என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் வெளியிட்டார்
    • திருத்தங்கள் மேற்கொள்ள 7 நாட்கள் அனுமதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் வெளியிட்டார்.

    இந்த வரைவு வாக்கு சாவடி பட்டியல் ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலகம், அரக்கோணம் வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் யாருக்கும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு வாக்கு சாவடி பட்டியல் வெளியிட்ட 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டுக் கொண்டார்.

    • கலெக்டர் பேச்சு
    • பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளிலும் சோதனை செய்ய அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான அவசர மைய தொலைபேசி சைல்ட் லைன் 1098 ஆலோசனைக் கூட்டம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த துறைகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்சோ தொடர்பான வழக்குகளை கையாளும் போது குழந்தைகளை பெற்றோர்கள் வழக்குப்பதிய தவறும் பட்சத்தில் குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இதுகுறித்து செய்திகள் வெளி வரும் போது அவமானம் என கருதி புகார் அளிப்பதை தவிர்க்கின்றனர்.

    எனவே விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடவும், குறிப்பாக பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். ஏனென்றால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்கான சட்ட நடவடிக்கைகளை தெரிந்து கொண்டால் நேரடியாக வழக்கு பதிவு செய்ய முன் வருவார்கள். இதனால் தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.

    பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும், பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பும் போதும் முக்கிய வழித்தடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் உள்ள கடைகளை கண்காணித்து கடைகளில் என்னென்ன தின்பண்டங்கள் விற்கப்படுகிறது என ஆய்வு செய்ய வேண்டும்.தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் சாக்லேட் வடிவில் கூட விற்பனைக்கு வருகிறது.அதனை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து கடைக்கு சீல் வைத்து, கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சைல்ட் லைன் 1098 விழிப்புணர்வு குறித்து மின்னணு திரைகள் வைக்க அனைத்து வட்டங்களிலும் இடம் தேர்வு செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் சைல்ட் லைன் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்டத்தின் பொது மேலாளர் மோகனவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், மாவட்ட நீதிபதி நவீன் துரைபாபு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம், நன்னடத்தை அலுவலர் ஏகாம்பரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டிரைவர், கண்டக்டர்கள் அறிவுரை வழங்க வேண்டும்
    • கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் தனியார் பஸ்சில் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி செல்கின்றனர்.

    இதனால் எந்த நேரத்திலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த நேரத்தில் மாணவர்களின் நலனை எதிர் காலத்தை கருத்தில் கொண்டு படியில் பயணம் செய்வதை தவிர்க்க அறிவுரை வழங்க வேண்டும்.

    மேலும் இந்த வழித்தடத்தில் கூடுதலாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிரைவரின் கட்டுபாட்டை இழந்து மரத்தில் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூரில் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இந்த ஷூ கம்பெனியில் கலவை அருகே உள்ள பாலி, ராந்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.

    வேலை செய்யும் தொழிலாளர்களை ஷூ கம்பெனி வேன் மூலம் தினமும் கம்பெனிக்கு அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை ஆற்காடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் கம்பெனிக்கு சொந்தமான வேனில் 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களை ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்து கொண்டு இருந்தார்.

    வேன் முள்ளுவாடி கூட்ரோடு அருகே வந்தபோது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை இடது பக்கம் திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் வந்த ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் கீதா, சிவகுமாரி, சாந்தி, வெண்ணிலா, நந்தினி, கவிதா வேன் டிரைவர் சூர்யா, லோகேஸ்வரன், சிவலிங்கம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து கலவை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • போதை பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிச்சைக்காரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சசிகலா கார்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், காங்கிரஸ் சோளிங்கர் ஒன்றிய தலைவர் கார்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் புல்லட் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அரசின் விலையில்லா 110 சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். மாணவ மாணவிகள் நன்றாக படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தர வேண்டும்.

