என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    • 1ம் தேதி முதல் கஞ்சா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் மாறும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 107 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 199 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 15 வாகனங்கள், 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 107 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த 8 பேரின் ஜாமீன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 கிராமங்களில் முற்றிலும் கஞ்சா புழுக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், மாவட்டத்தில் உள்ள சுமார் 2750 கிராமங்களில் 50 கிராமங்கள் கஞ்சா விற்பனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த 50 கிராமங்களிலும் கஞ்சாவை ஒழிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் 24 மணி நேரமும் கிராமங்களில் கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்டவை மேற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும். நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் கஞ்சா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் மாறும். இதற்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 9445437356 எண்ணிலும், 9498181214 என்கிற எண்ணின் வாட்ஸ் அப்பிலும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.

    மேலும், கஞ்சா பழக்கத் தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனையில் செயல்படும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையளிக்கப்படும். அவர்கள் முழுமையாக மீட்கப்பட்ட பின், கல்வி தகுதியின் அடிப்படையில் ஓசூர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு ணர்வு நடவடிக்கையாக 170 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்கவும், விற்பனை செய்யவும் 146 பேர் காவல்துறையினரிடம் விண்ணப்பம் செய்தனர். அனைத்து விண்ணப்பங்களும் நிலுவையின்றி உரிமம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது, கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர்கள் காவேரிப்பட்டணம் முரளி, மகாராஜகடை பிரகாஷ், கிருஷ்ணகிரி தாலுகா சரவணன், டவுன் கபிலன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர். 

    • உலக மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ ,மாணவியருக்கு இயக்குநர் டாக்டர். சந்தோஷ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாணவர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்புரையாற்றினார். பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி தலைமை தாங்கி பேசுகையில் மாணவர்கள் அப்துல் கலாம் கண்ட கனவினை நிறைவேற்றி நமது நாடு வல்லரசாக மாற்ற மாணவர்கள் உறுதி எடுக்கவேண்டும் மற்றும் அவர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவியர் வீட்டிற்கு ஒரு மரம் நடவு செய்து இயற்கையை பேணிக்காக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

    விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான போட்டிகள், கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவிய ப்போட்டி நடைப்பெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற மாணவ ,மாணவியருக்கு இயக்குநர் டாக்டர். சந்தோஷ் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர் பாஷா மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
    • நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    மிஷன் வட்சாலயா திட்டத்தின் படி இளைஞர் நீதி சட்டம் 2015ன் கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் 6 முதல் 18 வயதிற்குட்பட்ட தத்துக்கொடுப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் குழந்தைகள் இல்லங்களில் தங்கும் குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் கண்டறியப்பட்டு, அக்குழந்தைகள் குடும்ப சூழலில் வளர்வதற்கு ஏற்றவாறு நல்ல சூழலை உருவாக்கி குழந்தைகளை வளர்த்து பராமரிப்பதற்கு விருப்ப முடைய பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்பவர், சொந்த குழந்தைகள் இருந்தோ அல்லது தத்து எடுப்பதற்கு உரிய தகுதிகள் இருந்து தத்தெடுப்பிற்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என்ற வரையறையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம். வளர்ப்பு பராமரிப்பு காலங்களில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் உள்ளோர் மிஷன் வட்சாலயா திட்டத்தின் மூலம் நிதி உதவி தேவைப்படுமு வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தில் இருக்கும் குழந்தைகள் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் அல்லது குழந்தையின் 18 வயது முடியும் வரை வளர்ப்பு பராமரிப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும். வளர்ப்பு பராமரிப்பு பெற்றோர் என்ற வகையில் பராமரிப்பு செய்ய தயார் நிலையில் உள்ளவர்கள் விண்ணப்பம், நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகள் குறித்த விவரங்களை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், மாவட்ட மைய நூலகம் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் அறை எண்.8 மற்றும் 10ல் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-292567 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • கஞ்சா விற்பனை செய்தவர்களின் 44 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    ஓசூர்,

    ஓசூர் ஏ.எஸ்.பி. பி.கே. அர்விந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகுர் உத்தரவில், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஓசூர் சப்-டிவிஷனில், எனது தலைமையில் சப்-டிவிஷன் போலீஸ் நிலையங்களில் உள்ள 6 இன்ஸ்பெக்டர்களுடன் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, கஞ்சா விற்ற நபர்கள் மீது 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடமிருந்து 2 வாகனங்கள், 65 கிலோ கஞ்சா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை செய்தவர்களின் 44 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த ஒரு குற்றவாளி மீது மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இனி வரும் காலங்களில், ஓசூர் சப்-டிவிஷனில் யாருக்கேனும் கஞ்சா விற்பனை செய்வது அல்லது கடத்துவது பற்றி தெரிய வந்தால் 24 மணி நேரமும், போலீசாருக்கு 9498234567 என்ற போன் எண் மூலம் அல்லது வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம், ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    • குளிக்க சென்ற தீர்த்தகிரி சுழலில் சிக்கி நீரில் அடித்து செல்லப்பட்டார்.
    • பாவக்கல் என்ற இடத்தருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் என்று பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தீர்த்தகிரி (வயது 22). தருமபுரி சட்டக் கல்லூரியில் படித்து வந்தார்.

