என் மலர்
கிருஷ்ணகிரி
- காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
- வியாபாரிகள் சங்கத்திற்கு ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
ஓசூர்,
ஓசூர் அருகே பத்தல பள்ளியில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே மொத்த காய்கறிகள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த நிலையில், காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் வந்து செல்லும் வாகனங்களால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த காய்கறி மார்க்கெட்டை அருகில் உள்ள மோரனபள்ளி பகுதிக்கு மாற்றும் நோக்கத்துடன், சுமார் 9 ஏக்கர் நிலத்தை, வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து அங்கு கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், புதிய இடத்தில், அனுமதி பெறாமல் கடைகள் நடத்த கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில், காய்கறி வியாபாரிகள் சங்கத்திற்கு ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பினார்.
இதேபோல், ஓசூர் வருவாய்த்துறை அதிகாரி களும் பிரச்சினை செய்வதாக காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் புகார் எழுப்பினர். மேலும், புதிய மார்க்கெட் செல்லும் வழியில் திடீரென கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும், சூளகிரிக்கு கடைகளை மாற்றத்துடிக்கும் ஒரு சிலரின் தூண்டுதலே காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தங்களுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இல்லையெனில் இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சங்க தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கநாத், நிர்வாகிகள் எம்.எம்.ராஜு, கோவர்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறினர்.
இதனிடையே தகவல் அறிந்து வந்த, ஓசூர் அட்கோ போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். சங்க பிரதிநிதிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.
- பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த தூய்மை பணி நடைபெற்றது.
தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தன்னார்வலர்கள் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் நீர் மேலாண்மை, சுகாதார மேலாண்மை , திடம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
- பள்ளி வேலை நாட்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
ஓசூர்,
ஓசூரில், ஆவலப்பள்ளி ஹட்கோ மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும், ஒரு தனியார் பள்ளி சார்பில், ஓசூர் பஸ் நிலையம் அருகே ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, நடந்த தொடக்க நிகழ்ச்சியில்,ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு, ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.முன்னதாக, பள்ளியின் தலைவர் அஸ்வத் நாராயணா வரவேற்றார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் பள்ளியின் சார்பில் நாள்தோறும், ஆதரவற்ற 200 பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படும். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, அதாவது பள்ளி வேலை நாட்களில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். உணவு உண்ணும் தட்டுகளை, அவர்களே கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் மற்றும் பள்ளி முதல்வர் சங்கீதா பலால், பள்ளி துணை முதல்வர் பவானி ஜெயன் மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க, மு.க.ஸ்டாலின் அனுமதியளிக்க வேண்டும்.
- சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சிவசேனா கட்சியின் யுவசேனா பிரிவின் சார்பில்,ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகர் சிலை ஊர்வலத்தை, யுவசேனாவின் மாநில தலைவர் சேலம் வேணுகோபால், மாநில ஒருங்கிணைப்பாளர் மும்பை ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மேலும் இதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, வேணுகோபால் மற்றும் மும்பை ஸ்டாலின் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
விநாயகர் பண்டிகையை முன்னிட்டு,மராட்டிய மாநிலத்தில் எவ்வாறு சிவசேனா கட்சி மட்டுமின்றி, அனைத்து இந்து அமைப்புகள், இந்து குடும்பங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் செய்து, 10 நாட்களுக்கு பிறகு ஊர்வலத்துச் சென்று கரைக்கப்படுகிறதோ, அதே போன்று அடுத்த ஆண்டு இந்த வழக்கத்தை தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க, மு.க.ஸ்டாலின் அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
.யுவசேனா அணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதை மீறி சிலர் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இதனை அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் நிருபர்களிடம் கூறினர்.
பின்னர் விநாயகர் சிலை, மேள தாள முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்துசெ ல்லப்பட்டு ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் கரைக்கப்பட்டது.
- காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
அதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விநாயகர் சிலை வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.
- 100 அடி தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31-ந் கொண்டாடப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடாத நிலையில், இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சிலை வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.
விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 3-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையின் பின்புறம் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், தர்மபுரி, தொப்பூரில் இருந்தும் விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர். சிலையைக் கரைக்க 100 அடி தூரத்திற்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதற்குள் மட்டுமே கரைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும் 4 முதல் 8 பேர் வரை மட்டுமே சிலையைக் கரைக்க அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பெரிய சிலைகளை கரைக்க பொக்லைன் எந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிலையைத் தண்ணீரில் கரைத்த பிறகு விநாயகர் சிலையை வைக்கும் மர சட்டங்களை பொதுமக்களே சேகரித்து கரையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இப்பணியை பார்வையிட தீயணைப்புத் துறையினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை வரை 98 விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி அணையில் கரைக்கப்பட்டன.
