என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் நகை, ரூ.7.50 லட்சம் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் :

    பெரம்பலூர் வடக்கு மாதவி ரோட்டில் உள்ள டால்பின்  நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் குமரன் (வயது 49). இவர் பெரம்பலூர் காய்கறி மார்க் கெட்டில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். வார நாட்களில் கிராமங்க ளில் நடக்கும் சந்தைகளிலும், காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் மாலை சந்தை வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். இவரது மனைவி பேபி (38) என்பவரும்   பெரம்பலூரில் காய்கறி வியாபாரம் செய்து வரும் நிலையில், இவர் நேற்று அன்னை நகரில் உள்ள பக்கத்து கடைக்காரர் இறந்து விட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

    குமரனும்  இரவு  துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, இன்று  காலை  வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பிரோவில் வைக்கப்பட்டிருந்த கை செயின், ஆரம், நெக்லஸ், மூக்குத்தி, தோடு, தாலிக்கொடி, டாலர் என 35 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம்  பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இது  குறித்து  காய்கறி வியாபாரி குமரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு  செய்த  பெரம்பலூர் போலீசார்  மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    அதேபோல் டால்பின் நகரில் வாடகை  வீட்டில் வருபவர் செல்வராஜ் (40), இவரது சொந்த ஊரான கை. களத்தூரில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி காரியானூரில்  செவிலியராக பணி பணிபுரிந்து வருகிறார்.

    பள்ளி விடுமுறைக்காக சொந்த ஊரான கைகளத்தூருக்கு சென்று விட்டு, இன்று காலை பள்ளிகள் திறப்பதால்,  பெரம்பலூர் வீட்டிற்கு  இன்று  காலை குழந்தைகளுடன் வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைத்து கிடப்பதும், வீட் டினுள்  இருந்து  சுமார் இரண்டே முக்கால் பவுன் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயி ரம்  திருடு  போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து குமரன் மற்றும் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், பெரம்ப லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த 2 தொடர் கொள்ளை சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர் நகராட்சியில் தி.மு.க.கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சியில் தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது.
    பெரம்பலூர் நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் உள்ள பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளில் 21 வார்டு உறுப்பினர் பதவி உள்ளன. இதில் 1, 2, 3, 4, 7, 11, 12, 18 ஆகிய வார்டுகள் பெண்கள் (பொது) 5, 10, 13, 14, 15, 17, 21 ஆகிய வார்டுகள் (பொது), 6, 8, 20 ஆகிய வார்டுகள் எஸ்சி (பொது), 9,16,19 எஸ்சி (பெண்கள்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவினர் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 16 வது வார்டும், ம.தி.மு.க. கட்சிக்கு 10 வது வார்டும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வது வார்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை என கூறப் படுகிறது. மீதமுள்ள 17 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில்  இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால், நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே களம் காண்கின்றனர். மற்ற கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., ஐஜேகே, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் தனித்துபோட்டியிடுகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் நடை பெற்றது
    பெரம்பலூர்:

    பெரம்பலூர்  கோல்டன் கேட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று 31 ந்தேதி நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர்  கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, நிலை 3, ஆகிய பணிகளுக்காக மொத்தம் 405 நபர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

    பயிற்சியில் தேர்தல்  நடத்தை விதிமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 3 பறக்கும் படைகளும், 4 பேரூராட்சி பகுதிகளுக்கு தலா 3 வீதம் மொத்தம் 12 பறக்கும் படைகள் என மொத்தம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    பெரம்பலூர் நகராட்சியில் 50 வாக்குச்சாவடிகளும் 4 பேரூராட்சிகளில் மொத்தம் 62 வாக்குச்சாவடிகள் என நமது மாவட்டத்தில் 112 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  

    இதில் பெரம்பலூரில் 7 வாக்குச்சாவடிகளும், பூலாம்பாடி பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும், அரும்பாவூர் பேரூராட்சியில் 2 வாக்குச்சாவடிகளும்  என மொத்தம் 11 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

    இங்கு கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் பயிற்சி வழங்குவதுடன் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற பல்வேறு  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  நடைபெறுகிறது. இதில் ஓட்டுப்போடுவதற்காக வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்பாக பரிசு பொருட்கள் போன்றவற்றை விநியோகிக்க கூடாது என தேர்தல் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்க பணம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல்  பரிசு  பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என தேர்தல்  ஆணையம்  உத்தர விட்டள்ளது. இந்த தேர்தல் விதிமுறையை  மீறுவோர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் நகராட்சிக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்  மாயக்கிருஷ்ணன், வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு, பெரம்பலூர் தனி தாசில்தார் (முத்திரைத்தாள்) பழனிச் செல்வன் ஆகிய மூன்று பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    குரும்பலூர் பேரூராட்சிக்கு ஆலத்தூர் மண்டல துணை தாசில்தார் செந்தில் முருகன், ஆலத்தூர் (தேர்தல்) துணை தாசில்தார் கதிர், பெரம்பலூர் கலால் அலுவலக மேற்பார்வை அலுவலர் பொன்னுதுரை ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    அரும்பாவூர் பேரூராட்சிக்கு பெரம்பலூர் கோட்ட கலால் அலுவலர் கோவிந்தம்மாள். பறக்கும்படை துணை தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் (நிலம் கையகப்படுத்தல்) கருணாகரன் ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
     
