என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் விஷ வாயு பரவிய மாநகராட்சி பள்ளியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
- மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.
- குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓசூர்,
ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி தமிழ் நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் விஷ வாயு பரவியதையடுத்து, அங்கு படித்து வரும் 67 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பெரும்பாலான மாணவர்கள் அன்று இரவே வீடு திரும்பினர். பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.
இந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி விஷ வாயு பரவியது? என்பது குறித்து அறிய, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்போது தொழில்நுட்ப அலுவலர்கள், மல்டி கியாஸ் டிடெக்டர், மோனாக்சைடு டிடெக்டர், பிட் டிடெக்டர், டோட்டல் ஓலாட்டல் ஆர்கானிக் காம்பவுன்ட்ஸ் ஆகிய கருவிகளைக் கொண்டு விஷ வாயு பரவிய 6 மற்றும் 7- ஆம் வகுப்பறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், மாணவர்கள் வகுப்பில் விட்டு சென்ற புத்தகப் பைகள், மற்றும் வகுப்பறைகளில் இருந்த பொருட்கள் ஆகியவற்றையும் டிடெக்டர்கள் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், வகுப்பறையில் விஷவாயு அறிகுறி ஏதும் இல்லை, மாறாக வகுப்பறைகளில் இயற்கை நிலையிலேயே ஆக்சிஜன் இருந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், தொழில்நுட்ப அலுவலர்கள் அருகில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






