என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    வேலை வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்கு.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் நாகசுதா(வயது 32). இவர் தற்காலிகமாக அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு, 

    புதுக்கோட்டை சுப்பிரமணியன் நகரை சேர்ந்த சுப்பையா மகன் முருகனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது தான் பலபேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளேன். அதே போல் உன்னுடைய தற்காலிக வேலையை நிரந்தர அரசு வேலையாக மாற்றி வாங்கி தருகிறேன் என்றும் அதற்கு செலவிற்கு ரூ.11 லட்சம் வேண்டும் என்று நாகசுதாவிடம், முருகன் கூறியுள்ளார்.

    இதனை நம்பி நாகசுதா பணத்தை கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால்  இதுவரை வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நாகசுதா, புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரெண்டை நேரில் சந்தித்து புகார் செய்துள்ளார். 

    அதன்பேரில் புதுக்கோட்டை நகர நிலைய போலீசார் முருகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முருகன் ஏற்கனவே மயிலாடுதுறையில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் தற்போது மயிலாடுதுறை போலீசார் முருகனை கைது செய்துள்ளனர். முருகனை தங்களது கஸ்டடியில் எடுக்க புதுக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    கறம்பக்குடி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி  சாலையில் உள்ள  முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப் பட்டு கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் உள் ளிட்ட பல்வேறு பூஜைகள் நடை பெற்றது. 

    நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களைதலையில் சுமந்தப்படி கோவிலை சுற்றி வலம் வந்தனர்.  

    பின்னர் முருகன் கோவில் மூலஸ்தான விமான 5 கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம்  முழங்க  புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். 

    விழாவிற்கான  ஏற்பாடு களை கறம்பக்குடி  பழனி பாதயாத்திரை குழு நிர்வாகி கள் செய்திருந்தனர்.கறம்பக்குடி போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.    

    விழாவில் அப்பகுதியை சேர்ந்த  பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கந்தர்வகோட்டையில் தேரோடும் வீதி சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் வேம்பன்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சாமி திருக்கோவில் பங்குனி   உத்திரதிருவிழா நடை பெற்று   வருகிறது.  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு நடைபெற உள்ளது. 

    இந்த நிலையில் தேரோடும் வீதிகளில் புதிய தார் சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நடை பெறும் திடல் ஜல்லி கற்கள் குவியலாக காட்சியளிக்கிறது. 

    இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சாலை பணிகளும் திடலில் உள்ள ஜல்லி கற்கள் அகற்றப் படாததால், திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். 

    எனவே பணிகளை விரைந்து முடிக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும்  மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.  

    கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 95- 96ம் ஆண்டில் மேல்நிலை வகுப்பில் படித்த 41 மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளியின் நூலக கட்டிடத்தை சீரமைத்தும், மேஜை, நாற்காலிகள் மற்றும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கும் விழா நடைபெற்றது. 

    விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பள்ளியின் நூலக கட்டிடத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் முன்னாள் மாணவ, மாணவிகள் வழங்கினர்.  


    நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    பைக் மீது கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    புதுக்கோட்டை :

     
    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 47) நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினருடன் திருச்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்தார். 

    கார் அறந்தாங்கி & புதுக்கோட்டை சாலையில் எரிச்சி அருகே வரும் போது எதிரே ஒத்தக்கடையை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. 

    இதில் காரை ஓட்டி வந்த சண்முகநாதன் அவரது மனைவி விஜயலெட்சுமி (45) மகன் பார்த்திபன் (17) ஆனந்தமூத்தி மனைவி அமுதா (52) மாரிமுத்து மகன் பாலசிதம்பரம் (16) பைக் ஓட்டி வந்த சேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
    இதில் சண்முகநாதன் மகன் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

    உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அமுதா உயிரிழந்தார். மற்றவர்கள் அறந்தாங்கி, திருச்சி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குடும்பதகராறில் தீக்குளித்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள களபம் ஊராட்சி  சூத்தியம்பட்டியை சேர்ந்தவர் குமார்  (வயது 55). இவருக்கும் இவரது மனைவிக்கும்  இடையே குடும்பபிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்தநிலையில்  கடந்த 11-ந் தேதி குமார்அவரது வீட்டில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

    இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே  அவரை  மீட்டு புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    மணமேல்குடியில் கூலி தொழிலாளி வீடு தீ பிடித்து எரிந்து நாசம் ஆனது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம்  மணமேல்குடி தாலுகா திருப்புனவாசல் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலம் வயது47. மீனவ குடும்பத்தை சேர்ந்த இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல், சகுந்தலம் வீட்டு வேலையை முடித்து விட்டு, அருகே உள்ள உறவினர்களிடம் பேசிக்கொண்டிருந்துள்னார்.

