என் மலர்
கிருஷ்ணகிரி
- பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
- பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் 269 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது படேதாள ஏரிக்கு மார்க்கண்டேயன் நதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 9 ஊராட்சிகளும், பர்கூர் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளில், 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த, 2017-ல் ஆந்திரா மாநில எல்லை மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்த கன மழையால், மார்க்கண்டேயன் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. மீண்டும், 2019-ல் பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி பாப்பாரப்பட்டி ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், படேதாள ஏரியில் இருந்து பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் 2-வது முறையாக பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
இது குறித்து மதியழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் ஏரிக்கு திரும்பி வந்ததாக வந்த புகாரையடுத்து, வாய்க்கால் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த வாய்க்கால் மூலம் 3 ஏரிகள் மட்டுமே நிரம்பின. பின்னர் மழையின்றி ஏரி வறண்டது. தற்போது ஏரி நிரம்பிய பிறகும் மார்க்கண்டேயன் நதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடைமடை வரை தண்ணீரைக் கொண்டு சென்று பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திகேயன், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தடுப்பணையில் தற்போது அதிகளவில் நீர்வரத்து உள்ளது.
- கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கிருஷ்ணகிரி,
ஆந்திரா மாநில எல்லையோரம் பெய்த கனமழையாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஏக்கல்நத்தம், நாரலப்பள்ளி, மகராஜகடை வழியாக செல்லும் கால்வாய்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வழித்தடத்தில் எம்.சி.பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பி.சி.தூர் அருகே தடுப்பணை உள்ளது.
இங்கிருந்து தண்ணீர் ஒரு புறமும் தக்கேப்பள்ளி ஏரிக்கும், மற்றொரு புறத்தில் கோட்டப்பள்ளி, கரடிகுறி, புதுஏரி உள்ளிட்ட 3 ஏரிகளுக்கு செல்கிறது. இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக நேற்று தக்கேப்பள்ளி கிராமத்தினருக்கும், கோட்டப்பள்ளி, கரடிகுறி, புதுஏரி கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை (நீர்வளம்) உதவி பொறியாளர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் மற்றும் மகராஜகடை போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அலுவலர்கள், கிராம மக்களிடம் கூறியதாவது:-
தடுப்பணையில் தற்போது அதிகளவில் நீர்வரத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி கோட்டப்பள்ளி ஏரி 80 சதவீதம், கரடிகுறி, புது ஏரி உள்ளிட்ட ஏரிகள் 40 சதவீதம் நிரம்பியுள்ளன. தடுப்பணை உபரி வெள்ள நீர் தக்கேப்பள்ளி ஏரிக்கு செல்வதால் தக்கேப்பள்ளி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அனைத்து ஏரிகளும் இன்னும் சில தினங்களில் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு நீர் கிடைக்கும். அதன்பின்னர் தடுப்பணையை அடைத்தது குறித்து விசாரித்து கொள்ளலாம், என்றனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
- பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேத மடைந்து காணப்படுகின்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரி மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பயணிகள் செல்ல பேருந்துகள் வந்து செல்கின்றன.
இந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேத மடைந்து காணப்படுகின்றது. இங்கு சரியாக விளக்குகள் எரிவதில்லை. மேலும் ஆங்காங்கே கடைகள் முன்பு வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் நெசவாளர் தெருவில் உள்ள மிகவும் பழமையான கரடிகுடி காரியசித்தி மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமி கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு ஹோம நிகழ்ச்சிகள், பூர்ணஹூதி, கலச ஸ்தாபனம் வாஸ்து ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று (செவ்வாய்கிழமை) கோ பூஜை, ருத்ராபிஷேகம், அதர்வாபிஷேகம் மற்றும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், நெசவாளர் தெரு மற்றும் ஓசூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது.
