என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குழந்தைகளுடன்  சீரங்கம்
    X
    குழந்தைகளுடன் சீரங்கம்

    வறுமையின் கோரப்பிடியில் தவிக்கும் 4 குழந்தைகளை பெற்ற தாய்- அரசு வேலை கேட்டு நடையாய் நடக்கும் போராட்டம்

    உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே ஒரு மனித னின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கிறது என்றால் மிகையல்ல. அவை இல்லை யென்றால் பசி, வலி, துன்பம் ஆகிய மூன்றும் நம்மை ஆட் கொண்டு விடுகிறது.


    உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கிறது என்றால் மிகையல்ல. அவை இல்லையென்றால் பசி, வலி, துன்பம் ஆகிய மூன்றும் நம்மை ஆட் கொண்டு விடுகிறது.

    கந்தலானாலும், கசக்கி கட்டு, கூழானாலும் குளித்து குடி என்கிறது ஆத்திச்சூடி. மாற்றி உடுத்த ஆடையே இல்லாதபோது எதனை கசக்குவது, கூழ் கூட இல்லாமல் எதனை குடிப்பது என்ற கேள்வியுடன் ஒரு குடிசைக்குள் 4 உயிர்கள் வலியோடு நாட்களை நகர்த்துகின்றன.

    மாலுமியின்றி கப்பல் நடுக்கடலில் தள்ளாடுவது போல், ஒரு குடும்பம் தலைவனின்றி தள்ளாடி, தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்ற ஒற்றைச்சொல்லால் உலகறிய செய்த நெடுவாசல் கிராமத்தில் தான் இப்படியொரு நிலைமை.

    இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயலும், திரும்பிய திசையெல்லாம் பழுத்து தொங்கும் கொய்யா, பலா, மாம்பழங்கள் என்பதெல்லாம் ஊருக்குத்தான், எங்களுக்கு இல்லை என்று கண்ணீருடன் கலெக்டர் அலுவலகம் வந்து நின்றார் சீரங்கம் என்ற பெண். வறுமையின் கோரம், நல்ல சாப்பாடு சாப்பிட்டு கடந்த நாட்கள் பல என்பதுபோல், 4 குழந்தைகளை ஒரு கையிலும், மண்எண்ணை கேனை மற்றொரு கையிலும் பற்றிக் கொண்டு நின்றார்.

    மனுவில் உள்ள கோரிக்கை நிறைவேறினால் வாழ்க்கை, இல்லையென்றால் மரணம் என்று துணிந்து முடிவெடுக்க என்ன காரணம். இதோ...

    புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளது நெடுவாசல் கிழக்கு கிராமம். ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதால் தப்பி பிழைத்ததில் இதுவும் ஒன்று. இந்த கிராமத்தில் உள்ள அம்பேத்கார் நகரில் வசிப்பவர் சீரங்கம்.

    கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் முருகேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இல்வாழ்க்கையை இனிதே தொடங்கினாலும், ஒருநாள் வேலைக்கு செல்லா விட்டாலும் சாப்பாட்டிற்கு திண்டாட்டம் என்ற நிலையே நீடித்தது. இருவரும் கூலித் தொழிலாளிகள் என்றாலும் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்வை நகர்த்தினர்.

    வாழ்வின் அர்த்தமாக இவர்களுக்கு அடுத்தடுத்து 4 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் பிரியதர்ஷினி (வயது 13, படிப்பு 8-ம் வகுப்பு) கீர்த்தனா (11, 6-ம் வகுப்பு), அபர்ணா (10, 5-ம் வகுப்பு) ஆகிய மூன்று மகள்களும் கிஷோர் என்ற 5 வயது மகனும் (1-ம் வகுப்பு) உள்ளனர்.

    வறுமை சூழ்ந்த வாழ்க்கை என்றாலும் கணவனும் மனைவியும் நாள்தோறும் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகள் உட்பட ஆறு பேரும் மூன்று வேளை உணவு உண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தனர். குறிப்பாக அவர்கள்களை எடுத்தல், நாற்று நடுதல், 100 நாள் வேலை என்று எது கிடைத்தாலும் சென்றனர்.

    இருந்தபோதிலும் முருகேசன்-சீரங்கம் தம்பதியின் இல்லற வாழ்க்கை நீடிக்க வில்லை. அளவான மகிழ்வோடு வாழ்ந்த முருகேசனுக்கு ஒருபுறம் திடீர் உடல் நலக்குறைவு, மறுபுறம் வாட்டி வதைத்த வறுமை. அன்றாடம் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட முருகேசன் தன்னால் வாழவும் முடிய வில்லை, மற்றவர்களை வாழ வைக்கவும் முடியவில்லை.

    இப்படியொரு வாழ்க்கை தேவையா? என்ற முடிவெடுத்த முருகேசன் இருக்கிற கஷ்டம் போதாது என்று அனைவரையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தார்.

    இதனால் அதிர்ந்து போன சீரங்கத்தை கணவன் கைவிட்டு போன சோகம் வெகுவாக வாட்டியது. மேலும் தான் பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கு வது என்று தெரியாமல் தனி மரமாய் நாளும் தவித்து வருகிறார்.

    கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அவ்வையாரின் வாக்கிற்கேற்ப, எந்த காரணத்திற்காகவும் தனது குழந்தைகளின் கல்வியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து பள்ளிக்கும் அனுப்பி வருகிறார்.