    அப்போது அவர் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சகுந்தலம் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீடு தீபிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். அதற்குள்  வீட்டிலிருந்த 7 சவரன் நகை, கட்டில், பீரோ, டிவி, அடையாள அட்டைகள் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து திருப்புனவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலியானான்.
    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பாலசெந்தில். இவரது மகன் சந்தோஷ் வயது 13. இவர் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில் நேற்றுமாலை அப்பகுதியில் உள்ள பெத்தாரி குளத்திற்கு சந்தோஷ் மற்றும் நண்பர்கள் குளிக்க சென்றனர். 

    அந்த குளத்தில் அங் காங்கே குழி தோண்டி வண்டல் மண் எடுக்கப்பட்டு இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் சந்தோஷ்அப் பகுதிக்கு சென்றுதண்ணீரில் முழ்கினான்.  

    இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சந்தோஷை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

    ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே ஒரு மனித னின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கிறது என்றால் மிகையல்ல. அவை இல்லை யென்றால் பசி, வலி, துன்பம் ஆகிய மூன்றும் நம்மை ஆட் கொண்டு விடுகிறது.


    உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கிறது என்றால் மிகையல்ல. அவை இல்லையென்றால் பசி, வலி, துன்பம் ஆகிய மூன்றும் நம்மை ஆட் கொண்டு விடுகிறது.

    கந்தலானாலும், கசக்கி கட்டு, கூழானாலும் குளித்து குடி என்கிறது ஆத்திச்சூடி. மாற்றி உடுத்த ஆடையே இல்லாதபோது எதனை கசக்குவது, கூழ் கூட இல்லாமல் எதனை குடிப்பது என்ற கேள்வியுடன் ஒரு குடிசைக்குள் 4 உயிர்கள் வலியோடு நாட்களை நகர்த்துகின்றன.

    மாலுமியின்றி கப்பல் நடுக்கடலில் தள்ளாடுவது போல், ஒரு குடும்பம் தலைவனின்றி தள்ளாடி, தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்ற ஒற்றைச்சொல்லால் உலகறிய செய்த நெடுவாசல் கிராமத்தில் தான் இப்படியொரு நிலைமை.

    இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயலும், திரும்பிய திசையெல்லாம் பழுத்து தொங்கும் கொய்யா, பலா, மாம்பழங்கள் என்பதெல்லாம் ஊருக்குத்தான், எங்களுக்கு இல்லை என்று கண்ணீருடன் கலெக்டர் அலுவலகம் வந்து நின்றார் சீரங்கம் என்ற பெண். வறுமையின் கோரம், நல்ல சாப்பாடு சாப்பிட்டு கடந்த நாட்கள் பல என்பதுபோல், 4 குழந்தைகளை ஒரு கையிலும், மண்எண்ணை கேனை மற்றொரு கையிலும் பற்றிக் கொண்டு நின்றார்.

    மனுவில் உள்ள கோரிக்கை நிறைவேறினால் வாழ்க்கை, இல்லையென்றால் மரணம் என்று துணிந்து முடிவெடுக்க என்ன காரணம். இதோ...

    புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளது நெடுவாசல் கிழக்கு கிராமம். ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதால் தப்பி பிழைத்ததில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் உள்ள அம்பேத்கார் நகரில் வசிப்பவர் சீரங்கம்.

    கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் முருகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இல்வாழ்க்கையை இனிதே தொடங்கினாலும், ஒருநாள் வேலைக்கு செல்லா விட்டாலும் சாப்பாட்டிற்கு திண்டாட்டம் என்ற நிலையே நீடித்தது. இருவரும் கூலித் தொழிலாளிகள் என்றாலும் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்வை நகர்த்தினர்.

    வாழ்வின் அர்த்தமாக இவர்களுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பிரியதர்ஷினி (வயது 13, படிப்பு 8-ம் வகுப்பு) கீர்த்தனா (11, 6-ம் வகுப்பு), அபர்ணா (10, 5-ம் வகுப்பு) ஆகிய மூன்று மகள்களும் கிஷோர் என்ற 5 வயது மகனும் (1-ம் வகுப்பு) உள்ளனர்.

