என் மலர்
கிருஷ்ணகிரி
- விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
- யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 10-க்கு மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கொத்தூர், நொகனூர், லக்க சந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரக்கட்டா கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று கொத்தூர் கிராமத்துக்குள் 5 யானைகள் புகுந்தன. அதனைக் கண்டு காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதி பக்கமாக சென்றவர்கள் யானை கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் யானைகள் குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக நடந்து சென்றன . இதனால் கிராம மக்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்து வீடுகளில் முடங்கினர். அப்போது சில இளைஞர்கள் ஒன்றிணைந்து யானைகளை சுற்றி வளைத்து அங்குள்ள தைல தோப்பில் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
பகல் நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுள்ளது. இந்த யானைகளை ஜவளகிரி வன பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
- பிற பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
கிருஷ்ணகிரி
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இதேபோல ஓசூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு விபரம் வருமாறு:-
தேன்கனிக்கோட்டை-42 மி.மீ.,ஓசூர்-57 மி.மீ.,கிருஷ்ணகிரி-49.5 மி.மீ.,அஞ்செட்டி-5 மி.மீ.,தளி - 50 மி.மீ.,சூளகிரி- 7 மி.மீ.,நெடுங்கால் -40.2 மி.மீ.,ராயக்கோட்டை -10 மி.மீ.,போச்சம்பள்ளி -7 மி.மீ.
கிருஷ்ணகிரி 05.09.22 கே.ஆர்.பி.அணை நிலவரம்:- முழு கொள்ளளவு : 52 அடி,
நீர் இருப்பு : 49.95,நீர் வரத்து : வினாடிக்கு 3539 கன அடி,நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 3039 கன அடி.
கிருஷ்ணகிரி மாவட்டம் 05.09.22 ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிலவரம்:-முழு கொள்ளளவு : 44.28 அடி,நீர் இருப்பு : 40.02 அடி,நீர் வரத்து : வினாடிக்கு 2020 கன அடி, நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 2020 கன அடி.
- விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா மற்றும் விளக்க கூட்டம் நடந்தது.
- காய்ந்து போன மா மரங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா மற்றும் விளக்க கூட்டம் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றிவைத்து பேசினார்.
கூட்டத்தில் குரும்பட்டி கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். விவசாய விளை பொருள்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட அரசு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்.
அரசு நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குரும்பட்டியில் இருந்து திம்மராயன் கொட்டாய் கிராமத்திற்கு தார்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். பருவம் தவறி காய்ந்து போன மா மரங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
காய்ந்து போன தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட ஆலோசகர் நசீர் அகமத், பொருளாளர் சுப்பிரமணி ரெட்டி, மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், ராஜா, மாரியப்பன்,கிளை துணைத்தலைவர் கிருஷ்ணன், செயலாளர் தன்ராஜ், துணை செயலாளர் திப்பன், பொருளாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மின்விசிறி திடீரென கழன்று அந்த பெண்ணின் கால் மீது விழுந்தது.
- சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அன்று மாலையே பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அந்த பெண்ணின் படுக்கைக்கு மேலே இருந்த மின்விசிறி திடீரென கழன்று அந்த பெண்ணின் கால் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அருகே இருந்த பச்சிளங்குழந்தை தப்பியது.இதனால் அந்த சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பிற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறிப்பிட்ட நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்பதில் தொடங்கி கழிவறைகளில் கதவுகளுக்கு தாழ்ப்பாள் கூட இல்லை என்பதுவரை புகார்களை நோயாளிகள் அடுக்கி கொண்டே செல்கின்றனர்.
குறிப்பிட்ட நேரங்களில் மருத்துவர்கள் வராததால் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற வருவோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இந்த புகார்களுக்கு பதிலளித்துள்ள அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி விரைவில் அனைத்து குறைகளும் சரிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.
- ஆலோசனைக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
- மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
ஓசூர்,
தி.மு.க. இளைஞரணி சார்பில் "இல்லந்தோறும் இளைஞரணி" என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் கட்சியின் வீடுகள் தோறும் சென்று இளைஞர்களை, இளைஞரணியில் சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஓசூரில், ரெயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார். பின்னர் ஒன்றிய செயலாளர்களிடம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது.
மேலும் இதில் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.முருகன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு,கிருஷ்ணன், அசோக், வேணு மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.
முடிவில், இளைஞரணி துணை அமைப்பாளர் முருகேசன் நன்றி கூறினார்.
- வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி கோவிந்தப்பா உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சின்னபொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தப்பா (வயது 27). கூலி தொழிலாளி.