    சம்பவத்தன்று பாம்பாறு அணை ஆற்று படுகையில் குளிக்க சென்ற தீர்த்தகிரி சுழலில் சிக்கி நீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் ஊத்தங்கரை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தீர்த்தகிரியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் பாவக்கல் என்ற இடத்தருகே தீர்த்தகிரி சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
    • உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையில், இனிப்பு மற்றும் காரப் பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப் பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களும், உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

    ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்ய வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப் பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு, தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலரிடம் தெரிவிக்கலாம். மேலும், உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணிலும், மாவட்ட கலெக்டர் அலுவலக 1077 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • தரைபால பணியை விரை ந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து உள்ள பொம்மதாசம்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் அருகே பொதுமக்கள் செல்லும் சாலை குறுக்கே சிங்காரப் பேட்டை பெரிய ஏரியின் உபரிநீர் செல்லும் பாதையில் ஒரு சிறிய தரை பாலத்தை பயன்படுத்தி அருகே உள்ள நகர்புறங்களுக்கும், மருத்துவ பயன்பாட்டிற்கு செல்லவும், பள்ளி கல்லூரிக்கு செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த தரைப்பாலம் பழுதானது. பொதுபணி துறையினர் சார்பில் பாலம் சரிசெய்யும் பணி தாமதமாக நடந்து வந்ததால், நேற்று இரவு பேய்த மழையில் ஏரி உபரிநீர் அதிகளவில் வெளியேறி பாலத்தை மூழ்கடித்து செல்கிறது.எனவே உடனடியாக தரைபால பணியை விரை ந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் ஆபத்தை உணராத மாணவர்கள் மழைநீர் பாதையில் செல்பி எடுத்து செல்வது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

    • மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.
    • பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், இப்படி ஒரு தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    ஓசூர் காமராஜ் காலனியில் இயங்கி வரும் மாநகராட்சி தமிழ் நடுநிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை விஷ வாயு பரவியதையடுத்து, அங்கு படித்து வரும் 67 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பாதிப்புக்குள்ளான ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரும் சிகிச்சைக்கு பின் தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி விஷ வாயு பரவியது? என்பது குறித்து ஓசூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் அடங்கிய குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    இதன் தொடர்ச்சியாக நேற்று, பள்ளி மேலாண்மைக்குழு சார்பில், மாணவர்களின் பெற்றோருக்கு உண்மை நிலையை விளக்கி கூறும் வகையில் பள்ளி வளாகத்தில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மேலாண்மைக்குழு தலைவி சவீதா பேசுகையில்,பள்ளியில் செப்டிக் டேங்க் கசிந்து விஷவாயு பரவி மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்பது வதந்தியாகும். பள்ளியின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில், இப்படி ஒரு தகவல் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை உண்மை காரணத்தை விரைவில் கண்டறிந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாளை முதல் (இன்று), பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழக்கம் போல் பள்ளிக்கு அனுப்பலாம். யாரும், பயப்படத் தேவையில்லை.

    இந்த பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மை குழுவினரும், குழந்தைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார். மேலும், பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார். இதில், குழுவின் துணைத்தலைவர் குமுதா, பொறுப்பாளர்கள் சிவகுமார் என்ற சுவாமி, மேகலா, மாலினி, சத்யா, சர்மிளா, சங்கீதா, ஆரிப், ராதிகா, சுதா, மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கொண்டனர்.

    • தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது.
    • தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    காவேரிப்பட்டணம்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ யுனிவர் சிட்டியில் விஞ்ஞானி மற்றும் கல்லூரி விரிவுரை யாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் அந்த கல்லூரியில் பணிபுரியும் தைவான் நாட்டை சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்பவருக்கும், ராஜேந்திரனுக்கும் ஜப்பானில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலை தங்கள் வீட்டில் தெரிவித்துள்ளார்கள். இதனால் இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய ஜப்பானிலிருந்து சியாங் ஷியா ஜோன், ராஜேந்திரனும் காவேரிப்பட்டணம் வந்தனர்.

    இன்று காலை காவேரிப்பட்டணம் கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நிர்வாகி அருள் மூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன், சியாங் ஷியா ஜோன் ஆகியோருக்கு உறவினர்கள் புடைசூழ திருமணம் நடைபெற்றது. மணமகளின் சகோதரரும் வெளிநாட்டில் இருந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.

    இந்த திருமணம் குறித்து மணமகள் சியாங் ஷியா ஜோன் கூறிய போது நாங்கள் இருவரும் காதலித்தோம். இந்நிலையில் திருமணம் செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் இந்தியா வந்தோம். இன்று தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.

    • தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • .அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சாரதி (வயது 52).இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்காக வந்து தங்கியிருந்தார்.

    இந்நிலையில் அந்த நிறுவனத்தின் 3-வது மாடியில் கண்ணாடி பொருத்தும் பணியில் சாரதி ஈடுபட்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அவரை மெட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சைலஜா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தென்னந்தோப்புக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகேயுள்ள கால்வே ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (எ) சரவணன் (வயது 35), கூலி தொழிலாளி.தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த திருப்பதி தனக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது தம்பி சசிகுமார் தந்த புகாரின்பேரில் காவேரி பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல போச்சம் பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியை சேர்ந்த பழனி(40) என்ற கூலி தொழிலாளி குடும்ப தகராறில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட பழனி அங்கு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயில் புரனமைக்கப்பட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று விழாவின் ஒரு பகுதியாக, பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கோயில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட கிராம தெய்வங்கள்

    மேள,தாளம் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலை மீது தேங்காய் உடைக்கும் இடத்தின் அருகே அனைத்து தெய்வங்களும் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    பின்னர் பக்தர்கள் தலை மீதுதேங்காய் உடைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த விழாவில் ஓசூர்,தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பெங்களூரு, சர்ஜாபுரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த குருபர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×