    வறுமை சூழ்ந்த வாழ்க்கை என்றாலும் கணவனும் மனைவியும் நாள்தோறும் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகள் உட்பட ஆறு பேரும் மூன்று வேளை உணவு உண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தனர். குறிப்பாக அவர்கள்களை எடுத்தல், நாற்று நடுதல், 100 நாள் வேலை என்று எது கிடைத்தாலும் சென்றனர்.

    இருந்தபோதிலும் முருகேசன்-சீரங்கம் தம்பதியின் இல்லற வாழ்க்கை நீடிக்க வில்லை. அளவான மகிழ்வோடு வாழ்ந்த முருகேசனுக்கு ஒருபுறம் திடீர் உடல் நலக்குறைவு, மறுபுறம் வாட்டி வதைத்த வறுமை. அன்றாடம் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட முருகேசன் தன்னால் வாழவும் முடிய வில்லை, மற்றவர்களை வாழ வைக்கவும் முடியவில்லை.

    இப்படியொரு வாழ்க்கை தேவையா? என்ற முடிவெடுத்த முருகேசன் இருக்கிற கஷ்டம் போதாது என்று அனைவரையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தார்.

    இதனால் அதிர்ந்து போன சீரங்கத்தை கணவன் கைவிட்டு போன சோகம் வெகுவாக வாட்டியது. மேலும் தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கு வது என்று தெரியாமல் தனி மரமாய் நாளும் தவித்து வருகிறார்.

    கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையாரின் வாக்கிற்கேற்ப, எந்த காரணத்திற்காகவும் தனது குழந்தைகளின் கல்வியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து பள்ளிக்கும் அனுப்பி வருகிறார்.

    கணவரை இழந்து தவித்த சீரங்கத்துக்கு, அரசால் வழங்கப்பட்ட (10-க்கு 10 அடி) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிதலமடைந்த மேற் கூரையே சீரங்கம் மற்றும் அவரது 4 குழந்தைகளையும் மழையிலும், வெயிலிலும் காத்து வருகிறது.

    இந்த வீட்டில் சமையலே செய்தது கிடையாது என பார்த்தவர்கள் கேட்கும் அளவிற்கு அணைக்கப்பட்ட அடுப்பே சாட்சி. பள்ளிக்கு செல்லும் யாரும் எப்போது விடுமுறை விடுவார்கள் என்ற ஏக்கம் இருக்கும். ஆனால் இந்த 4 குழந்தைகளும் கடவுளிடம் வேண்டுவது பள்ளிக்கு விடுமுறையே வேண்டாம் என்பதுதான். காரணம் பள்ளி இருந்தால் தானே தங்களுக்கு உணவு கிடைக்கும்.

    இவை அனைத்தும் ஒன்று சேர்த்துதான் சீரங்கத்தை கையில் மண்எண்ணை கேனை எடுக்க வைத்தது. ஆனாலும் தன் கணவரை போன்று தானும் சென்று விட்டால் கண்ணான குழந்தைகளின் நிலையினை உணர்ந்த சீரங்கம் வலியோடு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

    தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் சீரங்கத்தின் மூத்த மகள் பிரிய தர்ஷினி, 6- வகுப்பு படித்து வரும் கீர்த்தனாவும் பருவ வயதை எட்டிவிட அந்த பெண் குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தாய் சீரங்கம் தவிக்கும் காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    தங்களின் வறுமை வாழ்க்கை குறித்து மூத்த மகள் பிரியதர்ஷினி கூறு கையில், மழை மற்றும் குளிர் காலங்களில் தம்பி கிஷோர் தினமும் தேனீர் கேட்டு அடம்பிடிப்பான். அப்பா இறந்த பிறகு அவனின் இந்த ஆசையை கூட கடந்த ஒரு வருடமாக எங்களால் நிறைவேற்றித்தர முடியவில்லை, எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் வயதுகூட அவனுக்கில்லை என்றார்.

    தாய் சீரங்கம் கூறுகையில், எங்களது குடும்பத்தை தொடர்ந்து வறுமை விரட்டுகிறது, கல்விக்காக மட்டுமின்றி மதிய உணவிற்காக எனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறேன். பட்டினியாக இருந்தாலும் அவர்களின் பசியை ஒரு நேரமாவது போக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வை நகர்த்தி வருகிறேன் என்றார்.

