என் மலர்
நீலகிரி
- மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி தாக்கி கொன்றது.
- மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள தேவா்சோலை 3-வது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற அம்சா என்பவரது மாட்டை கடந்த 31-ந் தேதி புலி தாக்கி கொன்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி அடுத்த மார்லிமந்து பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது.
- புலி சோலூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மார்லிமந்து பகுதிக்கு வந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வனப்பகுதியில் தீவன பற்றாக்குறை, அதிகரித்து வரும் கட்டிடங்களால் வனப்பகுதி பரப்பளவு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊட்டி அடுத்த மார்லிமந்து பகுதியில் புலி ஒன்று சுற்றித்திரிந்தது.
இதையடுத்து அந்த புலி மார்லிமந்து அணை பகுதியில் ஒரு மாட்டை தாக்கியது. இதன் பின்னர் எச்.பி.எப். சர்ச் பகுதியிலும் ஒரு எருமையை தாக்கியது.
இதையடுத்து அந்த புலி சோலூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மார்லிமந்து பகுதிக்கு வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை மார்லிமந்தில் இருந்து தாவணெ செல்லும் சாலையோரம் அந்த புலி சுற்றி திரிந்தது.
இதை அந்த வழியாக காரில் சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.
இதற்கிடையே மார்லிமந்து பகுதியில் வனப்பகுதியில் விறகு சேகரிக்க செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு புலி நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடும் பனிமூட்டத்தால் சாலையில் எதிரில் வந்த வாகனங்கள் சரிவர தெரியவில்லை.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது.
காலநிலை மாற்றத்தால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
குளிரால் மக்கள் வெளியில் வரவே சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் சுவர்ட்டர் அணிந்து வருகின்றனர். ஆட்டோ, கார் டிரைவர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
ஊட்டி, குன்னூா்-மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரியில் இருந்து குன்னூா், ஊட்டி செல்லும் சாலை, ஊட்டி நகர பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. அத்துடன் சாரல் மழையும் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.
கடும் பனிமூட்டத்தால் சாலையில் எதிரில் வந்த வாகனங்கள் சரிவர தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டிச்சென்றனர்.
அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.
கோவையிலும் கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான காலநிலை நிலவி வருகிறது. நேற்று காலை முதல் வெயில் இல்லாமல் மேகமூட்டமாகவே காட்சி அளித்தது. இரவில் திடீரென சாரல் மழை பெய்தது. நள்ளிரவு வரை சாரல் மழை நீடித்தது.
இந்த திடீர் மழையால் இன்று காலை கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியது. காலை 7 மணியை தாண்டியும் பனிமூட்டமாகவே காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைக்கிறது.
- பிராங்கிளின் வீட்டில் எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் நாற்றுகள் வைத்து வளர்த்து வந்தார்.
- ஒரு செடியில் காய்த்த நார்த்தம் பழம் ஒன்று சற்று பெரியதாகவே இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவர் வீட்டில் எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் நாற்றுகள் வைத்து வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் ஒரு செடியில் காய்த்த நார்த்தம் பழம் ஒன்று சற்று பெரியதாகவே இருந்தது. அந்த பழத்தின் எடை சுமார் 2 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அந்த அதிசய பழத்தை ஆச்சரியத்துடன் நேரில் பார்த்து செல்கிறார்கள்.
மேலும் ஒருசிலர் அந்த பழத்தை புகைப்படம் எடுப்பதோடு செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக முகாமை சுற்றிலும் 26 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- புலியின் நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் யானைகள் முகாம் உள்ளது.
இங்குள்ள வளர்ப்பு யானைகளை பழங்குடியின மக்கள் பராமரித்து வருகின்றனர்.
முகாமை சுற்றி பல ஆண்டுகளாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த மாரி(61) என்ற பெண் விறகு சேகரிக்க காட்டுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியை தேடி காட்டுக்குள் சென்றனர். அப்போது யானைகள் முகாமில் இருந்து 200 அடி தூரத்தில் மாரியின் சடலம் மீட்கப்பட்டது.
புலி தாக்கி இறந்ததற்கான அடையாளங்கள் அவரது கழுத்தில் இருந்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர்கள் தமிழ்நாடு-கர்நாடகா சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் விதமாக முகாமை சுற்றிலும் 26 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதில் புலியின் நடமாட்டம் இங்கு இருக்கிறதா என வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகாமை சுற்றிலும் 26 கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
கேமிராவில் புலி பதிவான பின்புதான், அது வயதானதா? அல்லது ஊனம் ஏதாவது ஏற்படுள்ளதா? என்பது குறித்து தெரியவரும்.
அதன்பின்பு புலியை பிடிப்போம். கடந்த நவம்பரில் பொம்மன் என்ற வேட்டைதடுப்பு காவலரை லைட்பாடி என்ற இடத்தில் புலி தாக்கியது. அதன்பின்னர் புலி அங்கு வரவே இல்லை. இது அந்த புலிதானா என்பது விரைவில் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன.
- இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் அச்சம் அடைந்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் 2 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது வந்து சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பா கிராமம் செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் நிம்மதி அடைந்தனா்.
- வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
- இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலியாகும்.
ஊட்டி,
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியில் உள்ள அம்புகுத்தி மலையடிவாரத்தில் உள்ள ஒரு தனியாா் தோட்டத்தில் புலி இறந்து கிடப்பதாக வயநாடு மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு கழுத்தில் கம்பி மாட்டிய நிலையில் புலியின் சடலம் கிடந்தது.
அந்த புலியை வனத்துறையினர் பரிசோதித்தனர். அப்போது இறந்து கிடந்த புலி 2 வயதுடைய ஆண் புலி என்றும், வேறு ஏதோ பகுதியில் கழுத்தில் வயா் சிக்கிய நிலையில் இங்கு வந்து இறந்துள்ளது எனவும் தெரிவித்தனா். இது தொடா்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் வனத்துக்குள் விரட்டினா்.
- ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பகுதியில் காட்டு யானை ஒன்று அண்மையில் 2 பேரை கொன்றது. இந்த யானை தற்போது கிளன்வான்ஸ் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த ஆட்கொல்லி யானை மீண்டும் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறையினா் ட்ரோன் கேமரா மூலம் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.
இதற்கிடையே, நியூஹோப் பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டத்தை வனத்துறையின் அதிவிரைவு படையினா் கிளன்வான்ஸ் பகுதியில் உள்ள வனத்துக்குள் விரட்டினா்.
- 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது.
- சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்
காலம் காலமாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்த நிலையில் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மாற்று தொழிலாக சுற்றுலா தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக மசினகுடி மாவ னல்லா, வாழைத்தோட்டம், மாயார், தெப்பக்காடு உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த ஏராளமானோர் ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் ஜீப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழி காட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மசினகுடி மரவுக்கண்டி அணையில் படகு குளம் அமைத்து சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அமைச்சர் ராமச்சந்திரனிடம் நேற்று மனு அளித்தார். அதில் தமிழக வளர்ச்சி கழகம் முலம் படகு சவாரி தொடங்கி மசினகுடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
- ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லீலா சங்கர் நன்றி கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பின் கிளை அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் பிரிவு, ஊட்டியை அடுத்த நஞ்சநாடு கப்பத்தொரை ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ரங்கநாதன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட தொடர்பு அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை சத்யாதேவி அனைவரையும் வரவேற்றார்.நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர் கேப்டன் மணி ஆலோசனையில் நடைபெற்ற இந்த விழாவில், நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் மோரிஸ் சாந்தா குரூஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர் அமைப்பான ஜூனியர் ரெட்கிராஸ் பிரிவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செல்வி, ரம்யா மற்றும் மீனா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் லீலா சங்கர் நன்றி கூறினார்.
- பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினர்.
- பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 2 டிவிஷன் பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் என்பவரது பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது. இதனால் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சித்தராஜ் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர் உயிரிழந்த பசு மாட்டின் உரிமையாளர் சித்த ராஜிக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினர்.
- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
ஊட்டி,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார்.
அதனடிப்படையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மேலும், நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 07.05.2021 முதல் 23.01.2023 தனிநபர் வங்கி கடன் இணைப்பு ரூ.1.99 கோடி மதிப்பிலும், 160 பயனாளிகளுக்கு ரூ.6.11 கோடி மதிப்பில் சுய தொழில் புரியும் சுய உதவிக்குழுக் கடன் இணைப்பினையும், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள 11,309 உதவிக்குழுக்களுக்கு ரூ.600.31 கோடி மதிப்பில் வங்கி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் 1,416 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.38 கோடி, 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1.24 கோடி மதிப்பில் பெருங்கடனும், 2 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலும் பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஊட்டி அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், 29.12.2022 அன்று 476 மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 5,854 உறுப்பினர்களுக்கு ரூ.33.21 கோடி மதிப்பில் வங்கிக்கடன் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பயனடைந்த மகளிர் குழு வட்டார ஒருங்கிணைப்பாளர்ச சிகலா கூறும்போது:-
நான் நெடுகுளா ஊராட்சி கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறேன். இந்த கூட்டமைப்பின் கீழ் ஹெத்தையம்மன் சுய சிந்து நதி உதவிக்குழு, சிந்து சுயஉதவிக்குழு, அறிஞர் அண்ணா சுய உதவிக்குழு என 136 மகளிர் சுய உதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
எங்கள் கூட்டமைப்பில் உள்ள 25 குழுக்களுக்கு ரூ.50 லட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகளிர்களின் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கு பல்வேறு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல் அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.






