அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார் திருடிச்செல்லும் சம்பவம் அதிகரித்தது. இந்த நிலையில் உத்தமபாளையம்-கோம்பை சாலையில் வாழைத்ேதாட்டம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு கார் நின்றது.

    அதிலிருந்த சிலர் பாதர்கான்பாளையத்தை சேர்ந்த விவசாயி தோட்டத்தில் புகுந்தனர். அங்கு வாழைத்தார்களை வெட்டி குவித்து வைத்தனர். இதனைநோட்டமிட்ட மற்ற விவசாயிகள் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மற்றவர்களை ஒருங்கிணைத்தனர்.

    அவர்கள் அந்த கும்பலை நெருங்கியபோது அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து காரை மடக்கி பிடிக்க முயன்றபோது 2 பேர் சிக்கினர். அவர்களை உத்தமபாளையம் போலீசில் விவசாயிகள் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வாழைத்தார் திருடியது யோகேஸ்வரன் மற்றும் சூர்யா என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய புதியவன், அசோக், மாரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்தவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார்.
    • அதன்பின் அவரை தேடி சென்ற போது அவர் மாயமானார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (45). இவரது மகன் பவேஷ் (5) என்பவர் தனது வீட்டு அருகே சிறுவர்களுடன் விளையாடி க்கொண்டி ருந்தார்.

    அப்போது கடமலை க்குண்டு பஞ்சாயத்து அலுவலக தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சிறுவனை தூக்கி சென்று அவர் கழுத்தில் அணிந்திந்த தங்க தாயத்தை திருடி சென்றார். இதுகுறித்து சிறுவன் தனது தாய் கலையரசியிடம் கூறினான். அதன்பின் பாஸ்கரனை தேடி சென்ற போது அவர் மாயமானார்.

    சம்பவத்தன்று கருப்பசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த பாஸ்கரன் குறித்து கடமலை க்குண்டு போலீஸ் நிலை யத்தில் கலையரசி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி சம்பவ இடத்திற்கு சென்று பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    • நேற்று காலை குளிக்கச்சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பக்ருதீன்(44). டெய்லராக பணிபுரிந்து வந்தார். வழக்கமாக முல்லைபெரியாற்றில் குளித்து வந்தார். அதன்படி நேற்று காலை அங்கு குளிக்கச்சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    வடக்கு கரையோரம் மயங்கிய நிலையில் கரை ஒதுங்கினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் பக்ருதீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே மூங்கிலாறு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது தேயிலை தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தை பார்த்தனர்.

    மேலும் 5ம் நம்பர் தேயிலை தோட்டம் அருகிலும் சிறுத்ைத நடமாடியதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் வண்டிபெரியார் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

    கடந்த ஒரு வாரத்தில் தேயிலை தோட்டத்தில் ஆடு, நாய்கள் கொல்லப்பட்டு இறந்து கிடந்தன. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறிய இடங்களில் செல்லார் கோவில் வனத்துறை அதிகாரிகள் வினோத், விஜயகுமார் தலைமையில் வனத்துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    காமிராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். இதில் மூங்கிலார் 40 ஏக்கர் பகுதியில் வனத்துறை பொருத்திய கண்காணிப்பு காமிராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளது.

    இதனால் சிறுத்ைதயை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுத்தையை பிடிக்கும் வரை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது.
    • கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வண்டிபெரியாறில் உள்ள தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ளநோட்டு 2 செலுத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஸ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வண்டிபெரியாறு டைமுக் ஆத்தோரம் பகுதியை சேர்ந்த சபின்ஜேக்கப் கள்ளநோட்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வண்டி பெரியாறு போலீசார் அவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது செல்போன் கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 44 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அணைக்கரையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சென்னையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.

    அவரிடம் ரூபாய் 20 ஆயிரம் கொடுத்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து சபின்ஜேக்கப், ராஜேஷ், தனியார் பஸ் கண்டக்டர் சிஜூபிலிப் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டுகள் சப்ளை செய்த சுப்பிரமணியனை சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.45 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் நோட்டு அடிக்கும் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சுப்பிரமணியனை வண்டிபெரியாறு போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×