என் மலர்
ராமநாதபுரம்
- கீழக்கரை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
- நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தனர்.
கீழக்கரை
கீழக்கரை நகர் மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் செஹனாஸ் ஆபீதா தலைமையிலும், துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. இளநிலை உதவியாளர் உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-
ஹமீது சுல்த்தான் (துணை சேர்மன்) :- நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்ப டும் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி துணைத் தலைவர் அல்லது குறிப்பிட்ட கவுன்சிலர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது கிடையாது.
இந்த நடைமுறையை மாற்றி திட்டபணிகள் மதிப்பீடு செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் வார்டு களில் ஏதேனும் பணி செய்தால் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுங்கள். நக ராட்சி அலுவலர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட வேண்டும்
ஷேக் உசேன்:- ஒவ்வொரு கூட்டத்திலும் நான் கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் குறிப்பு எடுக்கிறீர்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. கண்துடைப்பாக உள்ளது.
கீழக்கரை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்களை சுகாதார அலுவலர்கள் முறைப்படி ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே குடிநீர் வினியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இந்த வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வ தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
முகம்மது பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,800 வசூல் செய்யப்படுகிறது. ஆனால் மாநகராட்சியிலேயே ரூ.1,200 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இதன் மேல் தனிகவனம் செலுத்தி கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
வார்டு வரையரையை உடனடியாக செய்ய வேண்டும். தெருவில் சுகாதார பணியாளர்கள் சரிவர துப்புரவு பணி மேற்கொள்வதில்லை. முறையாக குடிநீர் வருவது இல்லை.
கீழக்கரை நகரில் அதிகமான மாடுகள் சாலை களில் உலா வருகிறது. மழை நீர் தேங்கிய இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாவதால் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
இறுதியாக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபீதா, நகர் மன்ற உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் அருள், பணி மேற்பார்வையாளர் சாம்பசிவன், அலுவலக மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
- உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் சேர்ந்து 18 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக பதிவு செய்தனர். வேளாண் துறையின் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து தரப்பட்டது. விவசாயிகள் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி சோளம் பயிர் செய்திருந்தனர்.
அதனை வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி தரிசு நிலத் தொகுப்பில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்தார். தரிசு நிலத்தில் இருந்து கருவேலம் மரங்களை அகற்றி விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.இதே போல் முஷ்டகுறிச்சி பகுதியிலும், பசும்பொன் கிராமத்தில் விவசாயி ராஜம்மாள் அமைத்திருந்த விதைப் பண்ணையையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கமுதி வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி, உதவி விதை அலுவலர் சரவணன், உதவி வேளாண்மை அலுவலர் உதயலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் இந்துமதி, தொழில்நுட்ப வேளாண்மை மேலாண்மை முகமை அலுவலர் ஈசுவரி ஆகியோர் உடனிருந்தனர். அபிராமத்தில் உள்ள உரக்கடைகளை ஆய்வு செய்த இணை இயக்குநர் சரசுவதி கடை உரிமையாளர்களிடம் உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டும் விற்க வேண்டும், கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது, உரங்களுடன் மற்ற இணைப்பு பொருள்களை வாங்க விவசாயிகளை வற்புறுத்தக்கூடாது என அறிவுறுத்தினார்.
- எக்ககுடி ஊராட்சியில் வரத்து கால்வாய்களை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம், எக்ககுடி ஊராட்சியில் பாசன கண்மாயை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது எக்ககுடி ஊராட்சி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரக்கூடிய கால்வாய் சேதமடைந்தும், ஆக்கிரமிப்பு களாலும் தண்ணீர் வராமல் விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பாசன கண்மாயை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புதுக்குளம், கொத்தங்குளம் பாசன கண்வாய்களுக்கு எட்டிவயல் கால்வாய் மற்றும் ரகுநாதபுரம் கால்வாய் வழியாக வைகை ஆற்றில் இருந்து இந்த பகுதிகளுக்கு பாசன பயன்பாட்டிற்கு தண்ணீர் வந்தது. தற்போது 2 கால்வாய்களும் ஆக்கிர மிப்புகள் மற்றும் சீரமைப்பு பணிகள் இல்லாமல் இருந்து வரும் நிலையை பார்வை யிட்டதுடன் உடனடியாக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கி ணைந்து கள ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர் கொத்தங்குளம், எக்ககுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவி களிடம் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் சுகாதார வளாகம் தூய்மையாக உள்ளதா? என பார்வையிட்டார்.
