என் மலர்
சேலம்
- காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
- சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு ரவுண்டானா பகுதியில் ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு கடந்த 19-ந்தேதி இரவு குடிபோதையில் 2 பேர் சாப்பிட வந்தனர். அவர்கள் அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதில் ஒருவர் சாப்பிட்டு முடிக்கவும் கடையின் மேசை மீது தலை வைத்து அப்படியே போதையில் மயங்கிவிட்டார்.
மற்றொருவர் அவர்கள் வந்த காரிலேயே தூங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர் பலமுறை எழுப்பியும் அவர் எழுந்திருக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஓட்டலில் மயங்கியவரை ஒருவழியாக எழுப்பினர்.
அப்போது கடையில் இருந்து புறப்பட்டு செல்லுங்கள் என உரிமையாளர் கூறினார். அதற்கு காரில் இருந்த மற்றொருவரும் இறங்கி வந்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
இது பற்றி அம்மாப்பேட்டை போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் விசாரித்தனர். அதில், அவர்கள் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் என்பது தெரியவந்தது.
இந்த ரகளையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலாக பரவியது.
இதனிடையே சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் விசாரணை நடத்தி ஓட்டலில் ரகளை செய்த சப்-இன்ஸ்பெக்டர் சிவ சக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து துறை ரீதியான விசாரணையை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்லப் பாண்டியன் நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை அவர் நேற்று போலீஸ் சூப்பிரண்டிடம் சமர்பித்தார். அந்த அறிக்கையை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் துறைரீதியான நடவ டிக்கையாக சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சூரப்பள்ளி கடைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (34), நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (28). இவர்களுக்கு கவினேஷ் (6), ஜெகதீஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
அண்ணாமலை வனவாசியில் உள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கும், அவரது மனைவி கோகிலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை 2 மகன்களுடன் சூரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.
இதையடுத்து கோகிலா தனது குழந்தைகளை கணவரிடமிருந்து மீட்டு தரக்கோரி நங்கவள்ளி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் அண்ணாமலையை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் குழந்தையை கோகிலாவிடம் அனுப்பி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த அண்ணாமலை தனது 2 மகன்களையும் அழைத்துக்கொண்டு சன்னியாசி முனியப்பன் கோவில் என்ற பகுதிக்கு சென்றார். பின்னர் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சிக்கொல்லி மாத்திரைகளை தனது 2 மகன்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் தின்றுள்ளார். மாத்திரைகளை சப்பி பார்த்த குழந்தைகள் கீழே துப்பிவிட்டனர். ஆனால் அண்ணாமலை மாத்திரைகளை விழுங்கியதால் மயங்கினார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்துவிட்டார். தொடர்ந்து அவரது 2 மகன்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.
- தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும்
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக மங்கை வள்ளி கும்மி குழுவின் 75-வது பவள விழாவையொட்டி வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கும்மியாட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ரசித்து பார்த்தார்.
2ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கொங்கு பாரம்பரிய கும்மியாட்ட கலை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நாட்டுப்புற பாடல் பாடி ஆடுவது தான் இதன் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் இந்த கலையை நடத்தி வரும் கலைஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்களின் போதும், குடமுழுக்கின் போதும், திருமண நிகழ்ச்சியின் போதும் பெண்கள் ஒன்று கூடி பாடுவது மட்டுமல்லாமல், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு கிராமிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான கலை ஆகும். நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.
திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற நமது முன்னோர்களின் கனவை நமது சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது இந்த கும்மியாட்ட கலையை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மியாடினர்.
- கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும்.
- நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
முதலில் வினாடிக்கு 12ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தேவைக்கேற்ப அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு குறித்த காலத்தில் பெய்யாததால் நீர்வரத்து குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.94 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 154 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து வினாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்மட்டம் குறைந்து வருவதால் அணைக்குள் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிகிறது. மேலும் மேட்டூர் அணையின் வலதுகரை வறண்டு காணப்படுகிறது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வாரங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்யத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2ஆயிரத்து 500 கனஅடியும், கபினி அணையில் இருந்து 2ஆயிரத்து 487 கனஅடியும் என மொத்தம் 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு நேற்றிரவு திறக்கப்பட்டது.
பொதுவாக பருவமழை காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் கர்நாடக அணைகளில் திறக்கப்படும் தண்ணீர் தமிழக எல்லையான ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டுக்கு வர 48 மணிநேரம் ஆகும். தற்போது மழை இல்லாததால் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது.
காவிரி ஆற்றில் ஆங்காங்கே வறட்சியின் காரணமாக பாளம், பாளமாக நிலம் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வர 6 மணிநேரம் ஆகும். எனவே புதன்கிழமை அதிகாலைக்குள் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும். தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும்.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.58 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
- அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்து ஏமாந்தோர் புகார் கொடுக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர்.
சேலம்:
சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி என்ற பெயரில் போலி கூட்டுறவு சங்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் ஒரு கும்பல் பணத்தை வசூல் செய்தது.
பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவில் ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.58 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஜெயவேல், தங்கபழம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது கோவை, ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வாங்கிய 250 ஏக்கர் சொத்துகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்து ஏமாந்தோர் புகார் கொடுக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று லைன்மேடு சமுதாய நலக்கூடத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மனு கொடுக்க குவிந்தனர்.
