என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
    • நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பரவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னப்பரவத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுடுகாட்டுக்கு செல்லபாதை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அவர்கள் பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டார் . அதைத்தொடர்ந்து சோளிங்கர் வருவாய் ஆய்வாளர் சதிஷ் குமார், நில அளவை அலுவலர் சார்லஸ் மற்றும் கிராம் உதவியாளர்கள் சென்று சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கான நிலம் உள்ளதா என ஆய்வு செய்து பின்னர் அரசு நிலத்தை அளவீடு செய்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் தனம்மாள் மணிகண்டன், ஒன்றியக் குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர் .

    • நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது
    • நாளை நடைபெற இருந்தது

    ராணிப்பேட்டை:

    ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுவதாக இருந்தது.

    நிர்வாக காரணங்களால் அன்று நடைபெற இருந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த கூட்டம் தேதி சென்னை ஓய்வூதியர் இயக்குனரிடம் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    ஏற்கனவே ஓய்வூதியர் குறை தீர்வு நாள் கூட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்திருந்த ஓய்வூதியர்கள் மற்றும் விண்ணப்பம் தொடர்புடைய துறை அலுவலர்கள் யாரும் கலெக்டர் அலுவலகம் வரத் தேவையில்லை.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • மகள் மஞ்சள் நீராட்டு விழாவில் மனைவி திட்டியதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வடகண்டிகை பகுதியை சேர்ந்தவர் இருசப்பன் மகன் பார்த்திபன் (51) விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இவர் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பார்த்திபன் மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பார்த்திபனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த பார்த்திபன் அங்கிருந்து சென்று விவசாய நிலத்தில் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கம் அடைந்தார்.

    பக்கத்து நிலத்தை சேர்ந்தவர்கள் பார்த்து அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்கடர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 100 நாள் வேலை வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மோசூர் ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை தர மறுப்பதாக கூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அரக் கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் முனிசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகள் எச்சரிக்கை
    • சாலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகிறது

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் பிளாஸ்டிக் கழிவுகளை குறிப்பிட்ட நேரத்தில் அகற்றி உலக சாதனையில் இடம் பிடித்தது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தை முன்மாதிரியாக கொண்டு பல மாவட்டங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் தீவிரம் காட்டினர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மீண்டும் தொடர்ந்து பயன்ப டுத்தினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது குறைந்தது.

    ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதிலும், பிளாஸ் டிக் கவர்களை பயன்படுத்துவதிலும் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டல்கள், டீக்கடைகள, மளிகைக் கடை களில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் மீண்டும் தெருக்களிலும், சாலைகளிலும் பிளாஸ் டிக் கழிவுகள் அதிகமாக காணப்படுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

    • 20 இடங்களில் ‌விநாயகர் சிலைகள் வைத்து பூஜை
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 20 இடங்களில் ‌விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன், மணிகண்டன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு தொழில் அதிபர் ஏவி சாரதி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    உடன் இந்து முன்னணி கோட்டை தலைவர் மகேஷ், முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், ஆகியோர் கொண்டு இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கணபதி நகரில் உள்ள ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    ஆற்காடு கலவை ரோட்டில் உள்ள தாலுகா அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கணபதி நகர் ஏரியில் கரைக்கப்பட்டன.

    இதில் இந்து முன்னணி தொண்டர்கள் ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
    • ஏராளமானோர் பங்கேற்பு

    அரக்கோணம்:

    கல்வி மற்றும் ஆய்வறிவு அறக்கட்டளை (செல்ப்) சார்பில் ஏழை மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 6 பள்ளிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 9 மாணவிகள், 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா அரக்கோணம் அரசினர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கவுதம் தலைமை தாங்கினார். செல்ப் அறக்கட்டளை செயலாளர் கோவி.பார்த்திபன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கே.மகாலட்சுமி, செல்ப் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் அம்பேத்ஆனந்தன் பி.ஜேம்ஸ், பா.கேசவன், பெ.பெளத்தரசி ஜி.முருகேசன், கொ.சுந்தரம், க.கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அரக்கோணம் பரமேஸ்வரமங்களம், காவனூர், ஆலப்பாக்கம், குண்ணத்தூர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கே.மகாலட்சுமி, அ.பிரின்ஸ்தேவா சீர்வாதம், கே.ரவி, ஏ.டி.தயாநிதி, டி.இளவழகன், ஏ.நித்தியானந்தன் ஆகியோர்களுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கி செல்ப் அறக்கட்டளையை பாராட்டினார். கோட்டாட்சித்தலைவர் பாத்திமா, நகராட்சி ஆணையாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்பராயன், அன்னை தெரேசா கிராம வளர்ச்சி நிறுவன தலைவர் ஆசிர்வாதம், கவிஞர் மு.இஸ்மாயில், கீழ்வீதி தலைமை ஆசிரியர் ஏசுபாதம், உதவி தலைமை ஆசிரியர் கே.முருகன், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் தோத்ராவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இறுதியாக சாரணிய வழிகாட்டி ஆசிரியர் இ.ரஜினிப்பிரியா பள்ளிகளுக்கு- மாணவிகளுக்கு-ஆசிரியர்களுக்கு உதவி செய்த அறக்கட்டளை காப்பாளர்கள் ச.வேலாயுதம், வி.பாலாஜி, கே.ராஜேஷ், எம்.பாஸ்கர் ஆகியோர் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது
    • 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாலாஜாபேட்டை இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வேலூர் கோட்டை அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். வாலாஜா நகர தலைவர் பிரேம்குமார் முன்னிலையில் கல்வி நிறுவன தலைவர் மகேந்திரவர்மன் கொடியை சேர்த்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகி மோகன் வரவேற்றார்.

