என் மலர்
கிருஷ்ணகிரி
- பெங்களூரு புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்
ஓசூர்,
ஓசூரில், அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பின்பு ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே, கே.பி. முனுசாமி போன்ற துரோகிகள் இதுகுறித்து பேசக்கூடாது. மேலும் பொதுக்குழுவை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தவரும் கே.பி. முனுசாமி தான்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எடப்பாடி பழனிசாமி, குற்ற உணர்வின் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு தயக்கம் ஏற்படும் என்பதால்தான், சபாநாயகர் ஒதுக்கீடு செய்யும் இருக்கைகளை மாற்ற வேண்டும் என்று அந்த அணியினர் துடிதுடிக்கிறார்கள்.
மொழி பிரச்சனையில், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எடுத்த இரு மொழிக் கொள்கை நிலைப்பாடு தான் ஓ பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடும் ஆகும்.
ஆகவே 3-வது மொழி என்பதற்கும், அதை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி என்றும் பலிக்காது. தமிழ், ஆங்கிலம் தவிர வேற்று மொழிக்கு இந்த மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். முன்னாள் அ.தி.மு.க நிர்வாகிகள் ஜெயசந்திரன், ராஜேந்திர கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.
- மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.
- அமைச்சர் காந்தி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடங்கி வைக்கும் விழா நடந்தது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செல்லக்குமார், எம்எல்ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் டாக்டர்.திருவாசமணி வரவேற்புரையாற்றினார். மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர்.நாராயணபாபு திட்ட விளக்கவுரையாற்றினார்.
பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 800 முதல் 1000 நோயாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வந்தனர்.
15 மாதங்களில், இங்கு மேம்படுத்தப்பட்டுள்ள மருத்துவக் கட்டமைப்புகளால் தற்போது ஒரு நாளைக்கு 1,800 புறநோயாளாளிகள் மருத்துவ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் 6 மாதங்களில், மருத்துவ சேவை பெறும் புறநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மேலும், மாநில எல்லையோரம் அமைந்துள்ள, இம்மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று வரும் நிலை விரைவில் மாறும். வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் மருத்துவ தேவைக்காக தமிழகத்திற்கு அதிகளவில் வருகின்றனர்.
ஒசூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ.100 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 92 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சுகவனம், முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, பேரூர் தலைவர் தம்பிதுரை, பிடிஏ தலைவர் நவாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி பேராசிரியர் மருத்துவர் சங்கீதா நன்றி கூறினார்.
- சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.
- மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் குருக்களால் சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைள் நடைபெற்று வருகின்றன. புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையன்று முன்னதாக சுவாமிக்கு விளக்கேற்றுதலும், படி கொடுத்தலும் பூஜை நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கப்ரபாத சேவை, திருப்பள்ளியெழுச்சி, விஷ்வக் ஷேண ஆராதனை, புண்யாக வாசம், நவகலச ஸ்தாபண திருமஞ்ன சேவை, கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் , விஷ்னக் ஷேண ஆராதனை, நாராயண சங்கல்பம், புன்யாக வாசனம், ரக்ஷாபந்தனம், கண் யாதானம், ஹோமம், ஸ்ரீ நாராயண சூக்த, ஷஷ்ணு சஹஸ்ர நாம ஹோமம் மாங்கல்ய தாரணம் மஹா பூர்ணா ஹீதி, மாலை மாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தெய்வங்களுக்கு மேளதாளங்கள் முழங்க, மங்கல இசையுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது.
அத்துடன் சுவாமிக்கு மஹா தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் குடும்பதிகள் சுபநிகழ்ச்சிகளும், சகல நற்காரியங்களும், செல்வ செழிப்பு பெருகவும், நோயற்ற வாழ்வுடன்நீண்ட ஆயுள் பெருகவும், அதேபோல் திருமணமாகத கன்னி பெண்கள் விரைவில் மாங்கல்ய சுபகாரியங்கள் கூடவும் கோவிந்தா, கோவிந்தா, திருமலை வாசா, நாராயணா என்ற ஆண்மீக சொற்பொழிவு பாடலுடன் மண கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அறுசுவையுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஸ்ரீநிவா பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சாமிகளின் வீதி உலா, காளைகள், குதிரைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஆண்மீக அன்பர்களும், சிவனடியார் குழுக்களும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
- கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
- போதை மற்றும் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்க ளிடையே எடுத்துரைத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட காவல் காவல் காணிப்பாளார் சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின் பேரிலும், மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி. சரவணன் (பொ) ஆகியோரின் அறிவுருத்திலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் பொதுமக்களிடையே கஞ்சா பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுத்துவதுடன், ஆண்மை குறைவு, உடல் உறுப்புகள் செயல் இளத்தல் , கண்மங்கலாகுதல் உள்ளிட்ட பல்வேறு தீங்குகள் குறித்து போதை மற்றும் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்க ளிடையே எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்னுசாமி, பிரகாஷ், ஊராட்சி செயலர் வெங்கடேசன், மக்கள் நல பணியாளர் ராஜா மற்றும் பொதுக்கள் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும் மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி, ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர் ராம் நகர் அண்ணா சிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில், பிரகாஷ் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் மத்திய அரசை கண்டித்து பேசினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, ஒன்றிய பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்ராமு நன்றி கூறினார்.
- வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
- திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வேளாண்மை விரி வாக்க மைய அலுவலகம் சார்பில் மேக்கலாம்பட்டி பகுதியில் உள்ள விவசாயி தம்பிதுரை வயலில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
வேளாண்மைத் துறை சார்பில் நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு வயல் தேர்வு செய்யபட்டு மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்மனோகரன் நடுவராக தலைமை தாங்கியும் வேளாண்மை உதவி இயக்குநர்முருகன் முன்னிலையிலும், கலெக்டரின் உதவியாளரும், வேளாண்மை அலுவலர் அருள்தாஸ் உள்ளடக்கிய குழு மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்சிவநதி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், பயிர் காப்பீடு திட்ட அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோரின் முன்னிலையில் நிலக்கடலை அறுவடை நடைபெற்றது.
- புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது.
- பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்கும் பக்தர்கள் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது.
நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதன்படி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள பெருமாள் சன்னதி, கனவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோயில், பழையபேட்டை லட்சுமி நாராயணசாமி கோயில், பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாலேகுளி அனுமந்தராயர் கோயில், கிருஷ்ணகிரி மலையப்ப சீனிவாச பெருமாள் கோயில், கிருஷ்ணகிரி தம்மண்ண நகர் வெங்கடேச பெருமாள் கோயில், கிருஷ்ணா கோயில் தெரு நவநீத வேணுகோபால சாமி கோயில், பாப்பாரப்பட்டி பெருமாள் கோயில் உள்பட அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். நேற்று கடைசி புரட்டாசி சனி என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் தி.மு.க. தொடர்ந்து போராடும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் இந்தி திணிப்பை எதிர்த்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட தி.மு.க .இளைஞர்அணி மற்றும் மாணவர் அணி சார்பில் இந்தி திணிப்பையும், ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிசெல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப் வரவேற்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, கண்டனவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் ஒரு தொன்மையான மொழியாகும். நமது தமிழ் மொழிக்கு எப்போதெல்லாம் சோதனைகள் வருகிறதோ, இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்களோ அப்போதெல்லாம் தி.மு.க. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இதுவரை 2 முறை நாம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களை கண்டுள்ளோம். மத்தியில் ஆளும் பா.ஜ அரசால் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வருகிறார்கள். கடந்த 10 வருடத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது, விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு என மக்களை வாட்டி வதைத்துள்ளனர்.
இன்று இந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ் மொழிக்கு ஒரு பிரச்சினை என்றால் தி.மு.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம் பங்கேற்று பேசினர். இதில், மாநில மகளிர் அணி தலைவர் டாக்டர்.காஞ்சனா கமலநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட அவைத்தலைவர் தட்டரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினரும், நகர்மன்ற தலைவருமான பரிதாநவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், பாலன், சாமிநாதன், நாகராசன், கோதண்டன், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், கோவிந்தன், தனசேகரன், குமரேசன், செல்வராஜ், வசந்தரசு, நரசிம்மன், சாந்தமூர்த்தி, மகேந்திரன், சுப்பிரமணி, பேரூர் செயலாளர்கள் தம்பிதுரை, பாபு, வெங்கட்டப்பன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- பேருந்திலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று மாலை அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் பஸ்ஸின் மீது பூமாலையை எடுத்து வீசி உள்ளனர். அதை கேட்ட நடத்துனர் ராமலிங்கம் மற்றும் டிரைவர் கிருஷ்ணன் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதி இளைஞர்கள் பேருந்திலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் வேப்பனபள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டிரைவர் மற்றும் நடத்துனர் இருவரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வாலிபர்கள் டிரைவர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு செல்ல கூடிய பேருந்துகளை நிறுத்தி மாற்று வழியில் பேருந்துகளை இயக்க மாவட்ட போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.
- குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓசூர்,
ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி தமிழ் நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் விஷ வாயு பரவியதையடுத்து, அங்கு படித்து வரும் 67 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பெரும்பாலான மாணவர்கள் அன்று இரவே வீடு திரும்பினர். பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி விஷ வாயு பரவியது? என்பது குறித்து அறிய, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது தொழில்நுட்ப அலுவலர்கள், மல்டி கியாஸ் டிடெக்டர், மோனாக்சைடு டிடெக்டர், பிட் டிடெக்டர், டோட்டல் ஓலாட்டல் ஆர்கானிக் காம்பவுன்ட்ஸ் ஆகிய கருவிகளைக் கொண்டு விஷ வாயு பரவிய 6 மற்றும் 7- ஆம் வகுப்பறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், மாணவர்கள் வகுப்பில் விட்டு சென்ற புத்தகப் பைகள், மற்றும் வகுப்பறைகளில் இருந்த பொருட்கள் ஆகியவற்றையும் டிடெக்டர்கள் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், வகுப்பறையில் விஷவாயு அறிகுறி ஏதும் இல்லை, மாறாக வகுப்பறைகளில் இயற்கை நிலையிலேயே ஆக்சிஜன் இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், தொழில்நுட்ப அலுவலர்கள் அருகில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
- சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மலர் பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அரசிதழ பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஓசூர் மாநகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பாக கிருஷ்ணகிரி அணை தார் சாலையில் இருந்து பச்சிகானப்பள்ளி ஊராட்சி சோக்காடி கிராமத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் மறுசீரமைப்பு பணிகள் 30 சதவீதம் முடிக்கப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.1 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் உபகரணங்கள் சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும். வனத்துறை சார்பாக ஓசூர் வட்டத்திற்குட்பட்ட சூடாபுரம், தியாகரசனப்பள்ளி ஊராட்சிகளை சேர்ந்த 25 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மலர் பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கல்லாவி ஊராட்சி, பாளையங்கோட்டை மேட்டு காலனியில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக டாப்செட்கோ சார்பாக நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