அவர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு ஆங்கிட் ஜெயின் மனுக்களை பெற்றார். தொடர்ந்து ஏராளமானோர் அவரிடம் மனுக்களை கொடுத்தனர்.
இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
- முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.
- அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கண்ணந்தேரி அடுத்த கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (65). இவர் தனது உறவினர் அய்யனார், அவரது மனைவி லதா ஆகியோருடன் சேர்ந்து நிலம் வாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து மகுடஞ்சாவடியை சேர்ந்த அய்யண்ணன், அவரது மகன் ஜெகன் மூலம் மகுடஞ்சாவடி பழைய சந்தைப்பேட்டையை சேர்ந்த நிலத்தரகர்களான கோபால கண்ணன் (53), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (49) ஆகியோர் அறிமுகமாகினர்.
ரூ.55 லட்சம்
இவர்கள் மகுடஞ்சாவடி அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள 1.47 ஏக்கர் நிலத்தை தாங்கள் கிளை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறி ரூ.55 லட்சத்திற்கு விலை பேசினர்.
பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தின் உரிமையாளர் நடராஜன் மூலம் முத்துசாமி, அவரது உறவினரின் மனைவி லதா ஆகியோர் பெயரில் கிரையம் செய்து கொடுத்தனர்.
இந்த கிரையத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட கோபாலகண்ணன் சார்பதிவாளர் அலுவ லகத்தில் பத்திரத்தை பெற்றுக்கொண்டு முத்துசாமியிடம் கிரையம் செய்யப்பட்ட நிலத்திற்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்து தருவதாக கூறி ரூ.75 ஆயிரத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மிரட்டல்
இந்த நிலையில் முத்துசாமி, லதா தரப்பினர் கோபால கண்ணன், சரவணன் ஆகியோரிடம் வழங்கிய அசல் பத்திரத்தை கேட்டபோது இருவரும் பத்திரத்தை தராமல் ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் பத்திரத்தை தருவேன் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துசாமி இது குறித்து சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமாரிடம் புகார் மனு அளித்தார்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து விசா ரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் துணை சூப்பிரண்டு இளமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைச்செல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு கோபால கண்ணன், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக மும்பைக்கு லோக்மான்ய திலக்குக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- இந்த ரெயில் வர தாமதம் ஏற்பட்டதால் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக மும்பைக்கு லோக்மான்ய திலக்குக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவையில் காலை 8.50 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வர தாமதம் ஏற்பட்டதால் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.ஆனால் அறிவிப்பு தாமதமாக வெளியிட்டதால்இந்த தகவல் பயணிகளை சென்றடையவில்லை. இதனால்மதியம் 2.45 மணிக்கு புறப்பட்ட ரெயலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் , தருமபுரி ஸ்டேசன்களில் ஏராளமான பயணிகள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ேமலும் முன் கூட்டியே இனி வரும் நாட்களில் கால தாமதம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
- வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளையம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளை யம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு காலி குடத்துடன் சென்றார்.
தர்ணா
துக்கியாம்பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்காததை கண்டித்தும், அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தழகன், அண்ணாதுரை ஆகியோர், துக்கியாம்பாளை யம் கிராமத்தில் ஆய்வு செய்து அனைத்து பகுதி களுக்கும், சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, தர்ணா போராட்ட த்தை ஒன்றிய குழு உறுப்பி னர் உழவன் இரா. முருகன் கைவிட்டு இருக்கையில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.
- சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
- அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார்.
சேலம் நெத்திமேட்டில் தனியார் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் பொருட்களை வாங்காமல் அங்குள்ள பொருட்களை திருடி உள்ளார். இதை ஊழியர்கள் சி.சி.டி.வி கேமிராவில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை பிடித்து பொருட்களை பறிமுதல் செய்து செவ்வாய்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லாகான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார்.
- நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ராஜா (27). இவர் நேற்று தனது சித்தப்பா வயலில் உள்ள பயிருக்கு மருந்து அடிப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர் கிணற்றில் விழுந்து விட்டார். வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்த போது அவரது செருப்பு மட்டும் கிணற்றின் மேல் பகுதியில் கிடந்தது. பின்னர் கிணற்றுக்குள் பார்த்த போது ராஜா தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டனர்.இதற்கிடையேஅங்கு வந்த போலீசாரும் உறவினர்களும் இணைந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்ககாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது சகோதரர் கந்தமணி, கொடுத்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த தனியார் ஆம்புலனஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இது குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஏலம் நடைபெறுகிறது.
- ஏலத்தில் வாகனம் எடுக்க விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை வருகிற 24-ந் தேதி செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தல் பங்கேற்கலாம்.
சேலம்:
சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-சேலம் மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஏலம் நடைபெறுகிறது. இதில் 4 சக்கர வாகனங்கள் 11, ஆட்டோ 3, இரு சக்கர வாகனங்கள் 79 என 93 வாகனங்கள் வருகிற 25-ந் தேதி காலை 10 மணிக்கு உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் முன் ஏலம் விட ப்படுகிறது. ஏலத்தில் வாகனம் எடுக்க விரும்புவோர் இரு சக்கர வாகனங்களுக்கு 2 ஆயிரம் , 3, 4 சக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் முன் பணத்தை வருகிற 24-ந் தேதி செலுத்தி டோக்கன் பெற்று ஏலத்தல் பங்கேற்கலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