    மாணவர்கள் நன்றாக படித்து டாக்டர், கலெக்டர், போலீஸ் அதிகாரியாகவோ பொறுப்பேற்று சமுதாயத்திற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும், போதை பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சமையல் அறை கட்டிடம், பள்ளி வளாகத்திற்கு தரை தளம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

    அப்போது பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாஞ்சாலை, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தவமணி, தினகரன் மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • சோளிங்கர் தக்கான் குளத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தக்கான்குளத்தில் வெள்ள பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    மழைக்காலத்தின் போது நீர்நிலைகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களையும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள் செவிலியர்கள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் என வெள்ள பேரிடர் கால ஒத்திகை செய்தனர்.

    அப்போது தாசில்தார் கணேசன் பொதுப்பணித்துறை அலுவலர் சேரலாதன், தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் இளங்கோவன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் கிராம நிர்வாக உதவியாளர் ஆதிகேசவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் சதுர்த்தியையொட்டி நடந்தது
    • முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காட்டில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பொதுமக்களிடத்தில் அச்சத்தினைப் போக்கும் வகையில் ஆற்காடு நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த 145 போலீசார் ஆற்காடு அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது.

    இதில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, மற்றும் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் உள்பட போலீசார் கலந்து கொண்டு துப்பாக்கியை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆற்காடு:

    ஆற்காடு நகர்மன்றக் கூட்டம் ஆற்காடு நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    தட்சிணாமூர்த்தி: நகர்ப்புற சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ஏ.என்.செல்வம்: தோப்புகானா பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையற்ற பொருள்களை வைத்துள்ளனர். மருத்துவமனை சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது.

    லோகேஷ்: ஆற்காடு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சாலைகளில் நடைபாதை இல்லை, நடைபாதை அமைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

    சுகாதார ஆய்வாளர்: கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாவை: நகரின் பல இடங்களில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும்.

    பாஞ்சாலி: தோப்புகானா நகராட்சி வடக்கு பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துதரவேண்டும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    காமாட்சி: எனது வார்டில் மின் கம்பங்கள் சரியில்லை. தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை, பன்றித் தொல்லை, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

    பொறியாளர்: புதிய மின் கம்பங்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. பன்றிகளை பிடிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜலட்சுமி: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள புல்பூண்டு செடிகளை அகற்றவேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் கண்ணன், குணாளன் கொண்டனர்.பல்வேறு தீர்மானங்கள் முனவர்பாஷா, உள்ளிட்டோர் கலந்து கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டன.

    • அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
    • ரூ.2.20 கோடியில் அமைக்கப்படுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வளாகத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்திதிருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல மேலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கு நிறுவன வளாகத்தில் கூடுதலாக 3,400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடக்கு 1850 ச.மீ பரப்பளவில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சேமிப்பு கிடங்கு கட்டும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் ராஜேந்திரன், கிடங்கு மேலாளர் சீனிவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கமல விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விடியற்காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கமல விநாயகர் சாமிக்கு பால், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரமாக வெள்ளிக் கவசம் அணிவித்து, வெட்டிவேர் மாலை, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    கமலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கலெக்டர் தகவல்
    • 23 ஆயிரத்து 578 பேர் பயனடைந்தனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், 12 வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சார்பில் 2037 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டிலும், 4 நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் 4974 பயனாளிகளுக்கு ரூ.18 கோடியே 70 ஆயிரம் மதிப்பீட்டிலும், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் 11 ஆயிரத்து 463 பயனாளிகளுக்கு ரூ.35 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலும், 9 நகர கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 4201 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 23 லட்சம் மதிப்பீட்டிலும், 2 கூட்டுறவு விற்பனை சங்கங்கள் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டிலும்,

    3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் சார்பில் 848 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 23 ஆயிரத்து 578 பயனாளிகளுக்கு 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் ரூ.76 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    • கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தில் புதுத் தெரு சந்திப்பில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    நேற்று முன்தினம் கலச பூஜை, மூலமந்திர மகா கணபதி ஹோமம் நடந்து ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் உலா நடந்தது.

    ×