என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவசமாக அல்பெண்டாசோல் மாத்திரை
- சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதியன்று நடைபெறுகிறது.
- அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி
பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க முகாம் வருகிற 9-ந் தேதி அன்றும், விடுப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதியன்று நடைபெறுகிறது.
இதையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடுமப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வருகிற 9-ந் தேதியும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 16-ந் தேதியும் அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 1 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பம் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 1,697 பள்ளிகள் மற்றும் 1,796 அங்கன்வாடி மையங்கள் மூலம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 409 பயனாளிகள் பயனடைவார்கள். மேலும், இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த முகாமில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகள் மூலம் அல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். 1 வயது முதல் 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 14 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளிலும், கல்லூரி களிலும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படும். எனவே, பெற்றோர்களை ஊக்குவித்து, அனைத்து குழந்தைகளையும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பியூலாஏஞ்சல் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






