என் மலர்tooltip icon

    தேனி

    • தனது மனைவிக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்தவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
    • இவர்களது விஷயம் கணவருக்கு தெரியவரவே அவரை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மனைவியுடன் பழகி வந்தார்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி மாரியம்மன் கோவில்பட்டி மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார் (வயது 38). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மீனாவுக்கும், மாரியம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த தங்கமாயன் மகன் விக்ரம் (28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்களது விஷயம் ஜெகதீஷ்குமாருக்கு தெரியவரவே அவர் விக்ரமை கண்டித்தார். இருந்தபோதும் அவர் தொடர்ந்து மீனாவுடன் பழகி வந்தார்.

    இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி விக்ரமை ஜெகதீஷ்குமார் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஜெகதீஷ்குமார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். திருப்பூரில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக ஜெகதீஷ்குமார் தேனிக்கு வந்தார். இதை அறிந்ததும் விக்ரமின் சகோதரர் கவுதம் (31) அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

    ஜெகதீஷ்குமார் தனது வீட்டுக்கு பின்புறம் மது குடித்துக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அங்கு வந்த கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் மண்வெட்டி, உருட்டுக்கட்டை மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஷ்குமார் உயரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து கவுதம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
    • அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கஞ்சா பயிர் செய்து வந்த நிலையில், கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் மலைப்பகுதிகள் அதிகம் இருந்தாலும், கேரளா வனம் மற்றும் போலீசார் கெடுபிடியால் கஞ்சா வளர்ப்பு என்பது அதிகமாக இல்லை.

    மேலும் கேரளாவில் போதை பொருட்களான புகையிலை, பான் மசாலா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்கள் விலையும் அதிகம். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அரசு விற்பனை செய்வதால் பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    கேரளாவில் இளைஞர்களின் கஞ்சா பயன்பாடு, கஞ்சாவிற்கான கிராக்கியை தெரிந்து கொண்ட தமிழகத்தில் உள்ள கஞ்சா வியாபாரிகள் கேரள இளைஞர்களை குறி வைத்தும் சமூக வலைதளங்களில் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த தமிழக அரசு தமிழகத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ், சொத்து முடக்கம் என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் கஞ்சா கடத்தலை தவிர்த்து வந்த வியாபாரிகள், மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர். அதேசமயம் ஒரு சில வியபாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கம்பம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    கம்பம் 18ம் கால்வாய் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அதிவேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை சினிமா பட பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் சாக்குபையை சோதனை மேற்கொண்டபோது அதில் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சதீஸ்வரன் (வயது 26) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்
    • விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேக்கு, வேம்பு, தோதைகத்தி உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் நேருராஜன் தலைமையில் மாணவர்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த விதைப்பந்துகளை கடமலைக்குண்டு கிராமத்தை ஒட்டிள்ள மலைப் பகுதிகளில் வீசினர்.

    நேற்று மாலை வரை 20 ஆயிரம் விதைப்பந்துகளும் மலைப்பகுதிகளில் வீசி முடிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் அழகுசிங்கம் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மகேந்திரன், ஆசிரியர் செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
    • சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    இன்று 9-வது நாளாக நீர்வரத்து சீராகவில்லை. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அதிக அளவில் வெள்ள ப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • 2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.

    தேனி:

    2023-24ம் ஆண்டு 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய குமார் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக தேனி மாவட்டத்தில் செயல்படும் தேனி கூட்டறவு மேலாண்மை நிலையத்தில் 23வது அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி புதிய பாடத்திட்டத்தின் படி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    வருகிற 30ம் தேதி மாலை 5.30 மணிவரை மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். கல்வி சான்றுகளுடன் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
    • 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் வழங்கினார்.

    இதில் சரவணக்குமார் எம்.எல்.ஏ, மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேனி மாவட்டத்தில் 15.09.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தகுதியான பயனாளிகள் என தேர்வு செய்யப்பட்ட 2,04,281 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு தகுதியான நபரும் விட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டத்தில் விடுபட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வசதியினை ஏற்படுத்தினார்.

    அதன்படி, இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் குழு அமைத்து, கள ஆய்வு செய்து அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, தகுதியான மனுக்கள் என தேர்வு பெற்ற 14,542 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டது.

    மேலும், மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் விசாரணை செய்யும் பணிகள் விரைவில் முடிவடைந்து, உரிமைத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேசினார்.

    முன்னதாக முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விழாவின் நேரலை நிகழ்வினை புதியதாக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுடன் அமர்ந்து நிகழ்ச்சியினை பார்வையிட்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
    • விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று காலை அணைக்கு நீர்வரத்து 1598 கனஅடியாக இருந்தது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடிநீர் மட்டுமே திறக்கப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. விரைவில் 130 அடியை எட்டிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவை எட்டியுள்ளது. நேற்று அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருந்தபோதும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக உள்ளது. 1309 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 53.50 அடியாக உள்ளது. 214 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 239.38 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 19, தேக்கடி 8.4, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.4, சண்முகாநதி அணை 7.3, போடி 2.4, வைகை அணை 5, மஞ்சளாறு 3.4, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1, வீரபாண்டி 2.6, அரண்மனைப்புதூர் 2.2, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி போலீஸ்காரர் இறந்துகிடந்தார்.
    • பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரது இறந்தவரின் மனைவியிடம் எம்.எல்.ஏ வழங்கினார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள காமாட்சிபுரம் மேற்குதெருவை சேர்ந்தவர் சின்னத்துரை(63). இவர் விருவீடு போலீஸ்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். பின்னர் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டதால் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சித்ரா மற்றும் 2 மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று சின்னத்துரை வீடு நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது மகன் நிசாந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி சின்னத்துரை இறந்துகிடந்தார்.

    இதுகுறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பெரியகுளத்தில் உள்ள சின்னத்துரை வீட்டிற்கு சென்ற சரவணக்குமார் எம்.எல்.ஏ அவரது மனைவி சித்ராவிற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையை சித்ராவிடம் வழங்கினார். அப்போது பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், தாசில்தார் அர்ஜூணன், நகரச்செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்துக்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியில் தேசிய நெஞ்சாலை ஓரம் குழாய் பதிக்கும் பணி நிறைவுபெற்றது.

    இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மதுரை நோக்கி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
    • தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(70). விவசாயி. இவர் சாலையை கடக்க முயன்றபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த திராட்சை லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி டிரைவர் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

    ×