தூய்மை பணியா ளர்களிடம் குழந்தைகள் பயன்பாட்டிற்குள்ள சுகாதார வளாகங்கள் தூய்மையாக இருக்கும் வகையில் தினமும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து எட்டிவயல் பெரிய கண்மாயின் கழுங்கு பகுதிகளை பார்வையிட்டு அங்கிருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதிகளை சீரமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எட்டிவயல் ஊராட்சியில் உள்ள கிளை நூலகத்தை பார்வையிட்டு அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான புத்தகங்கள் இருப்பு வைக்க வேண்டும்.
ஊராட்சிகளில் நாள்தோறும் சேரிக்கக் கூடிய குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் தரம் பிரித்து அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். மற்ற ஊராட்சிகளில் ஆய்வின்போது திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் செயல்படாமல் இருப்பது கண்டறிந்தால் அந்த ஊராட்சியில் அபராதம் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஊராட்சிகள் தூய்மையாக இருப்பதற்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராமர், கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் மற்றும் விவ சாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
- அபிராமம் பகுதியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.
அபிராமம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பாமர மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.
மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்றும் பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வைத்துள்ள வர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அபிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.
இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
- இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.
இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.
இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.
இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- மேற்கு வங்க மாநிலம் குழிகுக்வா பகுதியை சேர்ந்த காசியான் என தெரியவந்தது.
- காசியானின் விசா காலம் முடிவடைந்தும் அதனை புதுப்பிக்காமல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் உள்ள மணல் திட்டில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்கிடமாக நின்றிந்தார். இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனே மண்டபம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் குழிகுக்வா பகுதியை சேர்ந்த காசியான்(வயது 41) என தெரியவந்தது. நகை ஆசாரியான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சென்று அங்குள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
காசியானின் விசா காலம் முடிவடைந்தும் அதனை புதுப்பிக்காமல் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதால் நாடு திரும்ப முடிவு செய்தார். ஆனால் விசா இல்லாததால் இலங்கயைில் இருந்து கள்ளப்படகு மூலம் தனுஷ்கோடிக்கு காசியான் வந்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
- கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் பிடிபட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு குற்ற நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச்சென்று ஒரு 17 வயது சிறுவனை பிடித்தனர்.
விசாரணையில் அவர், வேதாளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகு ஒன்றில் 35 மூட்டைகளில் மஞ்சள் அடுக்கி வைத்து இருப்பதாகவும், அதனை இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து சென்று அந்த நாட்டுப்படகையும், 35 மஞ்சள் மூட்டைகளையும் கைப்பற்றினர். அந்த மூட்டைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ மஞ்சள் இருந்தது.
பின்னர் அந்த நபரை மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் மற்றும் பிடிபட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஒடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இதே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 300 கிலோ போதை பவுடர் பிடிபட்ட சம்பவத்துக்கு மறுநாளே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ மஞ்சள் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- ராமநாதபுரம் அருகே 24 மணி நேரம் சுருள்வாள் சுற்றி பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
- நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் இல்ம் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு சார்பில் சுருள்வாள் சுற்றும் போட்டி நடந்தது. இதில் 24 மணி நேரம், 24 நிமிடம், 24 நொடிகள் சுருள்வாள் சுற்றி மதுரை தனியார் பள்ளியை ேசர்ந்த பிளஸ்-2 மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். இல்ம் மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி தேவராஜ் வஸ்தாபி சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய சாதனை நிகழ்ச்சியில் மாணவர் ஹரிஸ் பாக்கியராஜ் சாதனை படைத்தார். அவர் கூறுகையில், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதனை படைத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க தயாராக இருக்கிறேன். எனது முயற்சியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு சான்றிதழை ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு நிறுவனத்தின் நடுவர் ஹரிஹரன் வழங்கினார். இதில் சிலம்பாட்ட கழக ஒருங்கிணைப்பாளர் அருள் அந்தோணி, அந்தோணி பாஸ்டின், பள்ளி தாளாளர் நூருல் அமீன், நிர்வாகிகள் முகம்மது ஆரிப், அண்ணல் முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது.
- குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடலோர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காரில் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்கள் 30 இருந்தன. அதில் அனைத்து கேன்களிலும் வெள்ளை நிற பவுடர் நிரப்பப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த கேன்களை திறந்து அதில் இருந்த பவுடரை எடுத்து சோதித்தனர். அது போதை பவுடர் என தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த போதை பவுடரை காரில் ஏற்றி வந்ததாக கீழக்கரை சங்கிலி தெருவை சேர்ந்த நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஜெய்னுதீன் (வயது 45), அவரது தம்பி கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ்(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். போதை பவுடர் கேன்கள், அதை ஏற்றி வந்த ஆடம்பர கார் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிப்பட்ட போதை பொருள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார்கூறியதாவது:-
தண்ணீர் கேன்களில் நிரப்பி கொண்டு வந்தது, கொக்கேன் ரக போதை பவுடராக இருக்கலாம் என தெரியவருகிறது. இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும். இலங்கைக்கு கடத்துவதற்காக நூதன முறையில் தண்ணீர் கேன்களில் அடைத்து வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் கொண்டு வந்துள்ளனர். இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மேலும் சிலரை தேடிவருகிறோம். இவர்கள் ஏற்கனவே இதுபோன்று போதை பொருளை இலங்கைக்கு கடத்தி இருக்கிறார்களா? இலங்கையில் யாருக்கு அனுப்பி வைக்க இருந்தார்கள்? என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் தெரியவரும். குஜராத் மாநிலத்தில் இருந்து உரம் என்று சென்னை வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க கோரி எஸ்.டி.பி.ஐ. பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இதில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாநில நிதி குழு நிதி வருவதில்லை.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜெமிலுனிஷா, ஜஹாங்கிர் அரூஷி, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் சோமு, சுலைமான் பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், செயலாளர் நஜ்முதீன், பொருளாளர் ஹசன் அலி, எஸ்.டி.டி.யு. மாநில செயற்குழு உறுப்பினர் காதர் கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சோமு வரவேற்றார். மக்கள் தொடர்பு அதிகாரி நஜ்முதீன் தொகுத்து வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் வெளியே அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும்
ராமநாதபுரம்-கீழக்கரை ரெயில்வே மேம்பாலம் நீண்ட காலமாக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை தூர்வார வேண்டும். ஊராட்சி தலைவர்களின் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கும் வரம்பு ரூ.2 லட்சமாக உள்ளது, அதை உயர்த்தி ரூ.5 லட்சம் வரையிலான பணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 ஊராட்சிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மாநில நிதி குழு நிதி வருவதில்லை. அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை தொகுதி தலைவர் ஹனீப் நன்றி கூறினார்.
- அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
- இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.
அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.
இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- உரத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரது நாட்டுப்படகில் உரத்தை கடத்த திட்டமிட்டிருந்த தகவலை தெரிவித்தனர்.
பனைக்குளம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபத்தில் வேதாளை கடற்கரை சாலை பகுதியில் கடலோர காவல்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த காரில் கீழக்கரை சங்குலி தெருவை சேர்ந்த சார்பாஸ் நவாஸ் (வயது 42), ஜெயினுதீன் (45) ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர், அவர்களது காரை சோதனை செய்தனர்.
அப்போது அவர்களது காரில் ஏராளமான பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உள்ளே உரம் நிரப்பப்பட்டிருந்தது. அதுபற்றி நவாஸ் மற்றும் ஜெயினுதீனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் உரத்தை தண்ணீர் கேனில் அடைத்து, நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்தனர். அவர்களது காரில் ஒரு கேனில் தலா 12 கிலோ வீதம் 30 பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களில் 350 கிலோ உரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும், உரத்தை கடத்திச் செல்ல பயன்படுத்திய காரையும் கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உரத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சார்பாஸ் நவாஸ், ஜெயினுதீன் ஆகிய இருவரும் மண்படத்தில் உள்ள கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? யார் மூலம் உரத்தை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தனர்? என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் மண்டபம் அருகே உள்ள வேதாளை தெற்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அலி என்பவரது நாட்டுப்படகில் உரத்தை கடத்த திட்டமிட்டிருந்த தகவலை தெரிவித்தனர்.
அவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்கவில்லை. அவரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சார்பாஸ் நவாஸ் கீழக்கரை நகராட்சியில் 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். ஜெய்னுதீன் முன்னாள் கவுன்சிலர் ஆவார். 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






