என் மலர்
நீலகிரி
- கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது.
- வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதி களில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை இயக்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
- விளம்பர பலகை மற்றும் ஒலிப்பான் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் சுற்றுலாதலமாக உள்ள காரணத்தினால் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகப்படியாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விளம்பர பலகையை வைத்து தொடர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
கியாஷ்க் சரியான முறையில் செயல்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணிப்பதோடு அருகில் உள்ள கடைகளில் குப்பைகளை கியாஷ்கில் கொடுக்குமாறு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனைச்
சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான் கருவி மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை இயக்கமாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
- ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. நீலகிரியில் கிடைக்கும் சுவையான, மொறு மொறுப்பான வர்க்கிக்கும் பிரபலமானது தான்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஒரு நொறுக்கு தீனியாகவே இது இருந்து வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இதனை வாங்காமல் மலையை விட்டு இறங்குவது கிடையாது. அந்தளவுக்கு இந்த வர்க்கி அனைவர் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.
இப்படி பிரபலமான இந்த வர்க்கி எப்படி உருவானது என்பதை பார்க்கலாம். ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் அவர்கள், அதிகமான பேக்கிங் பொருட்களை தயாரித்து உட்கொண்டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் குக்கிஸ் (பிஸ்கெட்). அது அவர்களின் பிரதான நொறுக்குத்தீனியாகவே இருந்தது.
காலையில் நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அப்போது அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், அந்த பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து புதுச்சுவையில் ஒரு வகை நொறுக்குத்தீனியை உருவாக்கினர்.
அந்த நொறுக்குத்தீனி தான் வர்க்கி. மொறுமொறுவென்று இருந்த அதன் புதுச்சுவை ஆங்கிலேயர்களுக்கு பிடித்து போக தற்போது அது நீலகிரியின் அடையாளமாகவே மாறி விட்டது.
குக்கிஸ் பொருளுக்கு மாற்றாக, 'வற வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி என பெயர் மருவியது. ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு.
நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்கப்படுகின்றன.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
பல கட்ட ஆய்வுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி புவிசார் குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30-ந் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்.
இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அதன்படி வருகிற 31-ந் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.
புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.
இதுகுறித்து வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறும் போது, ஊட்டி வர்க்கிக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதனை தரமானதாக தயாரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது இணையற்ற சுவையாக அமைய உள்ளது என்றார்.
இதேபோல் ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருளுக்கான பெருமையை உலகறிய செய்யும். இவற்றுடன் மண்பாண்டத்துக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினை பொருளான மயிலாடி கல் சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்க உள்ளது.
- ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று வாலிபர் புகார் கொடுத்தார்.
- போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். விவசாயியான இவர் சம்பவத்தன்று மஞ்சனக்கொரையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஒரு டீக்கடையில் டீ குடித்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் நீங்கள் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியான விவசாயி, வாலிபரை போலீசில் சிக்க வைக்க நினைத்தார். அவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், ஏ.டி.எம்.மிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி விட்டு, நேராக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார், அவர் கூறிய இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 அழகிகள் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான கூடலூர் நந்தட்டியை சேர்ந்த முஸ்தபா(48), கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் 10 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது
- 5 வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்குந்தா ஊராட்சி, கிண்ணக்கொரை கிராமத்தில், உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு கிராம உத்திரவிட்டுள்ளார். இதற்கு முன்பெல்லாம் ஒரு வருடத்தில் 4 கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிண்ணக்கொரை கிராமத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீர் வசதியினை நிறைவேற்றும் வகையில் சிறப்புப்பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5.45 கோடி மதிப்பில் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்கள் அமைத்து, அதன் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதத்திற்குள் இப்பணிகள் முடிக்கப்படும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இக்கிராமத்தில் ரூ. 13 லட்சம் மதிப்பில் 17 பணிகள் எடுக்கப்பட்டதில், 10 பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள 7 பணிகள் விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கிண்ணக்கொரை கிராமமானது ஒரு ஆர்கானிக் கிராமமாகவும், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கக்கூடிய ஒரு கிராமமாக இருந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவில் வேளாண்மைத் துறைக்கு தமிழ்நாடு சட்டபேரவை 2023-2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் நீலகிரி மாவட்டத்திற்கு இயற்கை வேளாண்மையினை ஊக்குவிக்கும் விதமாக ஐந்து வருடங்களுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆர்கானிக் திட்டத்தினை மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்தி இந்த கிண்ணக்கொரை கிராமத்தினை தமிழகத்திலேயே முன்னோடி கிராமமாக கொண்டு வர நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதாரத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்து திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தினை வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பாலகணேஷ், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் என்ற மாதன், மேல்குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
- மரக்கன்றுகளை நடும் பணி நடந்தது.
- உலகெங்கிலும் காடு மற்றும் நீராதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
ஊட்டி,
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21-ந் தேதி 'உலக வன நாள்' மற்றும் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்' என்ற இரட்டை தின நிகழ்வு உலகெங்கிலும் காடு மற்றும் நீராதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி கோத்தகிரி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பேருராட்சி சுகாதார அலுவலர் ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கணக்கெடுப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
- 900-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது
ஊட்டி,
தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு நடைபெறும். அதன்படி, 2022-23ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நீர் பறவைகள், நிலப் பறவைகள் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது.
நீர்பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. இதில், நீர்நிலை பகுதிகளில் 35 ரகங்களில் சுமார் 900-க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நிலப் பறவைகள் கணக்கெடுப்பு கடந்த 4,5-ந் தேதிகளில் நடத்தப்பட்டது.