    ஊர்வலம் வாலாஜா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து தொடங்கி புஜனராவ் தெரு எம்.பி.டி சாலை, பஜார் வீதி, ட்ரங்க் ரோடு வழியாக விசி மோட்டூர் சென்று அங்குள்ள ஏரியில் சிலைகளை கரைக்கப்பட்டது.

    ஊர்வலத்தில் அனுமன் சிலம்பு மன்ற குழுவினர் சார்பில் சிலம்பாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஊர்வலத்தில் இந்து முன்னணி சென்னை மாநகர செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனை வளர்ப்போம் என்ற தலைப்பில் பேசினார்.

    இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் இந்து அமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கிவைத்து வாகனத்தை பார்வையிட்டு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், வினோத், ஊராட்சிமன்ற தலைவர் ஏ.கே.முருகன், நகர செயலாளர் பூங்காவனம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ் சுவாமிகள் ஆக்ஞைப்படி நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வராஹி, காளி, சூலினி, திரிபுர, பைரவி என 5 முகங்களுடன் காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு பிரதி பஞ்சமி திதி தோறும் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறும்.

    அதன்படி நேற்று மாலையில் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு வராஹி ஹோமமும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்கள் விவசாய நிலங்களில் விளைச்சல் பெருக, காரிய தடைகள் விலக, தோஷங்களிலிருந்து விடுபட, குடும்ப நிம்மதி போன்றவை உள்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக வராஹி அம்மனை வணங்கி தேங்காயில் நெய் வீட்டு தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரி இவரது மகள் சர்மிளா (4) நேற்று வழக்கம் போல் சர்மிளாவை அவர்களது பெற்றோர் நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்திலிருந்து பிற்பகல் வீட்டிற்கு செல்வதற்காக வெளியே சர்மிளா வந்துள்ளார்.

    அப்போது அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சித்த போது வாலாஜாவில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த லாரி சாலையை கடக்க முயன்ற சர்மிளா மீது மோதியது. இதில் சர்மிளா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் விபத்தில் இறந்த சிறுமியின் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வருகிற 4-ந்தேதி நடக்கிறது
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் 4-ந்தேதி நடக்கிறது.

    இது தொடர்பாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியை குறிப்பில் கூறியிருப்பதாவது: வாக்காளர் அட்டை உடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த 1-ந்் தேதி தொடங்கியது.

    வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்படுகிறது.இப்பணியை வருகிற 31/03/2023-க்குள் முடித்திட ஆணையிடப்பட்டுள்ளது.இந்த பணிக்காக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டபூர்வமான அதிகாரியாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இத்திட்டத்தின்படி இணைய வழிமுறையில் வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் https://nvsp.in மற்றும் https://voterportal.eci.gov.in ஆகிய இணையதளம் மூலமாகவும் voters helpline mobile app, GARUDA mobile app போன்ற செயலி வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்கண்ட வழிமுறைகளின் படி இணைய வழியில் விண்ணப்பிக்கும் முதல் ஆயிரம் நபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் இ-சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    ஆதார் எண் விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்கு சாவடி நிலை அலுவலர் ஆகியோருக்கு படிவம் 6 பியில் தெரிவித்து வாக்காளர் அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம். இப்பணிக்காக வருகிற 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    சிறப்பு முகாம் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடியில் வாக்கு சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6 பியை பூர்த்தி செய்து சமர்பிக்கலாம். ராணிப்பேட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்து 721 வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நகர்புற பகுதிகளை விட கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இனைத்துள்ளனர்.

    இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×