என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை அருகே தனியார் கிட்டங்கியில் பதுக்கிய 287 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரி உள்பட 3 வாகனங்கள் சிக்கின.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த சோழபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிட்டங்கியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட வினியோக அதிகாரி ரத்தினவேல், சிவகங்கை தாலுகா குடிமைப்பொருள் தனி தாசில்தார் மைலாவதி, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜா மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது கிட்டங்கி முன்பு 2 லாரி மற்றும் ஒரு வேனில் ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்ததை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விரட்டிச்சென்று அவர்களில் ஒருவரை பிடித்தனர். அத்துடன் அந்த கிட்டங்கியை வாடகைக்கு பிடித்து இருந்த மானாமதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லப்பாண்டி சோழபுரத்தில் கிட்டங்கி வாடகைக்கு பிடித்து ரேஷன் அரிசி மூடைகளை கடத்தி வந்து வைத்திருந்ததும் அந்த மூடைகளை மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக சரக்கு வாகனங்களில் ஏற்றி வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் 3 வாகனங்களிலும் ஏற்றி வைத்திருந்த 257 மூடை ரேஷன் அரிசியையும் அத்துடன் கிட்டங்கியில் வைக்கப்பட்டு இருந்த 30 மூடை அரிசியையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட 287 மூடை அரிசியையும் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    அத்துடன் செல்லப்பாண்டி (வயது 35) மற்றும் கண்ணன் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட கண்ணன் கடத்தல் அரிசி மூடைகளை ஏற்றிச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்த லாரியின் உரிமையாளர் என்பது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி மூடைகளை எங்கிருந்து கடத்தி வந்தனர் என விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுரை கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே காவல்துறை சார்பில் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் 201 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். பின்னர் சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

    அப்போது அவர் கூறும் போது:- சட்டத்தை நடைமுறைபடுத்தும் மிகப்பெரிய பணியினை நாம் செய்து வருகிறோம். மேலும் நாம் கனிவோடு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும். நன்னடத்தை என்பது அவசியம் என்றார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின், பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளதன் பேரில் இதுவரை 74 ஆயிரத்து 730 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த மாவட்டத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 435 பேர் முதல் தவணையாக தடுப்பூசி போட்டுள்ளனர். மேலும் 28 ஆயிரத்து 371 பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதேபோல 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அரசு அனுமதி அளித்துள்ளதன் பேரில் இதுவரை 74 ஆயிரத்து 730 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    தற்போது அரசின் அறிவுறுத்தலின் பேரில் பிரசவித்த பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி கையிருப்பை பொருத்து வரவர தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தொழிற்சாலைகள் மற்றும் கிராமங்கள் போன்ற இடங்களில் முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


    காரைக்குடி செஞ்சை பகுதியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் போதிய சமூக இடைவெளியில்லாமல் காத்திருந்தனர்.
    காரைக்குடி:

    கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மக்களிடம் அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்ட காரணத்தினால் இதில் அவர்கள் போதிய அக்கறை செலுத்தாமல் இருந்தனர். இந்தநிலையில் கொரோனாவின் 2-வது அலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தும் வந்தனர்.

    இதையடுத்து பொதுமக்களிடையே தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் அதிகளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் இடம் குறித்து தகவல் கேட்டு தற்போது ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதுதவிர தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அங்கு வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போதிய சமூக இடைவெளியில்லாமல் தடுப்பூசி போட வரிசையில் நிற்கின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. காரைக்குடி செஞ்சை பகுதியில் நேற்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் போதிய சமூக இடைவெளியில்லாமல் காத்திருந்தனர். இதேபோல் காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு பள்ளியில் நடந்த முகாமிலும் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்றனர்.

    இதில் பெண்கள் நின்ற வரிசையானது போதிய சமூக இடைவெளியில்லாமல் இருந்தது. பெரும்பாலான பெண்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து வந்து கூட்ட நெரிசலில் காத்திருப்பதை காண முடிந்தது. எனவே வருங்காலங்களில் இவ்வாறான தடுப்பூசி முகாம்கள் நடத்துபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் என்ற விகிதத்தில் டோக்கன் முறை வழங்கி நாள் முழுவதும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து அந்த பகுதியில் 2 அல்லது 3 நாட்கள் வரை இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தினால் மட்டுமே மக்கள் ஒன்று கூடுவதை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் முகாமில் 600 நபர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்புவனம் கிளையும் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கும் முகாமை கழுகேர்கடை கிராமத்தில் நடத்தியது.