- சிறைத்தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை விவகார எல்லையாகக் கொண்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீடுகளுடன் 11 ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீடு ஆணை அறிவிப்பின்படி, பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைச்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 -ன் படி தண்டனைக்குரிய செயலாகும். கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த ஆய்வின் போது கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட இந்த ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படடு, 6 மாத சிறைத்தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விசைத்தறியாளர்கள் ைகத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கவும், நீதிமன்ற அபராதம் மற்றும் சிறை தண்டனையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், நான்காம் தளத்தில் உள்ள அறை எண்.408-ல் செயல்பட்டு வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தையோ அல்லது 0427-2417745 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குடிநீர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
காவேரிப்பட்டிணம்,
காவேரிப்பட்டணம் அருகே மலையண்ட அள்ளி கிராமம் உள்ளது. இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை குடிநீர் பிரச்சனை காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதை அறிந்து காவேரிப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்துக்கு விரைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது தற்போது மழை பெய்து அனைத்து கிணறுகளிலும் தண்ணீர் உள்ளது. ஆனால் குடிப்பதற்கு தண்ணீர் வருவதில்லை. குடிநீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை தலைவர் மற்றும் பி.டி.ஓ.விடம் மனு அளித்தும் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தண்ணீர் டேங்க் முழுவதும் சிதிலமடைந்து டேங்க் உடைந்தது.
தண்ணீர் டேங்க் உள்ளே சிமெண்ட் சிலாப்புக்கள் உள்ளன. மேலும் தண்ணீர் ஏற்றும்போது உள்ளே உள்ள கழிவுகளால் புழுக்கள் ஏற்பட்டு தண்ணீர் குடிப்பதற்கே முடியாமல் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் தண்ணீர் டேங்க் முழுவதையும் சுத்தப்படுத்திவிட்டு அதில் முறையாக சிமெண்ட் கலவை கொண்டு தண்ணீர் டேங்க் முழுவதும் பூசி எங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.
- தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் தமிழாய்வுத் துறை சார்பாக ஆசிரியர் தினவிழா கொண்டா டப்பட்டது. விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ஆசிரியர் பணி அறப்பணி என்றும் ஆசிரியர்கள் மட்டும்தான் தான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.
மாணவர்களை ஒவ்வொரு நாளும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்து அவர்களின் வளர்ச்சியில் தூண்போன்று நிற்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் காலம் முழுவதும் தனக்காக இல்லாமல் மாணவர்களுக்காகவே வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றனர் என்றார்.
நுண்ணுயிரியல் துறைத்தலைவர் யுவராஜ் பேசும்போது,சமூகம் சீர்பட ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒருவகையில் ஆசிரியர்கள் துணை நின்றிருப்பார்கள். மாணவர்கள், ஆசிரியர்களாக உருவாக முன்வர வேண்டும்என்றார்.
தமிழ்த்துறைத் தலைவர் லட்சுமி,மனதில் நின்ற ஆசிரியர் என்ற தலைப்பில் பேசுகையில், மாணவர்கள், ராதாகிருஷ்ணன், அம்பேத்கார், அப்துல்கலாம். அரிஸ்டாட்டில் போன்றோரை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் எனவும், ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றி வருகின்றனர் என்று குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவக்குமார் விழாவில் பேசினார். மாணவர் பவானிராஜ் ஆசிரியப்பணிகள் குறித்து கவிதை வாசித்தார். மாணவி சவுமதி இக்கால ஆசிரியர்கள், அக்கால ஆசிரியர்கள் எனும் தலைப்பில் உரையாடினார். மேலும், திரிஷா என்ற மாணவி, ஆசிரிய சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேசினார்.
முடிவில் பேராசிரியர் திலிப்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழாய்வுத்துறைப் பேராசிரி யர்கள் செய்திருந்தனர்.
- தனலட்சுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- ஆனால் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்தார்.
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பிரியாட்டுக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.
இவரது மனைவி தனலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் , மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த தனலட்சுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள்.