நீலகிரி வன கோட்டத்தில் 20 பல்வேறு வகையான பகுதிகள் கணக்கெடுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில், ஊரகத்தில் 5 பகுதிகளும், வனம் சார்ந்த 15 பகுதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், பறவைகள் கணக்கெடுப்பில் அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறையில் பயிலும் சுமார் 40 மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையை சார்ந்த 25 வன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பறவைகள் கணக்கெடுப்பில் சுமார் 120-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் 1886 எண்ணிக்கையிலான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. குறிப்பாக, கெத்தை பகுதியில் சுமார் 36 வகையான பறவைகள் 233 எண்ணிக்கையில் கணக்கெடுக்கப்பட்டது.
அவலாஞ்சி பகுதியில் 32 வகையான பறவைகளும், முக்கூர்த்தி பிஷ்ஷிங் ஹட் பகுதியில் 38 வகையான பறவைகள் 144 எண்ணிக்கையிலும் கணக்கெடுக்கப்பட்டது. ஊரக பகுதிகளாக அறியப்பட்ட 5 பகுதிகளில் 334 எண்ணிக்கையிலான பறவைகளும் வனப்பகுதிகளாக தேர்ந்தெடுத்த பகுதிகளில் 1552 எண்ணிக்கையிலான பறவைகளும் கணக்கிடப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பில் பல்வேறு அரிய வகை பறவைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. பறவைகள், வனவிலங்குகள் பாதுகாப்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு இக்கணக்கெடுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என வனத்துறையின் தெரிவித்தனர்.
- 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது
- மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
ஊட்டி,
ஊட்டியில் காந்தல் கஸ்துரி பாய் காலனி பகுதியில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தலித் பூர்வ குடி மக்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு பட்டா வழங்கபட்டது. தற்போது வீடு கட்ட நிலம் இல்லாமல் அரசு நிலத்தில் குடியிருப்ப வர்களின் வீடுகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஜேசிபி பொக்லைன் கொண்டு இடித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமையில் சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி, நகரச் செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அம்ரித் ஊட்டி வட்டாட்சியர் காந்தல் கஸ்தூரிபாய் காலனி மக்களின் பிரச்சினை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
- 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
- 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.
ஊட்டி,
குன்னூர் டேன் டீ பகுதியை சார்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர் உதயகுமார். இந்திய வனத்துறை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அரியனா மாநிலம் சண்டிகர் பஞ்சுளா மாவட்டத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதேபோல் கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாஸ்டர் அத்லெட்டிக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.
தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீரர் உதயகுமார், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து, தான் வெற்றி பெற்ற தங்க பதக்கங்களையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது குன்னூர் நகரக் செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ரஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர்.
- ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
ஊட்டி,
ரோட்டரி கிளப் ஆப் நீலகிரி வெஸ்ட், ரோட்டராக்ட் கிளப் மற்றும் ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் மேக்கேரி கிராமத்தில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.எஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்களைக் கொண்ட குழு, கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வாய் சுகாதாரம் குறித்தும், வாய் சுகாதாரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தாளுநர்கள் கிராம மக்களின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நோர்வேயின் லில்லெஸ்ட்ரோம் ரோட்டரி கிளப்பின் உறுப்பினரும், ஆர்.என்.டி நோர்வேயின் ஒஸ்லோமெட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் ஜான் சம்சேத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். முகாம் ஏற்பாடுகளை ஆர்.என்.டி தலைவர் நிர்மலா சொக்கன், வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ஆனந்தி சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார். ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி.தனபால், கிராமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிராமத் தலைவர் ஜோகி கவுடர் ஆகியோர் கிராம மக்களுக்கு உதவிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 20 ரோட்ராக்டர்கள்,என்.எஸ்.எஸ் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்ெடருமை விடப்பட்டது
- தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் பெருமளவு காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அதிக அளவு காணப்படுகிறது.
இந்த வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உணவு தேடி அடிக்கடி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது. கோத்தகிரி காம்பைக்கடை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டெருமை கூட்டம் ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டெருமை கன்று ஒன்று வழி தவறி வேறு ஒரு பகுதிக்கும் காட்டு எருமை கூட்டம் வேறு ஒரு பகுதிக்கும் சென்று விட்டது.
மீண்டும் தாயுடன் சேர முடியாமல் இருந்த அந்த காட்டெருமை கன்று அங்கும், இங்குமாய் சுற்றி வந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோத்தகிரி வன சரக வனக்கப்பாளர் சிவாவுக்கு தெரிவித்தனர்.
உடனடியாக அவர் வனவர் விவேகானந்தன், வேட்டை தடுப்பு காவலர் பொன்னமலை, மனித விலங்கு மோதல் காவலர் இன்பரசு ஆகியோர் அந்த காட்டெருமை கன்று இருந்த பகுதிக்கு வந்தனர்.
சுற்று வட்டாரத்தில் ஏதேனும் காட்டெருமை கூட்டம் உள்ளதா என்று ஆராய்ந்தனர். பின் 2 மணி நேரத்திற்கு பிறகு ஒற்றை காட்டெருமை ஒன்று சத்தத்துடன் அங்குள்ள மற்றொரு தேயிலை தோட்டத்தில் இருந்ததை அறிந்து காட்டெருமை கன்றை அங்கு விரட்டினர். கன்றும் துள்ளி குதித்து சென்று தாயுடன் சேர்ந்து கொண்டது.
இதனை அங்கு குடியிருந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்ததுடன், வனத்துறையினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
- ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
- ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் தூய்மை இந்தியா உலக காடுகள் தினத்தை முன்னிட்டு 21-வது வார்டு லோயர் பஜார் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் மரக்கன்றுகள் நடபட்டது. இதில் நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மேலும் ஊட்டி தீட்டுக்கல் பகுதியிலும் மரக்கன்று நடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார அலுவலர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