    திருப்புவனம் கிளைத் தலைவர் தீன்முகம்மது தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை சித்தா பிரிவு மருந்தாளுனர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். பேச்சாளர் முஸ்ரப் கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். முகாமில் 600 நபர்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    திருப்பத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் ஆதினமிளகி. இவருடைய மகன் அருண் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவு செம்பனூரில் இருந்து நடுவிக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மானகிரி அருகே பட்டினம்பட்டி விலக்கு பகுதியில் சென்ற போது, எதிரே வந்த ஆரோக்கியசாமி என்பவரது மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அருண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்த ஆரோக்கியசாமி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இளையான்குடி அருகே பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகர் காந்திசாலையை சேர்ந்தவர் கார்த்திகைசாமி. இவருடைய மனைவி காளீஸ்வரி (வயது 42.). இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு பின்புறம் நடந்து சென்ற போது பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மேல்சிகிச்சைக்காக பரமக்குடி மற்றும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து இளையான்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 645 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 104 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    ஏரியூரில் இருந்து மேச்சேரிக்கு மதுபாட்டில்கள் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஏரியூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் மற்றும் சந்து கடைகளில் மது விற்பவர்கள் மாவட்ட எல்லையான தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க தினமும் குவிகின்றனர். குறிப்பாக பொம்மிடி, தொப்பூர், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி வெளிமாவட்டங்களுக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க ஏரியூர் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏரியூரில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரிக்கு சென்ற இருசக்கர வாகனம், கார், சரக்கு வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் சாக்குப்பை, பெட்டிகளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. மதுபாட்டில்கள் கடத்திய மேச்சேரி பகுதியை சேர்ந்த சசி (வயது 34), சசிகுமார் (40), சண்முகம் (45), நசியனூர் சுப்பிரமணி (34), வேலமங்கலம் அய்யனார் (40) உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    காரைக்குடி அருகே பெயிண்டரை தாக்கி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி ராமகிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 42). பெயிண்டர். சம்பவத்தன்று பழனி சந்தைப்பேட்டை அருகே சென்ற போது அவரை வழிமறித்த வாலிபர் பழனியிடம் பணத்தை பறிக்க முயன்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. உடனே வழிப்பறி செய்ய முயன்ற வாலிபர் பழனியை உருட்டைக்கட்டையால் சரமாரியாக தாக்கி அவரது சட்டை பையில் இருந்த ரூ,.1000-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பழனி காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பழனியை தாக்கி வழிப்பறி செய்த கணேசபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (21) என்பவரை கைது செய்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 679 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 113 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடக்கிறது. இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி அருகே உள்ள கொந்தகை பகுதியிலும் அகழாய்வு பணி நடக்கிறது. இங்கு நான்கு குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு முதுமக்கள் தாழி சேதாரமில்லாமல் முழு அமைப்புடன் கிடைத்தது. அதையும் சேர்த்து 2 முதுமக்கள் தாழிகளை ஆய்வு செய்ததில் அதனுள்ளே மனித மண்டை ஓடு, விலா எலும்புகள், மூட்டு எலும்புகள், கை- கால் விரல் எலும்புகள், இரும்பு வாள், கூம்பு வடிவ கிண்ணங்கள், கருப்பு, சிவப்பு பல வண்ணம் கொண்ட மண் சட்டிகள் இருந்தன. மற்ற முதுமக்கள் தாழிகள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றபோது மனித முழு உருவ எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்த முழு உருவ எலும்புக்கூடு சுமார் 4 அடி நீளம் இருக்கும். இந்த முழு உருவ எலும்புக்கூடு முழுமையான ஆய்வுக்கு பிறகு தான் ஆணா -பெண்ணா எனவும் மேலும் எந்த நூற்றாண்டு காலத்தை சேர்ந்தது எனவும் தெரியவரும்.
    ×