- 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி நடைபெறும் தீபாவளி பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், அரசின் நிபந்தனைகளை பின்பற்றி, இணையதளம் வழியாகமாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பத்துடன், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை, உரிமக் கட்டணம், 500 ரூபாயை வங்கி கருவூலத்தில் செலுத்திய சீட்டு, பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்தக் கட்டிடம் என்றால், மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டடம் என்றால் வாடகை ஒப்பந்தப்பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடம் இருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் (அல்லது) கட்டிட திட்ட அனுமதி ஆகிய விவரங்களுடன், வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
- குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூர் அருகே அரசனட்டியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஹரியம்மா, ஸ்ரீ கரியம்மா, ஸ்ரீ ஆனகோண்ட்லம்மா தேவி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நூதன நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் கும்பாபிஷேக விழா, பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நேற்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, கோயில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக, சம்பன்னி சாமி, அஜ்ஜய்யா சாமி, ஆனேலிங்கேஷ்வரா சாமி, அகதூர் சாமி, முகலூரு வீரபத்திர சாமி, ஒசராய சாமி, சித்தேஸ்வர சாமி, சிக்கம்மா தொட்டம்மா தேவிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம தேவதைகளின் சிலைகள் மேள, தாள முழக்கத்துடன், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் முன்னே செல்ல, சாமி சிலைகள் ஊர்வலமாக அருகில் உள்ள மைதானத்திற்கு எடுத்து செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், அலங்கரிக்கப்பட்ட மாடுகள் தலை மீதும் தேங்காய்கள் உடைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன.
இதில், ஓசூர், சூளகிரி பகுதிகளிலிருந்தும், பெங்களூரு பகுதியிலி ருந்தும் திரளான குரும்பர் சமுதாய மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் காந்தராஜ், செயலாளர் மாதேஷ் என்கிற மகாதேவன் , மல்லிகா ,வீரபத்திரப்பா, வெங்கடேஷ் மற்றும் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஏரியில் இருந்து நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
- பள்ளியின் வளாகத்திற்குள் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கம்மம்பள்ளி ஊராட்சியில் கம்மம்பள்ளி, கொல்லப்பட்டி, கெட்டூர், எலுமிச்சங்கிரி, மல்லிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கெட்டூர் ஏரி அமைந்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்த மழையால், கெட்டூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஏரி நிரம்பி தண்ணீர் அதிகளவில் வெளியேறியது.
இந்த தண்ணீர் அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து, கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளியின் வளாகத்திற்குள் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.பி.மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை, ஊராட்சி தலைவர் சென்றாயன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறியதாவது:-
கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 430 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல கெட்டூர் ஏரியில் இருந்து நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்கள்.
இதற்கிடையே நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளி வந்தனர். அந்த நேரம் மழைநீர் பள்ளி முழுவதும் தேங்கி இருந்ததால் விடுமுறை விடுவதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர் தினத்தை கொண்டாடி விட்டு வீட்டிற்கு திரும்ப சென்றார்கள்.
- ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
- காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்
ஓசூர்,
ஓசூர் அருகே பத்தலபள்ளியில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் சங்கத்தின் சார்பில் , அதன் தலைவர் நாராயணன், துணைத்தலைவர் ரங்கநாத், செயலாளர் சீனிவாச ரெட்டி, இணை செயலாளர் கோவர்தன், பொருளாளர் ஆனந்தா, மற்றும் நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் நேற்று ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழியிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர்.
அதில், " கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே மொத்த காய்கறிகள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தநிலையில், காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் வந்து செல்லும் வாகனங்களால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த காய்கறி மார்க்கெட்டை அருகில் உள்ள மோரனபள்ளி பகுதிக்கு மாற்றி, அங்கு , சுமார் 9 ஏக்கர் நிலத்தை வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, எந்தவித தடையுமின்றி அங்கு கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மனுவின் நகலை, ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடமும் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.






