என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நடந்தது.
    வேளாங்கண்ணி:

    கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 என ரூ.12 ஆயிரத்து 500-ஐ வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.400 வழங்க வேண்டும்.

    ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும். வழக்கமாக வழங்கும் அரிசியின் அளவை குறைக்க கூடாது. கூட்டுறவு மற்றும் தேசிய வங்கியில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழங்கி உள்ள குழு மற்றும் தனிநபர் கடன்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீழையூர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜன், சுப்பிரமணியன், கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் கடைத்தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிளை செயலாளர் பாலகுரு, ஊராட்சி துணை தலைவர் வினோத், நிர்வாகிகள் வீரப்பன், கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    நாகை அவுரிதிடலில் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணி தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பேசினர்.

    திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிக்கல் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர்கள் ராயர், கோவிந்தசாமி, மணி, விஜய், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். செம்பனார்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம் அருகே புத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் சிவராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கஜேந்திரன், கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சீர்காழியில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வீரராஜ், ஒன்றிய பொருளாளர் சுந்தரையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட குழு உறுப்பினர் நாகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    நாகை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த 63 வயது பெண், நாகை வெளிப்பாளையம் தாமரைக்குளம் தென்கரை பகுதியை சேர்ந்த 49 வயது பெண், 21 வயது ஆண், கீழ்வேளூரை அடுத்த திருக்கண்ணங்குடி பகுதியை சேர்ந்த 23 வயது ஆண், வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த 60 வயது ஆண் என மொத்தம் 5 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனால் நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. 
    செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பொறையாறு:

    செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு உள்ளது. இந்த காட்டில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வேலு (வயது35) என்பதும், உடல் நலக்குறைவால் மன வேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதின் எதிரொலியாக சீர்காழி போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. சீர்காழி, ஆனைக்காரன் சத்திரம், புதுப்பட்டினம், திருவெண்காடு, பூம்புகார், பொறையாறு உள்ளிட்ட போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வரதட்சணை மற்றும் பெண்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தான் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவெண்காடு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவெண்காடு போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

    நேற்றுமுன்தினம் திருவெண்காடு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெண் ஒருவரை வழக்கு தொடர்பாக திருவெண்காடு போலீசார் விசாரணை செய்தனர். பின்னர் அவரை சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது திருவெண்காடு போலீசாரும் விசாரிப்பதற்காக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அச்சமடைந்த மகளிர் போலீசார் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை நேற்று மூடினர். இதேபோல் அருகில் உள்ள சீர்காழி போலீஸ் நிலையத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு முக்கிய வழக்கில் மட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 29ம் தேதி சென்னை சென்றார். அங்கு நடைபெற்ற காவலர் பயிற்சிக்கு சென்று 2ம் தேதி திருவண்காடு வந்துள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் 4ம்தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொன்டார். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சனிக்கிழமை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    அவருடன் காரில் வந்த உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    இதனால் திருவெண்காடு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் செயல்படுகிறது. பணியில் உள்ள காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்துள்ளனர்.

    மேலும் காவல் நிலையம், குடியிருப்புகள் முழுவதும் திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளது . வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமையில் அப்பகுதியில் நோய் தொற்று பரவாமல் மருத்துவ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சீர்காழி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதே போல் சென்னடிலிருந்து வந்த பூம்புகார் வெள்ளையனிருப்பு பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