    பூலாம்பாடி பேரூராட்சிக்கு பெரம்பலூர் அரசு கேபிள் டி.வி. தாசில்தார் நூர்ஜஹான்,  டாஸ்மாக் துணை  மேலாளர்  பாரதி வளவன்,  வேப்பந்தட்டை சமூக  பாதுகாப்பு  திட்ட தாசில்தார்  சின்னதுரை ஆகிய ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    லெப்பைகுடிகாடு பேரூ ராட்சிக்கு பெரம்பலூர் பறக்கும்படை தனி தாசில்தார் சித்ரா, குன்னம் சமூக பாது காப்பு  திட்ட  தாசில்தார் துரைராஜ்,  பெரம்பலூர் (நிலம் கையகப்படுத்துதல்) அருளானந்தம் ஆகிய 3 பேர் தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 15 பறக்கும்படை இக்குழுவினர் நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக லப்பைக்குடிக்காடு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர் 

    பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.  

    லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும், பறக்கும் படைகள் மூலம் அங்கு முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். 

    மேலும் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களிடம் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்தும், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்றி தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.


    இதில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சதீஷ் கிருஷ்ணன், உதவி தேர்தல் அலுவலர்கள் வெங்கடேசன், ரமேஷ் கண்ணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூரில் உள்ளாட்சி தேர்தல் நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கொரோனா வழிகாட்டுதலின்படி நடத்துவது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.

    நமது மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் மிகவும் அமைதியான முறையிலும் கொரோனா பரவல் ஏற்படாத வகையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் நடத்தப்பட வேண்டும்.

    அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களுக்கு தேவையான அனுமதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து உள்ள ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து உங்கள் அனைவருக்கும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த விதிமுறைகளை அனைத்தையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் சிறப்பாக நடைபெற அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    தேசிய பண்டிகையான குடியரசு தினத்தன்று பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நல உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில்  தொழலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 26-ந் தேதி குடியரசு தினத்தன்று பெரம்பலூர், அரியலூர், முசிறி ஆகிய பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 60 நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 11 வணிக நிறுவனங்கள், 19 உணவு நிறுவனங்கள், 3 மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு சார்வு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாது பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டு அந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணிகள், பாதுகாப்பு குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் 21 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டு கவுன்சிலர்கள் வீதம் 60 கவுன்சிலர்கள் என மொத்தம் 81 கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.

    பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் வேட்பாளர் உடன் வருபவர்கள் படிவம் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சாமியான பந்தல் கூடிய அறை மற்றும் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய 3 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகள், அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் வந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தனி தனி வழிகள், மூங்கில் கட்டையாளால் ஆன தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், முதியவர் ஓய்வெடுக்கும் பகுதி, நகராட்சி வளாகத்திற்குள் வந்து செல்லும் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கும் பணிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு போன்ற பணிகளை எஸ்.பி. மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், ஆய்வின்போது நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குமரிமன்னன் உடனிருந்தார்.
    குடும்ப தகராறில் பெண் தற்கொலை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் இவரது மனைவி சந்திரா (வயது 45) இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு செல்லப் பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார் சந்திரா. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்திரா, அரளி விதையை அரைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த உறவினர்கள் உடனடியாக சந்திராவை அழைத்துக்கொண்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த சந்திராவின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டாள் மற்றும் பிரேமி என்ற லட்சுமி என்ற இரண்டு யானைகள் நடைபயிற்சி செய்ய 857 மீட்டர் நீள பாதையும், குளிக்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை சாலையில் கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில் கோவில் யானைகள் ஆண்டாள் மற்றும் பிரேமி என்ற லட்சுமி இரண்டும் நடைபயிற்சி செய்ய 857 மீட்டர் நீள பாதையும், குளிக்க 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளியல் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. 

    இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த பாதையில் யானைகள் ஒய்யாரமாக நடைபயிற்சி சென்ற காட்சி. 
    பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டார்.
    சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

    அதன்படி அலங்கார வாகனம் பெரம்பலூர் வழியாக மதுரை சென்றது. இன்று காலை பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை டோல்கேட் பகுதிக்கு வந்த அலங்கார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா பார்வையிட்டபோது எடுத்த படம். அருகில் பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளார். 
    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சி மொழி பயிலரங்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயற்கண்ணி துவக்கி வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் இன்று (27&ந்தேதி) மற்றும் நாளை 28&ந்தேதி  ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுகிறது.

    இப்பயிலரங்கத்தின் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (27.01.2022) நடைபெற்றது.  

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி  கலந்துகொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசியதாவது

    தமிழ் மொழி தொன்மையான மூத்த மொழியாகும். தமிழக அரசின் ஆட்சி மொழியான  தமிழ் மொழியில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடத்தப்படுகிறது.

    அலுவலகப் பணிகளில் தமிழ்மொழி பயன்படுத்துவது குறித்து ஏற்படும் சந்தேகங்களை போக்கவும், அனைத்து கோப்புகளும் தமிழ் மொழியிலேயே கையாளவும் இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் உபயோகமாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்று உள்ள அலுவலர்கள் இதனை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

    அலுவலர்கள் தங்களது இல்லங்களிலும் தங்களது குழந்தைகளுக்கும் தமிழ் மொழியின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கேற்றுள்ள நீங்கள் மற்ற அலுவலர்களுக்கும் இதுகுறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (ஓய்வு)  துரை தம்புசாமி, தலைமையாசிரியர் மாயகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×