என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    உத்தனப்பள்ளி அருகே ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை காரில் கடத்திய பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களுடன் பெண் கைது செய்யப்பட்டார். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி பகுதியில் எங்கும் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். 

    அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா மேற்பார்வையில், ராயக்கோட்டை இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி, சப்& இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், கார்த்திகேயன், சரவணன், அமுதா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். 

    இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி துப்புகானப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரின் பின்புறத்தில் 26 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் தீர்த்தத்தைச் சேர்ந்த முனியம்மாள் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா, செல்போன் மற்றும் ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த கஞ்சாவை அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணம் பகுதியில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து கைதான முனியம்மாளை தேன்கனிக் கோட்டை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே வாலிபரிடம் வழிப்பறி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 24). சம்பவத்தன்று இவர் தேன்கனிக்கோட்டை  அய்யூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் நவீன்குமாரை கத்தி முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1,580ஐ பறித்து சென்றனர். இது குறித்து நவீன்குமார் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தேன்கனிக்கோட்டை சந்தனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (24), மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (22), அருண்குமார் (22), மஞ்சுநாத் (20) என தெரிய வந்தது- அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    குருபரப்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற பெண் லாரி மோதி பலியானார்.
    குருபரப்பள்ளி:

    ஓசூர் பாகலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சுவேதா (வயது 20). இவர் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சீர் வரிசைகள் எடுப்பதற்காக கிருஷ்ணகிரிக்கு உறவினர்களுடன் சுவேதா மினி லாரியில் சென்றார். பின்னர் சீர்வரிசைகளை ஏற்றிக் கெர்டு மீண்டும் அனைவரும் ஓசூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் குருபரப்பள்ளி மேம்பால பகுதியில் வந்த போது பின்னால் வந்த கார் லாரியின் மீது உரசியது. இதனால் மேம்பாலத்தில் லாரியும், காரும நிறுத்தப்பட்டது. அந்த நேரம் லாரியில் வந்தவர்களும், காரில் வந்தவர்களும் இறங்கி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது மினி லாரியில் இருந்த சுவேதா உள்பட அனைவரும் கீழே இறங்கினார்கள். அந்த நேரம் சாலையை கடக்க முயன்ற சுவேதா மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுவேதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிரிஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை காரில் கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கிருஷ்ணகிரி-தருமபுரி சேலம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    விசாரணையில் திருப்பூர் மாவட்டம், கொடங்கி பாளையம் அடுத்துள்ள கரனம்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது47) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனே அவரை கைது செய்து 473 கிலோ புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக எல்லைபகுதியில் உடல் எரிந்து நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்ததை யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேகேபள்ளி கிராமம் கர்நாடக எல்லையில் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடக எல்லை பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அத்திப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

    அப்போது அந்த வாலிபர் வெட்டப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் முகம் எரிக்கப்பட்டு இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொல்லப்பட்டார்? அவரை கொன்று சடலத்தை ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    ஓசூரில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம், செல்போன் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்ற 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூரில் நல்லூர் சாலையில் தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சிவசங்கர். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகன் வேணு என்பவர் நாய்களை வளர்த்து விற்பனை தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று அவர்களின் வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் காரில் வந்து, நாய்க்குட்டிகளை வாங்க வந்துள்ளதாக கூறினர். இதையடுத்து, ஸ்ரீதேவி உள்ளே இருந்த மகனை அழைத்தார்.

    அப்போது,   திடீரென மர்ம நபர்கள் 3 பேரும் வீட்டுக்குள் புகுந்து கத்திமுனையில் தாய்-மகனை மிரட்டி உள்ளே பீரோவில் இருந்த ஐந்தரை சவரன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.1 லட்சம் மற்றும் விலையுயர்ந்த 3 செல்போன்களை கொள்ளை படித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.  இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1,96,500 ஆகும். 

    இது குறித்து ஸ்ரீதேவி ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து 4 தடயங்களை கைப்பற்றி சென்றனர். 

    இச்சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்னிக்கோட்டை அருகே கிரக பிரவேச வீட்டில் 2-வது திருமணம் நடைபெறுவதாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அந்தேவணப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பெங்களூரு ஜீடிமரா பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ஷில்பா (24) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் தருண் என்ற மகன் உள்ளான்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதனால் ஷில்பா பெங்களூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அதேபோல. சித்தராஜூம் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சித்தராஜ் அந்தேவணப்பள்ளி கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் சித்தராஜின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே சித்தராஜிக்கு 2-வது திருமணம் நடை பெறுவதாக ஷில்பாவின் குடும்பத்தினருக்கு யாரோ தவறான தகவலை கிளப்பி விட்டுள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஷில்பா மற்றும் பெற்றோர் சித்தராஜிக்கு 2-வது திருமணம் நடைபெறுவதாக நினைத்து ஒரு வேனில் பெங்களூருவில் இருந்து அவசரமாக புறப்பட்டு வந்தனர்.

    அப்போது சித்தராஜின் வீட்டு முன்பு உறவினர்கள் பட்டு புடவையும், பட்டு வேட்டியுடன் இருந்ததால் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதையடுத்து சித்தராஜின் மனைவி ஷில்பா மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் கிரகப்பிரவேச வீட்டிற்குள் நுழைந்து உருட்டுக்கட்டைகளை கொண்டு அங்கிருந்தவர்களை தாக்கினர். மேலும் புதுவீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளையும், நாற்காலிகள், சாப்பாடு பாத்திரங்களையும், அடித்து உடைத்து சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் சித்தராஜின் உறவினர்களிடமும் கடும் தகராறில் ஈடுபட்டு அவர்களையும் தாக்கியுள்ளனர்.

    இதில் சித்தராஜ் மற்றும் அவரது தம்பி ரகு (32) மற்றும் அண்ணி கவிதா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஷில்பா குடும்பத்தினர், வேனில் பெங்களுருக்கு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த சித்தராஜ் உள்பட 7 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மோதல் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நேற்று கொரோனாவால் 221 பேர் பாதிக்கப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் நேற்று கொரோனாவால் 221 பேர் பாதிக்கப்பட்டனர். 785 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    இதுவரை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 761 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 53 ஆயிரத்து 718 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    தற்போது 4 ஆயிரத்து 674 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 369 ஆக உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மாயமான இறைச்சி வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டபள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜமீர் (வயது24). இவர் அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். 

    இந்தநிலையில், கடந்த 27-ந்தேதி, வீட்டை வெளியே சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை.  

    இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் ஜரின ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். 

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பஸ் மோதி கால்நடை டாக்டர் பலியானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே வண்ணாம் பள்ளி பகுதியை சேர்ந்தவர் வாசு என்கிற பாண்டியன். கால்நடை மருத்துவரான இவர் தற்போது குடும்பத்துடன் மத்தூரை அடுத்துள்ள மூக்காகவுண்டர் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு ரஞ்சிதா (வயது27) என்ற மனைவியும், மணிஷ் (7), லோகேஷ் (5) என்கிற மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் வாசு காரப்பட்டில் உள்ள ஒரு தனியார்  பால் குளிரூட்டும் உற்பத்தி நிலையத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். 

    இதையடுத்து நேற்று இவர் ஊத்தங்கரையில் இருந்து மத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தேரிப்பட்டி என்கிற இடத்தில் வந்த போது பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே வாசு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

    விபத்தில் பலியான வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உள்ளாட்சி தேர்தலில் 171 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1180 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும், தேன்கனிக் கோட்டை பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கும், பர்கூர், காவேரிப்பட்டணம், கெல மங்கலம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் என மொத்தம் 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. மனுத்தாக்கலின் கடைசி நாளான நேற்று ஓசூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 206 வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 378 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று 152 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மொத்தம் 264 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். பர்கூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தேன்கனிக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 104 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 95 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கெலமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 78 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாகோஜனஅள்ளி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஊத்தங்கரை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 42 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளுக்கு 92 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 171 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,180 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் திரும்ப பெற வருகிற 7&ந் தேதி கடைசி நாளாகும்.

    போச்சம்பள்ளி அருகே பெற்றோர் கண்முன்பே குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ஜிம்மாண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 35), விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஹரீஷ் என்ற 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளான்.

    இந்த நிலையில் அசோக்குமாரும், அவரது மனைவியும் நேற்று மாலை தங்களது நிலத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஹரீசையும் அழைத்து சென்றிருந்தனர்.

    அப்போது ஹரீஷ், வரப்பில் ஓரமாக நின்று விளையாடி கொண்டிருந்தான். திடீரென அங்குள்ள கிணற்றில் ஹரீஷ் தவறி விழுந்தான். இதை கண்டு அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். கிணற்று தண்ணீரில் குழந்தை மூழ்கியதால் உடனே போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    பின்னர் கிணற்றில் மூழ்கி பலியான குழந்தை ஹரீசை பிணமாக மீட்டனர். ஹரீசின் உடலை பார்த்து அவனது பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதது, காண்போரின் கண்களை குளமாக்கியது. பெற்றோர் கண்முன்பே, குழந்தை கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×