    மயிலாடுதுறை அருகே மகளிர் சுய உதவி குழுவினரிடம் ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்டவர் திடீரென இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    பாலையூர்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது52). இவர் குத்தாலம், மாதிரிமங்கலம், மயிலாடுதுறை, மாப்படுகை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் தலைவர்களை சந்தித்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உங்களுக்கு ரூ.1 லட்சம் நிதி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும் மதுரையை சேர்ந்த ஒரு நிறுவனம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பணம் அளிக்க இருக்கிறது. இதற்கு நான் புரோக்கராக உள்ளேன் என்று கூறி அவர்களிடம் கடந்த 2 ஆண்டுகளாக ரூ.2 கோடி வசூல் செய்துள்ளார். இவருக்கு உதவியாக கொண்டல் தேனூரை சேர்ந்த ஜான்சிராணி இருந்துள்ளார். மகளிர் சுய உதவி குழுவினரிடம் வசூல் செய்த பணத்தை பாஸ்கரன், மதுரையை சேர்ந்த சாந்தி, தாமரை ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்தநிலையில் பணத்தை கொடுத்த மகளிர் சுய உதவிக்குழுவினர் 2 ஆண்டுகள் ஆகியும் நிதி வராததால் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து பாஸ்கரிடம் பணத்தை கொடுத்தவர்கள் கேட்டனர். இதையடுத்து பாஸ்கரன் தான் கொடுத்து வைத்திருந்த பணத்தை மதுரையை சேர்ந்த சாந்தி, தாமரை ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர்கள் பணம் வராது, நீ மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விடு, பிறகு பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் நேற்றுமுன்தினம் காலையில் திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். தகவல் அறிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்த மகளிர் சுய உதவி குழுவினர் பாஸ்கர் வீட்டுக்கு வந்து எங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தனர். தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து பாஸ்கரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் குத்தாலம் போலீசார் இந்த வழக்கு நாகை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர்.
    மயிலாடுதுறை அருகே கர்ப்பிணி பெண் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தி வருகிறார்.
    பாலையூர்:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே வேலம்புதுகுடியை சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருவிடைமருதூர் அம்மன்குடியை சேர்ந்த சீத்தாராமன் மகள் வர்ஷா(21) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    தற்போது வர்ஷா 2 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் மணமகன் வீட்டார் வர்ஷாவிடம் உங்கள் வீட்டில் இருந்து கார் மற்றும் நகைகள் வாங்கி வரவேண்டும் என கூறி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் காலை வர்ஷா, இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் மாலை வர்ஷா தற்கொலை செய்துகொண்டதாக மணமகன் வீட்டார் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வர்ஷாவின் தந்தை சீதாராமன், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் வீட்டார் தனது மகளை கொடுமைப்படுத்தியதாகவும் பெரம்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வர்ஷாவிற்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.7ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி கூலியை ரூ.600 ஆக வழங்க வேண்டும். நுண்கடன் நிறுவனங்களில் குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதேபோல திருமருகல் ஒன்றியம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருமருகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் சதீஷ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் தியாகராஜன், சிங்காரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பொன்மணி நன்றி கூறினார்.

    கீழ்வேளூர் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள், ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொறையாறில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கபிரியேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நாகையில் வேனில் 40 கிலோ கஞ்சா மூட்டைகளை கடத்தியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பப்ளிக்ஆபீஸ் சாலையில் இன்று காலை டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், போலீசார் சதீஷ்குமார், கோகுல்ராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நாகூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிவந்த வேனை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வேனிலி வந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை எங்கிருந்து எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    திருக்கடையூர் அருகே ஊரடங்கால், எளிய முறையில் போலீஸ்காரர் திருமணம் நடந்தது.
    திருக்கடையூர்:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிபாட்டு தலங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டன.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் திருமணங்கள் நடந்து வருகின்றன.

    நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே கிள்ளியூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் பொறையாறு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். திருநாவுக்கரசுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    ஊரடங்கு காரணமாக நேற்று உறவினர்கள் 10 பேருடன் எளிய முறையில் திருநாவுக்கரசுக்கும், நந்தினிக்கும் திருமணம் நடந்தது. அப்போது மணமக்களும், திருமணத்திற்கு வந்திருந்தவர்களும் முக கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடித்தனர். 
    கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெரு என்.ஜி.ஓ. காலனியில் மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கீழையூர் கடைவீதியில் பேக்கிரி கடை, நாகை பெருமாள் கோவில் தெருவில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஆகியவை உள்ளன. சம்பவத்தன்று மர்மநபர்கள் இந்த கடைகளின் கதவுகளை உடைத்து ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த சிட்டு பிரகாஷ்(வயது 22), ஸ்டீபன்ராஜ்(24), முத்து என்கிற கலியபெருமாள்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை:

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு 3 பெண்கள் கார் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தனர். இதில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த பெண் திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் சேர்ந்து பயணம் செய்த மகாராஜபுரத்தை சேர்ந்த 2 பெண்கள், கார் ஓட்டுநர் மற்றும் தொற்று உறுதியான பெண்ணுடன் தொடர்பிலிருந்த அவரது குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 8 பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரேனா வார்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    இதையடுத்து, மாப்படுகை கிராமத்தில் அப்பெண் தங்கியிருந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். அப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ×