என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை
    • 28 மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வடதமிழக மாநில செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டை சிப்காட் ஸ்ரீ நவசபரி அய்யப்பன் கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வடதமிழக மாநில செயல் தலைவரும் குருசாமியுமான ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.

    மாநில பொது செயலாளர் ஜெயராமன், மாநில செயலாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் தினேஷ் வரவேற்றார். கூட்டத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தென் பாரத தலைவர் துரை சங்கர்ஜி பங்கேற்று ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் தமிழகத்தில் 1.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், 2.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், கிருஷ்ணகிரி, தருமபுரி, 3.ஈரோடு, சேலம், நாமக்கல், 4.கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மண்டலங்களில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா நடத்துவது, ஹரிவராசனம் அய்யப்ப தர்ம பிரசார யாத்திரையை அனைத்து ஊராட்சிகள், நகரம், பேரூராட்சி, மாநகர வட்டங்களில் கொண்டு சென்று சமாஜத்தின் யோகங்கள் தொடங்குவது என முடிவு செய்தனர்.

    இந்த கூட்டத்தில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தை சேர்ந்த 28 மாவட்ட தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பழனி நன்றி கூறினார்.

    • பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை புளியங்கன்னு பகுதியை சேர்ந்தவர்கள் மாதவன் (வயது 45), ஈஸ்வரன் (46). இவர்கள் இருவரும் பைக்கில் ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    திருத்தணி சாலையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் ' இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாதவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உணவுகள் குறித்து ஆலோசனை
    • அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் தோப்பளியம்மன் கோயில் தெருவில் ஊட்ட சத்து மாத விழா நடைபெற்றது.

    இதில் ரத்த சோகை ஏற்பட காரணம்அதன் விளைவுகள், உட்கொள்ள வேண்டிய இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த விழிப்புணர்வில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இரும்பு சத்துள்ள கடலை பர்பி, கமர்கட்டு, பேரீச்சம்பழம், வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய்.வழங்கப்பட்டது.

    இதில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, மேற்பார்வையாளர் விஜயகுமாரி, மற்றும் சோளிங்கர் நகராட்சி அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று நிறுத்தினர்
    • 18 வயது பூர்த்தி ஆகாததால் நடவடிக்கை

    அரக்கோணம்:

    பாணாவரம் பகுதியைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கும் வாலிபருக்கும் நாகுவேடு பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட அதிகாரிகள் மகளிர் போலீசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    இதை சற்று எதிர்ப்பாராத மணமகன் மற்றும் பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆகி உள்ளது என அவரது ஆதார் அட்டையை காண்பித்துள்ளனர். இதை ஆதாரமாகக் கொண்டுதான் திருமணம் நடைபெற்றது என கூறினர்.

    அரசு அதிகாரிகள் இந்த ஆதார் அட்டை செல்லுபடி ஆகாது பள்ளி சான்றுகளில் ஏதோ ஒன்று காண்பியுங்கள் என கேட்டனர். பள்ளி சான்றில் 18 வயது ஆவதற்கு சில நாட்கள் உள்ளதால் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • 1995ம் ஆண்டு ஆலை மூடப்பட்டது
    • அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு குரோமியம் தொழிற்ச்சாலை இயங்கியது.

    இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு இந்த ஆலை மூடப்பட்டது.

    சுமார் 27 ஆண்டுகளாக தொழிற்சாலை வளாகத்தில் குரோமியக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு இன்று ஆய்வு செய்தனர்.இந்த ஆய்விற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் கோ.வி.செழியன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார்.

    இந்த ஆய்வில் குரோமிய கழிவுகள் அகற்றுவது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ, செங்கம் கிரி எம்.எல்.ஏ, விருக்கம்பாக்கம் பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ மற்றும் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் பூங்கொடி, தாசில்தார் ஆனந்தன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்
    • 1,368 மாணவிகள் பயன் பெறுகின்றனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த 15 கல்லூரிகளில் உயர் கல்வி படிக்கும் 1,368 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.

    மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தினை தொடங்கி வைத்து வங்கி டெபிட் கார்டு மற்றும் வாழ்க்கை வழிகாட்டு புத்தகப் பைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
    • பாப்கான் கடை வைத்து திருடினர்

    நெமிலி :

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இங்கு பாப்கான் கடை நடத்தி வந்த 2 வடமாநில இளைஞர்கள் மக்கள் கூட்டமாக இருப்பதால் இதை பயன்படுத்தி கொண்டு மக்களிடம் 5 செல்போன்களை திருடி உள்ளனர்.

    பிடிபட்ட அந்த வட மாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர்.

    இதில் காயமடைந்த இளைஞர்கள் செல்போனை திருப்பி கொடுத்தனர். நெமிலி போலீசார் வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    • சிறப்பு கலச பூஜை, யாக பூஜை நடந்தது
    • ரூ.1 கோடியில் திருப்பணிகள் நடக்கிறது

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பேய்யாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமாகும்.

    இந்நிலையில் சிறியமலை யோக ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கடந்த1967 -ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்று 55 ஆண்டுகளுக்கு பிறகு.தற்போது ஒரு கோடி மதிப்பில் கோவிலை பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யப்பட்டு நான்கு மாதத்தில் யோக ஆஞ்சநேயர் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜகோபுர பாலாலாயம் முன்னிட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு கலச பூஜை, யாக பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் பூர்ணாஹூது நடைபெற்றது. தொடர் ராஜகோபுர திருப்பணிகான சிறப்பு பூஜை நடைப்பெற்றது பணிகள் தொடங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக உதவி ஆணையர் ஜெயா செய்து இருந்தார்.

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்

    ராணிப்பேட்டை:

    வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியின் பிறந்த நாள் முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து நடத்தும் ரத்த தான முகாம் இன்று ஜி.கே.மில்லேனியம் ஓட்டலில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.வியட்நாம் அயலக அணி அமைப்பாளர் வேதாசினிவாசன் முன்னிலை வகித்தார்.

    தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் தொன்பாஸ்கோ வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு ரத்ததானம் முகாமை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகர செயலாளர் பூங்காவனம், மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் வினோத், வன்னிவேடு ஊராட்சிமன்ற துணை தலைவர் பாலாஜி உள்பட சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் திமுக பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    இறுதியில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
    • கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள பூட்டுத்தாக்கு பெரிய தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 40).இவரது மனைவி சரிதா (27). இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்த இவர்கள் தற்போது பூட்டுத்தாக்கில் தங்கி பெருமுகையில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் சரிதா எந்நேரமும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.இந்த நிலையில் சரிதா கடந்த 25-ந் தேதி காணாமல் போனதாக ராமு ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராமு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பகுதி மக்கள் ரத்தினகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ராமுவின் வீட்டு வளாகத்தில் உள்ள உரை கிணற்றில் பார்த்தபோது மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்த மூட்டையை வெளியே எடுத்துபோது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் பிணம் இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது காணாமல் போன சரிதாவின் உடல் என தெரியவந்தது.

    இதையடுத்து சரிதாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரிதா எந்நேரமும் செல்போனில் பேசி வந்ததால் அவரது கணவர் சரிதாவை கொலை செய்து கிணற்றில் வீசினாரா என சந்தேகத்தின் பேரில் ராமுவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே போலீசாருக்கு தகவல்
    • வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு

    நெமிலி:

    பாணாவரத்தில் உள்ள சோளிங்கர் ரெயில் நிலையம் - அருகே சென்னை - மைசூரு செல்லும் ரெயிலில் கடத்துவ தற்காக முட்புதரில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டி ருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் ஹேமந்தகுமார், ஏட்டு சுப்பிரமணி, போலீஸ் காரர் வீரேஷ்குமார் ஆகி யோர் சென்று 8 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளை பாணாவரம் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    • 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
    • கலெக்டர் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள இசுலாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த சிறுபான்மைனா மக்களின் பொருளாதாரத்தை பயன்படுத்தும் வகையில் டாம்கோ கடன் திட்டம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்வி கடன், கறவை மாடு வாங்க கடனுதவி மற்றும் ஆட்டோ கடன் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

    ஆண்டு வருமானம் கிராம புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருத்தல் வேண்டும். இத்திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

    டாப்செட்கோ கடன் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டு மற்றும் சீர்மரபினர் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ள பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம், சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கான சிறு கடன் திட்டம் கறவை மாடு கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர் பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்தக் கடன் உதவி திட்டங்கள் தாய்கோ வங்கி, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

    டாம்கோ மற்றும் டாப்செட்கோ திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்), ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்), வங்கிகள் கூறும் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் வருகிற 15-ந் தேதி, அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் 16-ந் தேதி, நெமிலி தாலுகா அலுவலகத்தில் 20-ந் தேதி, சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் 21-ந்‌தேதி, ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் 22-ந் தேதி, கலவை தாலுகா அலுவலகத்தில் 23-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. கடனுதவி பெற விரும்புவோர் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    ×