என் மலர்
ராணிப்பேட்டை
- வேறொரு வழக்கில் கிடைத்த செயினை அடையாளம் காணப்பட்டது
- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தவறவிட்டார்
நெமிலி:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் வசித்துவரும் செந்தில்குமார் என்பவரின் மனைவி கல்பனா (வயது 37).
இவர் கடந்த மாதம் 15-ந்தேதி தேதி தனது கணவருடன் பைக்கில் ஆற்காட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஒச்சேரி மக்லின் கால்வாய் அருகே தான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை தவறவிட்டார்.
இது தொடர்பாக அவளூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று வேறொரு வழக்கில் கிடைத்த தங்க செயினை அடையாளம் கண்டத்தில் இது கல்பனாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவளூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி தங்க செயினை கல்பனாவிடம் ஒப்படைத்தார்.
- ரூ.9 லட்சத்தில் அமைகிறது
- பூமிபூஜை போடப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பன்னியூர் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமிபூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பன்னியூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி லோகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
சாலையை மேம்படுத்தி தர வேண்டி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூ.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணி நேற்று பூமிபூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- ஒருவர் பலி
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அருகே புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (வயது 42). இவர் நேற்று இரவு 8 மணி அளவில் புலி வலத்திலிருந்து சோளிங்கருக்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சோளிங்கர் அருகே வந்தபோது எதிரே வந்த பைக் மோதியது. இதில் முரளி பலத்த காயம் அடைந்தார். பின்னர் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.45 சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கொண்ட பாளையம் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாசில்தார் பார்வையிட்டார்
- வீட்டு பராமரிப்பு பணிக்காக சுவரை இடித்த போது கிடைத்து
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தில் வசித்து வரும் சீனிவாச ஐயர்(48). இவர் வீட்டு பராமரிப்பு பணிக்காக சுவரை இடித்த போது 18 ஆம் நூற்றாண்டை சார்ந்த 17 அரியவகை நாணயங்கள் கிடைத்தது.
இதுகுறித்து நெமிலி தாசில்தார் பாலசந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பகுதிக்கு விரைந்து வந்த தாசில்தார் அரியவகை நாணயங்களை பார்வையிட்டார். பின்னர் இதனை மீட்டு தற்போது நெமிலி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வின் போது வருவாய் ஆய்வாளர் கனிமொழி,கிராம நிர்வாக அலுவலர்கள் ரகு, இளவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- சத்தம் கேட்டு குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
வேலூர் மாவட்டம் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது(40).
இவர் இந்திய ராணுவத்தில் லடாக் பகுதியில் சிக்னல் ெரஜ்மெண்டில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 20-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடிபோதையில் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள சின்ன மேட்டு குடிசை கிராமத்துக்கு பைக்கில் சென்றார்.
அப்போது மேட்டு குடிசை பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் மேட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி 20 கிராம் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.
அப்போது சத்தம் கேட்டு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்.
வீடு புகுந்து நகை திருடிய பன்னீர்செல்வத்தை பிடித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- எடை குறைவாக வழங்கியதால் நடவடிக்கை
- கலெக்டர் வளர்மதி உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று வாலாஜா ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வாலாஜா அடுத்த வன்னிவேடு மோட்டூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது திடீரென அங்குள்ள ரேசன் கடைக்கு சென்று, ரேசன் கடையில் பொருட்கள் இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் எடையை பார்வையிட்டார். பொதுமக்களிடம் ரேசன் கடையில் வேறு பொருள்கள் வாங்க கட்டாயப்ப டுத்துகிறார்களா எனவும் கேட்டறிந்தார்.
பின்னர் ரேசன் கடையில் பொருட்களின் எடை மற்றும் இருப்பு குறைவு ஆகியவற்றிற்காக ரேசன் கடை ஊழியருக்கு ரூ.500அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டு, மாணவ, மாணவிகள் வருகை பதிவேடு, கற்றல் திறன், உணவின் தரம், மையத்தின் சுகாதாரம் ஆகியவற்றை கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.
- குறைத்தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுக்கா அலுவலக கூட்டரங்கில் தாசில்தார் பாலசந்தர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணைதாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையிடத்து துணை தாசில்தார் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நெமிலி வேளாண்மை துறைக்கு புதிய சேமிப்பு கிடங்கு கட்டவேண்டும். நெல் அறுவடை பருவத்திற்கு கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்ய வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிக்கால்வாய், குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன்உதவி பெறவழிவகை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அருணாகுமாரி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி செயல்அலுவலர் சரவணன், விவசாய சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சுபாஷ், சுப்பிரமணி உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- 2 பேர் போக்சோவில் கைது
- சிறையில் அடைப்பு
ராணிப்பேட்டை:
ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் இருவரும் காலையில் வேலைக்காக வீட்டை விட்டு சென்று, இரவு வீடு திரும்புவது வழக்கம்.
அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் சிறுமியின் வீட்டின் சுவர் ஏறி குதித்து வீட்டினுள் சென்று தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதை வெளியில் கூறினால் உன் அப்பா, அம்மாவை ஒழித்துவிடுவேன் என மிரட்டி அடிக்கடி வீட்டுக்கு வந்து சிறுமியிடம் முனியாண்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். முனியாண்டி சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதை பார்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சந்திரன் (55) என்பவரும், சிறுமியிடம் தொந்தரவில் ஈடுபட்டது தெரிந்தது.
கடந்த சில நாட்களாக வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்து உள்ளனர். அப்போது, சிறுமி நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், சப் - இன்ஸ்பெக்டர் சீதா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முனியாண்டி மற்றும் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபாமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 23). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக தனது பைக்கில் ஐயம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கட்டளை அருகே வரும்போது எதிரே வந்த டிராக்டர் இவர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது.
இதில் ஜெகன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் குட்கா பயன்படுத்த கூடாது என அறிவுரை
- போலீசார் விழிப்புணர்வு
நெமிலி:
பாணாவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் போதைபொருள் பழக்க தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கோபி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கலந்துகொண்டார்.
இதில் பாணாவரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மாணவர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே பள்ளி மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேலும் சிறந்து விளங்க வேண்டும்.
இது போன்ற குட்கா பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில் மென்மேலும் உயர உதவும்.
ஆசிரியர்களை மதிக்க வேண்டும். ஆசிரியர்கள் சொல்லித்தரும் பாடங்களை நன்கு கவனித்து, பெற்றோரின் கனவுகளை நனவாக்க நன்றாக படித்து உயர வேண்டும்.
மேலும் தங்கள் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குட்கா பொருட்கள் இல்லாத ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைமுடியினை ஒழுங்காக வெட்டவேண்டும்.ஆடைகளை சரியான முறையில் அணிய வேண்டும்.
விளையாட்டிலே முக்கியத்துவம் கொடுத்து உயர்நிலைக்கு செல்லவேண்டும் என இவ்வாறு அவர் கூறினார். இதில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தடை
- மின் அதிகாரி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ராணிப்பேட்டை நகரம், முத்துக்கடை, ஆட்டோ நகர்,வீ.சி.மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு ரோடு,காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய அலுவலக செயற்பொறியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
- போலீசார் உறுதிமொழி ஏற்றனர்
- அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் போலீசார் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விசுவேசுவரய்யா,குமார் உள்பட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் "குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி" ஏற்கப்பட்டது.