    நான் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். அதுவும் ஒருநாள் வேலை இருக்கும், சில நாட்கள் வேலை இருக்காது. எனது குழந்தைகளின் அத்தியாவசிய தேவையை கூட என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில் பெரிய பெண்கள் இரண்டும் பருவ வயதை எட்டி விட்டதால் அவர்களுக்கு உடல் ரீதியில் தேவைப்படும் ஆடைகளை கூட என்னால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

    பிள்ளைகள் பள்ளிக்கு தேவையான நோட்டு, புத்தகம் கேட்கும். தீபாவளி போன்ற நல்ல நாட்களில் மற்ற குழந்தைகளை போல் புத்தாடை அணிய வேண்டும் என்று கேட்கும். ஆனால் என்னால் அதைக்கூட வாங்கி தர முடியாமல் மனதுக்குள் அழுகிறேன்.

    ரே‌ஷன் அரிசி சாப்பாடு தான் எங்கள் குழந்தைகளின் பசியைப் போக்கி வருகிறது. எனக்கு ஏதேனும் அரசு வேலை வழங்கினால் நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இதுவரை நான் மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சர்களிடமும் மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து விட்டேன். தனது துயரைப்போக்க இதுவரை யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் கன்னத்தில் வழியும் கண்ணீரோடு.

    அதேபோல் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக கூறினாலும், அந்த தொகையை கொண்டு தன்னால் எந்த வீட்டையும் கட்ட முடியாது. வறுமை எப்படி தன் வாழ்வை எழுதினாலும் தனது குழந்தைகளை படிக்க வைத்து விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

    ஆனாலும் பசியைப் போக்க தான் தனக்கு வழி தெரியவில்லை என்றும், அரசு நடவடிக்கை எடுத்து தனக்கு ஏதேனும் ஒரு வேலை வழங்கினால் தங்கள் வாழ்வில் ஒளி பிறக்க வாய்ப் புள்ளது என்று சீரங்கம் தெரி வித்தார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரின் வாக்கு இன்னும் உயிர்பெற்றே இருக் கிறது என்பதற்கிணங்க மனித நேயமிக்க பலர் தகவல் அறிந்து உதவ முன்வந்துள் ளது சீரங்கம் வாழ்வில் வழி பிறக்கும் என நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடை பெற்றது.
    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை தொடங்கி வைத்து பேசும்போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு பெற்றோர்கள், உறவினர்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  

    முகாமில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு உதவி உபகரணங்கள், அடையாள அட்டை, பாதுகாப்பு பயணப்படி வழங்கவும், அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளனர். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அலிம் கோ நிறுவனம் மூலம் அளவிட்டு முகாம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் உபகரணங்கள் வழங்கப்படும்.

    நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, பள்ளி தலைமை ஆசிரியர் கள் பழனிவேல், ஷப்னம், பள்ளி துணை ஆய்வாளர் மாரிமுத்து, ஆசிரியர் மணிகண்டன், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 18 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
    கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஆதிப்பட்டினத்தில்  கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடை பெறுவதுதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனடிப் படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மணமேல்குடி காவல்துறையினர், 

    அங்கே இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்த நான்கு நபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து லியாஸ்மீரான் (வயது20), சையதுமுகமதுபுகாரி (27), நியாஸ் (21), சிராஜுதீன் (27) ஆகிய நான்கு நபர்களை கைது செய்த காவல் துறையினர், 

    அவர்களிடமிருந்து  கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆய்வாளர் சாமு வேல்ஞானம் தலைமையில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கபட்டு பின்பு குற்ற வாளிகள் சிறையிலடைக்கப் பட்டனர்.
    விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெறுகிறது
    புதுக்கோட்டை: 

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் வருடாபிஷேகம் வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

    மேலும் இத்தலமானது அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்திகளை வழங்கி திருபுகழ் பாட வைத்த தலமாகவும், நாரதருக்கு பாவவிமோசனம் வழங்கிய தலமாகவும் விளங்கி வருகிறது. 

    இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தற்போது கும்பாபிஷேக விழா முடிந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் வரும் 14&ந் தேதி (திங்கள்கிழமை)யன்று மலைமேல் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு வருடாபிஷேகம் முதல் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. 

    இதனையடுத்து வரும் நாளை  (ஞாயிற்றுகிழமை) முதல்கால யாகபூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 14-ந் தேதி (திங்கள் கிழமை) காலை 9 மணிக்கு 2 ம் கால யாகபூஜை தொடங்கி மலைமேல் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். 

    அதனைத் தொடர்ந்து மதியம் மலையடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு அன்று மாலை 6 மணிக்கு புகழ்பெற்ற நாதஸ்வரம் மற்றும்  தவிலிசை கலைஞர்களின் மங்கள இசையுடன் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருவீதி உலா நடைபெறும்.
    ×