என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் 9-ந் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி
- இதில் பங்கேற்பவர்கள் 1.1.2009-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
- ஒரு மணி நேரத்திற்கு முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரவேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் மறைந்த தமிழக முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் அண்ணா சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில், சைக்கிள் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உரிய வயது பிரிவுகளில் வருகிற 9-ந் தேதி காலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் தொடங்கி கங்கலேரி கூட் ரோடு பெட்ரோல் பங்க் வரை சென்று, மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கும் திரும்பி வருமாறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, 13 வயது பிரிவில், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரம் போட்டிகள் நடத்தப்படும். இதே போல் மாணவர்களுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகள் நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்கள் 1.1.2009-க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இதே போல், 15 வயது மற்றும் 17 வயது பிரிவில் மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகளும், மாணவர்களுக்கு 20 கி.மீ தூரம் போட்டிகளும் நடைபெற உள்ளது. இதில் 1.1.2007-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.-5 ஆயிரம், ரூ-.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெறுபவர்களுக்கு ரூ.250 வீதம் மற்றும் தகுதிச்சான்றிதழும் வழங்கப்படும். போட்டியில் கலந்துகொள்பவர்கள், அவரவர் சொந்த செலவில், இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை கொண்டு வருதல் வேண்டும்.
மேலும், இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் வருகிற 8-ந் தேதி மாலை 5 மணிக்குள் தகுந்த சான்றிதழ்களுடன் (பிறந்த நாள் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகல்) கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளம் வாயிலாக தங்களின் பெயரினை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
போட்டிகள் துவங்கு வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






