என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதை படத்தில் காணலாம்.
22 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கெட்டூர் ஏரி: பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் விடுமுறை
- ஏரியில் இருந்து நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
- பள்ளியின் வளாகத்திற்குள் தண்ணீர் அதிகளவில் தேங்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கம்மம்பள்ளி ஊராட்சியில் கம்மம்பள்ளி, கொல்லப்பட்டி, கெட்டூர், எலுமிச்சங்கிரி, மல்லிநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கெட்டூர் ஏரி அமைந்துள்ளது.
கடந்த 22 ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய மழையின்றி ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து பெய்த மழையால், கெட்டூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், ஏரி நிரம்பி தண்ணீர் அதிகளவில் வெளியேறியது.
இந்த தண்ணீர் அப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து, கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்தது. இதனால் பள்ளியின் வளாகத்திற்குள் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.பி.மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை, ஊராட்சி தலைவர் சென்றாயன் மற்றும் ஆசிரியர்கள், கிராம மக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறியதாவது:-
கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 430 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதிய இடவசதி இல்லை. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே போல கெட்டூர் ஏரியில் இருந்து நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.
இவ்வாறு கூறினார்கள்.
இதற்கிடையே நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கம் போல பள்ளி வந்தனர். அந்த நேரம் மழைநீர் பள்ளி முழுவதும் தேங்கி இருந்ததால் விடுமுறை விடுவதாக அறி விக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர் தினத்தை கொண்டாடி விட்டு வீட்டிற்கு திரும்ப சென்றார்கள்.