இவர் தனது இருசக்கர வாகனத்தில் பத்தன பள்ளியிலிருந்து சின்னபொத்தூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.டேம் சாலையில் அவர் சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கோவிந்தப்பாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தப்பா உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயப்பள்ளி ஊராட்சியில் பூசாரிப்பட்டி கிராமத்தில் 260 ஏக்கர் பரப்பளவில் 85 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்ட படேதாள ஏரி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக மார்க்கண்டேயன் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தின் எதிரொலியாக படேதாள ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதை அடுத்து நேற்று பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் பொதுப்பணித்துறை துணை செயற்பொறியாளர் அறிவொளி உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் நீர்வரத்து மற்றும் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பர்கூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பென்னம்பள்ளி, ஒரப்பம், ஜகுந்தம், சந்தூர், ஆகிய 20 கிராமங்களில் உள்ள 11 ஏரிகளுக்கு 2 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக படேதாள ஏரியில் இருந்து செல்லும் 15 கிலோமீட்டர் பாசன கால்வாய்யில் ஏற்பட்டு உள்ள முற்புதர்கள், அடைப்புகள், அகற்றும் பணியை மதியழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இந்த பணிக்காக தனது சொந்த நிதியாக 1 லட்சம் ரூபாய் வழங்கினார். ஓரிரு நாட்களில் படேதாள ஏரியில் இருந்து பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கபட உள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சாந்தமூர்த்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- நிழற்கூடம் மற்றும் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது.
- தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மயானத்திற்கு மின் தகன மேடை, நிழற்கூடம் மற்றும் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜை நடந்தது.
இதில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தி.மு.க. ஸ்ரீதர், சி.பி.ஐ. ஜெயராமன், ஒன்றிய குழு உறுப்பினர் பிரபா, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஒப்பந்ததாரர் சுப்பிரமணி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- இதில் பங்கேற்பவர்கள் 1.1.2009-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
- ஒரு மணி நேரத்திற்கு முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரவேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில், சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரிய வயது பிரிவுகளில் வருகிற 9-ந் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் தொடங்கி கங்கலேரி கூட் ரோடு பெட்ரோல் பங்க் வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கும் திரும்பி வருமாறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 13 வயது பிரிவில், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரம் போட்டிகள் நடத்தப்படும். இதே போல் மாணவர்களுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்கள் 1.1.2009-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதே போல், 15 வயது மற்றும் 17 வயது பிரிவில் மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகளும், மாணவர்களுக்கு 20 கி.மீ தூரம் போட்டிகளும் நடைபெற உள்ளது. இதில் 1.1.2007-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.-5 ஆயிரம், ரூ-.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு ரூ.250 வீதம் மற்றும் தகுதிச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள், அவரவர் சொந்த செலவில், இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும்.
மேலும், இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் தகுந்த சான்றிதழ்களுடன் (பிறந்த நாள் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல்) கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளம் வாயிலாக தங்களின் பெயரினை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போட்டிகள் துவங்கு வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்படும் 10 விருதுகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு மதிப்பீடு செய்து பட்டியலை கல்வி கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 20 பேரில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.
இதில், உயர்நிலைப்பள்ளி பிரிவில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெங்கடேஷ ரெட்டி, ஒசூர் ஒன்றியம் சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜாராம், கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திம்மப்பா ஆகிய நால்வருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பிரிவில் மத்தூர் ஒன்றியம் முத்தாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரபாண்டியன், தளி ஒன்றியம் பின்னமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசா, மத்தூர் ஒன்றியம் குண்டேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஊத்தங்கரை ஒன்றியம் நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகிய நால்வருக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற வுள்ள விழாவில் அனை வருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
- முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
- முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரட், பீன்ஸ், தக்காளி, முட்டைகோல், கத்தரிக்காய், முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் தின்னக்கழனி, பூதிபட்டி பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். இதற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால், நிலத்திலேய அழுகிய முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பூதிபட்டியை சேர்ந்த விவசாயி மணி, 48 கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பில் முள்ளங்கி பயிரிட்டேன். இதற்காக, 35 ஆயிரம் ரூபாய் செலவிட்டேன்;
35 நாட்களில் அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையில் முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டேன். முள்ளங்கி விளைச்சல் இருந்தும் அதற்கு போதிய விலை இல்லாததால், சில நாட்கள் பொறுத்து அறுவடை செய்யலாம் என நினைத்தபோது தொடர் மழை பெய்ததாலும், முள்ளங்கி விலை கிலோ, 5 ரூபாய்க்கு கீழ் குறைந்ததாலும் விற்கமுடியவில்லை. இந்நிலையில் நிலங்களிலேயே அழுகிய முள்ளங்கிகளை டிராக்டர் மூலம் அகற்றி நிலத்தை உழுது வருகிறோம் என கவலையுடன் கூறினார்.
- சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதியன்று நடைபெறுகிறது.
- அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி
பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் வருகிற 9-ந் தேதி அன்றும், விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதியன்று நடைபெறுகிறது.
இதையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடுமப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வருகிற 9-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதியும் அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 1,697 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 409 பயனாளிகள் பயனடைவார்கள். மேலும், இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த முகாமில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். 1 வயது முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 14 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரி களிலும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படும். எனவே, பெற்றோர்களை ஊக்குவித்து, அனைத்து குழந்தைகளையும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலாஏஞ்சல் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






