என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே உள்ள பி.சி.புதூர் தடுப்பணையில் கிராம மக்கள் திரண்டு இருப்பதை படத்தில் காணலாம்.
பி.சி.புதூர் தடுப்பணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதில் இருதரப்பினரிடையே வாக்குவாதம்
- தடுப்பணையில் தற்போது அதிகளவில் நீர்வரத்து உள்ளது.
- கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கிருஷ்ணகிரி,
ஆந்திரா மாநில எல்லையோரம் பெய்த கனமழையாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஏக்கல்நத்தம், நாரலப்பள்ளி, மகராஜகடை வழியாக செல்லும் கால்வாய்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வழித்தடத்தில் எம்.சி.பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பி.சி.தூர் அருகே தடுப்பணை உள்ளது.
இங்கிருந்து தண்ணீர் ஒரு புறமும் தக்கேப்பள்ளி ஏரிக்கும், மற்றொரு புறத்தில் கோட்டப்பள்ளி, கரடிகுறி, புதுஏரி உள்ளிட்ட 3 ஏரிகளுக்கு செல்கிறது. இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக நேற்று தக்கேப்பள்ளி கிராமத்தினருக்கும், கோட்டப்பள்ளி, கரடிகுறி, புதுஏரி கிராமத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை (நீர்வளம்) உதவி பொறியாளர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் மற்றும் மகராஜகடை போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அலுவலர்கள், கிராம மக்களிடம் கூறியதாவது:-
தடுப்பணையில் தற்போது அதிகளவில் நீர்வரத்து உள்ளது. தற்போதைய நிலவரப்படி கோட்டப்பள்ளி ஏரி 80 சதவீதம், கரடிகுறி, புது ஏரி உள்ளிட்ட ஏரிகள் 40 சதவீதம் நிரம்பியுள்ளன. தடுப்பணை உபரி வெள்ள நீர் தக்கேப்பள்ளி ஏரிக்கு செல்வதால் தக்கேப்பள்ளி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே அனைத்து ஏரிகளும் இன்னும் சில தினங்களில் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு நீர் கிடைக்கும். அதன்பின்னர் தடுப்பணையை அடைத்தது குறித்து விசாரித்து கொள்ளலாம், என்றனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






