என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாந கராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டணம், கெல மங்கலம், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
8 நகர்புற உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட 1,181 பேர் மனுத் தாக்கல் செய்தனர். இதில், 50 மனுக்கள் திரும்ப பெற்றப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனுத் திரும்ப பெற கடைசி நாளான நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி 295 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
அதன்படி ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 379 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 85 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தற்போது 45 வார்டு உறுப்பினர் பதவிக்கு 274 பேர் போட்டியிடுகின்றனர்.
இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 264 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 81 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தற்போது 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு 170 பேர் போட்டியிடுகின்றனர்.
பர்கூர் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 95 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 6 மனுக்கள் தள்ளுபடி, 32 பேர் மனுக்களை திரும்ப பெற்றதால், 57 பேர் போட்டியிடுகின்றனர். இதே போல், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிக்கு 104 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 5 மனுக்கள் தள்ளுபடியும், 26 பேர் மனுக்கள் திரும்ப பெற்றதாலும், ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், 17 வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 பேர் போட்டியிடுகின்றனர்.
காவேரிப்பட்டணம் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 95 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 8 மனுக்கள் தள்ளுபடியும், 37 பேர் மனுக்களை திரும்ப பெற்றதால், 50 போட்டியிடுகின்றனர்.
ஊத்தங்கரை பேரூராட் சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 92 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 5 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால், 87 பேர் போட்டியிடுகின்றனர். கெலமங் கலத்தில் பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 78 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 மனுக்கள் தள்ளுபடியும், 11 பேர் மனுக்கள் திரும்ப பெறப்பட்டதால், 64 பேர் போட்டியிடுகின்றனர்.
நாகோஜனஹள்ளி பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர் பதவிக்கு 74 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 3 மனுக்கள் தள்ளுபடியும், 18 பேர் மனுக்கள் திரும்ப பெற்றதால், 53 பேர் போட்டியிடுகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 171 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், 170 பதவிகளுக்கு 827 பேர் போட்டியிடுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி ஓசூரில் போலீசார் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர்:
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அச்சமின்றி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், ஓசூரில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது.
ஓசூர் தாலுகா அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏ.டி.எஸ்.பி. ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த அணிவகுப்பு, ஓசூர் நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. வாக்குப்பதிவின்போது பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையிலும், பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் உள்ளனர் என்பதை தெரிவிக்கும் வகையிலும் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் பதுக்கி வைத்திருந்த 1.4 டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றினர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை, அஞ்செட்டி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டி பகுதியை சேர்ந்த வீரபத்திரப்பா (வயது 71) என்பதும், அஞ்செட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடகா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பதற்காக தன் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அவரது வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த, 1,400 ரேஷன் அரிசி, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் வீரபத்திரப்பாவை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்றுக்கு முதியவர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா பாதிப் புடன் கடந்த மாதம் 26ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் கடந்த 4&ந் தேதி இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 96 பேர் பாதிக்கப்பட்டனர். 778 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 55 ஆயிரத்து 288 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 3 ஆயிரத்து 335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று இரவு தர்கா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாடிய சிலர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர்.
உடனே போலீசார் சுதாரித்து கொண்டு அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் அவர்கள் கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 50), லட்சுமணன், முகேஷ்ராஜ், பையனப்பள்ளியை சேர்ந்த சங்கர் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6460 ரொக்க பணம் மற்றும் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே குடும்ப தகராறில் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்த மகேஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மத்தூர் அருகே குள்ளப்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோடியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ் (வயது32). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் குடும்ப தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஸ் நேற்று வீட்டில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் கணவர் வேலைக்கு செல்லாததால் இளம்பெண் தீக்குளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூவான். இவரது மனைவி தீபா (வயது34). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பூவான் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீபா நேற்று மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
உடனே தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீபாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மோதி சாலையோரம் நின்ற லாரி டிரைவர் பரிதாபமாக பலியானார்
ஓசூர்:
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பனரா சித்தாத் (வயது 57). லாரி டிரைவர். ஓசூருக்கு வந்திருந்த அவர் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பனரா சித்தாத் மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பனரா சித்தாத் இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப தகராறில் எலக்ட்ரிசீயன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அம்மன்நகர் பகுதியை சேர்ந்தவர் நிஷார் (வயது22). இவர் பெங்களூரில் உள்ள சோலார் நிறுவனத்தில் எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பதகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நிஷார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த நிஷார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்செட்டி அருகே யானையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வன கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் கடந்த 2-ந் தேதி 16 முதல் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் வன கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் யானையின் லையில் உலோக குண்டு ஒன்று இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் அந்த யானை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து யானையின் உடலில் இருந்த 2 தந்தங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டன.
தொடர்ந்து யானையை கொன்ற நபர்களை பிடிக்க வனத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் விசாரணையில் அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தபன்பப்ளளியை சேர்ந்த முத்து (வயது 35), ஏழுமலையான்தொட்டி காளியப்பன் (28) ஆகியோர் யானையை சுட்டு கொன்றது தெரிய வந்தது. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் முயல் வேட்டைக்காக வனப்பகுதிக்குள் சென்றதும், அப்போது அவ்வழியாக துரத்திய யானையிடம் இருந்து தப்பித்து செல்வதற்காக யானையை நாட்டுத்துப்பாக்கி மூலம் சுட்டதும் தெரிய வந்தது.
இதில் தொடர்புடைய மேலும் ஒரு வாலிபரான பாண்டுரெங்கன்தொட்டி பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் சேட்டு என்கிற மாதப்பா (25) என் பவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதையடுத்து கைதான அவர்கள் 3 பேரையும் ஓசூர் சிறையில் அடைத்தனர்.
ஐ.டி.ஐ. படித்து முடித்த வாலிபர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி துரைசாமி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பவின் (வயது 22). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த பவின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காரப்பேட்டை அருகே வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை சையத் நகரை சேர்ந்தவர் இர்பான் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். கடந்த 3&ந்தேதி இர்பான் மோட்டார் சைக்கிளில் ரெட்டியூர் கிராமம் பக்கமாக சென்றார். அந்த நேரம் அவருக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிலர் இர்பான் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் இர்பானை தாக்கினார்கள். மேலும் வீட்டின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தினார்கள்.
இதில் காயம் அடைந்த இர்பான் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக இர்பான் கொடுத்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, 17 வயது சிறுவன், பெரிய தள்ளப்பாடி பிரபாகரன் (22), சிவக்குமார் (22), ரெட்டியூர் ரமேஷ் (24), தீனா (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
கைதானவர்கள் மீது கூட்டமாக வருதல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