- 50,000 ஏக்கர் நிலங்களில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர்.
- நிலத்திலேயே உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்து வருகிறார்.
சூளகிரி,
சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் நிலவும் சீதோஷ்ண நிலையை பயன்படுத்தி 50,000 ஏக்கர் நிலங்களில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர். குறிப்பாக முட்டைக்கோஸ் காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை விளைவித்து வருகின்றனர்.
அதேபோன்று கொத்தமல்லி, புதினா பல ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்து சென்னை, கோவை, மதுரை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மருத்துவ குணம் கொண்ட வெள்ளரி மற்றும் சிறிய வெங்காயம் போன்றவற்றையும் விவசாயிகள் விளைவித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விவசாயிகள் பயிர் செய்தவுடன் நிலங்களில் வந்து வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். குறிப்பாக ஒசூரில் இருந்து தினமும் 150- க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு இடங்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒசூர் அருகே சானமாவு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் அனில்குமார் ஐந்து ஏக்கரில் மருத்துவ குணம் கொண்ட சின்ன வெங்காயத்தை பயிர் செய்தார். அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்து வியாபாரிகள் விலைக்கு வாங்க வராததால் 700 மூட்டை சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காததால் அவருடைய நிலத்திலேயே உள்ள தண்ணீர் குட்டையில் கொட்டி அழித்து வருகிறார்.
குறிப்பாக 50 கிலோ சின்ன வெங்காயம் கொண்ட ஒரு மூட்டை ஐந்தாயிரம் முதல் 8000 வரை விற்பனை ஆகி வந்தது. தற்பொழுது 500 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை விலைக்கு கேட்கின்றனர். இதனால் ஐந்து ஏக்கர் பயிர் செய்த விவசாயிகளுக்கு ரூ. 35 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வேளாண் துறை இந்த பகுதிக்கு தேவையான காய்கறி சேமிப்பு கிடங்குகளை அதிக அளவில் அமைக்க வேண்டும்.
இது மட்டுமின்றி தக்காளி அதிகம் விளையும் இந்த பகுதியில் தக்காளியை சேமிப்பதற்கு சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்கவும் தமிழக வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
- பொதுகுழு கூட்டியது செல்லாது என தீர்ப்பு வெளியானது.
- ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அ.தி.மு.க. பொது குழு கூடியது குறித்து உயர்நீதிமன்றத்தில் ஒ .பன்னீர்செல்வம் மேல் முறையீடு செய்ததையடுத்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் பொதுகுழு கூட்டியது செல்லாது என தீர்ப்பு வெளியானது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மேல் முறையீடு செய்ததில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு செல்லாது என அறிவித்ததில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி (வடக்கு) தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம், மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், ஒன்றிய கழக செயலாளர் தேவராசன் (தெற்கு ) , மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன் , ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மலர் கமலநாதன், கிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம். ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மணி, கவுண்டனூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலு, ஒன்றிய மீனவரணி செயலாளர் முனுசாமி, ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் கேபிள் குமார், மாணவரணி முத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு திருமால், பூபதி, இளைஞர் பாசறை பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
1300 மையங்களில் தடுப்பூசி முகாம் நடை பெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், இரண்டா வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடை யும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
- மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை வரவேற்று, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் ஓசூரில், பாகலூர் ஹட்கோ பகுதியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்னகிருஷ்ணன், ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எஸ்.நாராய ணன்,பகுதி செயலாளர்கள் வாசுதேவன், ராஜி, அசோகா, மஞ்சுநாத், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி,
அ.தி.மு.க., பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது. ஜூலை 11-ந் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவா ளர்கள் நேற்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
அதன்படி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று காலை கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றியக் குழுத்தலைவர் அம்சா ராஜன், நகர செயலாளர் கேசவன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆதார்எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.
- 1-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள்
இணையதளத்தில் தாங்க ளாகவே ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கருடா கைபேசி செயலி மூலமாகவும் மற்றும் இதற்கான படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்வதன் மூலமாகவும் ஆதார்எண்ணை
தங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.
பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் சுலபமாக இணைக்க ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற
தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தவறாது ஆதார் நகர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று உரிய படிவம் (படிவம் -6பி) பூர்த்தி செய்து, மேற்கண்ட நகல்களை இணைத்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






