என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள்"
- அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
- சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மலர் பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அரசிதழ பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, ஓசூர் மாநகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பாக கிருஷ்ணகிரி அணை தார் சாலையில் இருந்து பச்சிகானப்பள்ளி ஊராட்சி சோக்காடி கிராமத்திற்கு ரூ.30 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் நீர்வரத்து கால்வாய்கள் மறுசீரமைப்பு பணிகள் 30 சதவீதம் முடிக்கப்பட்டு, தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.1 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் உபகரணங்கள் சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும். வனத்துறை சார்பாக ஓசூர் வட்டத்திற்குட்பட்ட சூடாபுரம், தியாகரசனப்பள்ளி ஊராட்சிகளை சேர்ந்த 25 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மலர் பூங்கொத்து தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கல்லாவி ஊராட்சி, பாளையங்கோட்டை மேட்டு காலனியில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக டாப்செட்கோ சார்பாக நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்று வரும் திட்டப் பணிகள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






