என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஒருமாதத்திற்குள் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாறும் -மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி
- மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
- 1ம் தேதி முதல் கஞ்சா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் மாறும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 107 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட எஸ்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா விற்பனை செய்த நபர்கள் மீது 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 199 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 15 வாகனங்கள், 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 107 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த 8 பேரின் ஜாமீன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 கிராமங்களில் முற்றிலும் கஞ்சா புழுக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் உள்ள சுமார் 2750 கிராமங்களில் 50 கிராமங்கள் கஞ்சா விற்பனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 50 கிராமங்களிலும் கஞ்சாவை ஒழிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் 24 மணி நேரமும் கிராமங்களில் கண்காணிப்பு, ரோந்து உள்ளிட்டவை மேற்கொண்டு எதிர்வரும் 10 நாட்களில் கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும். நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் கஞ்சா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் மாறும். இதற்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் 9445437356 எண்ணிலும், 9498181214 என்கிற எண்ணின் வாட்ஸ் அப்பிலும் தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
மேலும், கஞ்சா பழக்கத் தால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனையில் செயல்படும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையளிக்கப்படும். அவர்கள் முழுமையாக மீட்கப்பட்ட பின், கல்வி தகுதியின் அடிப்படையில் ஓசூர் பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வனத்துறை மூலம் ஏற்படுத்தப்பட்ட விழிப்பு ணர்வு நடவடிக்கையாக 170 உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்கவும், விற்பனை செய்யவும் 146 பேர் காவல்துறையினரிடம் விண்ணப்பம் செய்தனர். அனைத்து விண்ணப்பங்களும் நிலுவையின்றி உரிமம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது, கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, இன்ஸ்பெக்டர்கள் காவேரிப்பட்டணம் முரளி, மகாராஜகடை பிரகாஷ், கிருஷ்ணகிரி தாலுகா சரவணன், டவுன் கபிலன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.