    கணவரை இழந்து தவித்த சீரங்கத்துக்கு, அரசால் வழங்கப்பட்ட (10-க்கு 10 அடி) நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிதலமடைந்த மேற் கூரையே சீரங்கம் மற்றும் அவரது 4 குழந்தைகளையும் மழையிலும், வெயிலிலும் காத்து வருகிறது.

    இந்த வீட்டில் சமையலே செய்தது கிடையாது என பார்த்தவர்கள் கேட்கும் அளவிற்கு அணைக்கப்பட்ட அடுப்பே சாட்சி. பள்ளிக்கு செல்லும் யாரும் எப்போது விடுமுறை விடுவார்கள் என்ற ஏக்கம் இருக்கும். ஆனால் இந்த 4 குழந்தைகளும் கடவுளிடம் வேண்டுவது பள்ளிக்கு விடுமுறையே வேண்டாம் என்பதுதான். காரணம் பள்ளி இருந்தால் தானே தங்களுக்கு உணவு கிடைக்கும்.

    இவை அனைத்தும் ஒன்று சேர்த்துதான் சீரங்கத்தை கையில் மண்எண்ணை கேனை எடுக்க வைத்தது. ஆனாலும் தன் கணவரை போன்று தானும் சென்று விட்டால் கண்ணான குழந்தைகளின் நிலையினை உணர்ந்த சீரங்கம் வலியோடு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

    தற்போது எட்டாம் வகுப்பு படித்து வரும் சீரங்கத்தின் மூத்த மகள் பிரிய தர்ஷினி, 6- வகுப்பு படித்து வரும் கீர்த்தனாவும் பருவ வயதை எட்டிவிட அந்த பெண் குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழலில் தாய் சீரங்கம் தவிக்கும் காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    தங்களின் வறுமை வாழ்க்கை குறித்து மூத்த மகள் பிரியதர்ஷினி கூறு கையில், மழை மற்றும் குளிர் காலங்களில் தம்பி கிஷோர் தினமும் தேனீர் கேட்டு அடம்பிடிப்பான். அப்பா இறந்த பிறகு அவனின் இந்த ஆசையை கூட கடந்த ஒரு வருடமாக எங்களால் நிறைவேற்றித்தர முடியவில்லை, எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளும் வயதுகூட அவனுக்கில்லை என்றார்.

    தாய் சீரங்கம் கூறுகையில், எங்களது குடும்பத்தை தொடர்ந்து வறுமை விரட்டுகிறது, கல்விக்காக மட்டுமின்றி மதிய உணவிற்காக எனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறேன். பட்டினியாக இருந்தாலும் அவர்களின் பசியை ஒரு நேரமாவது போக்க முடியும் என்ற நம்பிக்கையில் வாழ்வை நகர்த்தி வருகிறேன் என்றார்.

    நான் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை நகர்த்தி வருகிறேன். அதுவும் ஒருநாள் வேலை இருக்கும், சில நாட்கள் வேலை இருக்காது. எனது குழந்தைகளின் அத்தியாவசிய தேவையை கூட என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில் பெரிய பெண்கள் இரண்டும் பருவ வயதை எட்டி விட்டதால் அவர்களுக்கு உடல் ரீதியில் தேவைப்படும் ஆடைகளை கூட என்னால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

    பிள்ளைகள் பள்ளிக்கு தேவையான நோட்டு, புத்தகம் கேட்கும். தீபாவளி போன்ற நல்ல நாட்களில் மற்ற குழந்தைகளை போல் புத்தாடை அணிய வேண்டும் என்று கேட்கும். ஆனால் என்னால் அதைக்கூட வாங்கி தர முடியாமல் மனதுக்குள் அழுகிறேன்.

    ரே‌ஷன் அரிசி சாப்பாடு தான் எங்கள் குழந்தைகளின் பசியைப் போக்கி வருகிறது. எனக்கு ஏதேனும் அரசு வேலை வழங்கினால் நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றி விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    இதுவரை நான் மாவட்ட கலெக்டரிடமும், அமைச்சர்களிடமும் மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து விட்டேன். தனது துயரைப்போக்க இதுவரை யாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் கன்னத்தில் வழியும் கண்ணீரோடு.

    அதேபோல் அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக கூறினாலும், அந்த தொகையை கொண்டு தன்னால் எந்த வீட்டையும் கட்ட முடியாது. வறுமை எப்படி தன் வாழ்வை எழுதினாலும் தனது குழந்தைகளை படிக்க வைத்து விடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

    ஆனாலும் பசியைப் போக்க தான் தனக்கு வழி தெரியவில்லை என்றும், அரசு நடவடிக்கை எடுத்து தனக்கு ஏதேனும் ஒரு வேலை வழங்கினால் தங்கள் வாழ்வில் ஒளி பிறக்க வாய்ப் புள்ளது என்று சீரங்கம் தெரி வித்தார்.

    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரின் வாக்கு இன்னும் உயிர்பெற்றே இருக் கிறது என்பதற்கிணங்க மனித நேயமிக்க பலர் தகவல் அறிந்து உதவ முன்வந்துள் ளது சீரங்கம் வாழ்வில் வழி பிறக்கும் என நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×