என் மலர்
கிருஷ்ணகிரி
- கிருஷ்ணகிரியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
- அரசு மற்றும் மெட்ரிக் பள்ளியில் இருந்து சுமார் 750 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின் பேரில் கிருஷ்ணகிரியில் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து அரசு மற்றும் மெட்ரிக் பள்ளியில் இருந்து சுமார் 750 மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் ஊத்தங்கரை பேரொளி சிலம்பப்பள்ளி யில் பயின்ற மஹாலக்ஷ்மி, ரோஹிணி, ஏஞ்சல், நிஷாந்தன், கிரி, தினேஷ், வேடியப்பன், தரனிஷ், பிரசாந்த் ஆகிய 9 மாணவ, மாணவிகள் முதலிடமும், ப்ரீத்தா, மதிசுவேதா, தனுஸ்ரீ, ஆகிய 3 மாணவ மாணவிகள் இரண்டாமிடமும், அரவிந்த், கோகுல், மோனிகா, பிரேம்குமார், சிவப்ரியா, தீபலக்ஷ்மி, தமிழ்மணி, ஸ்ரீலக்ஷ்மி ஆகிய 8 மாணவ மாணவிகள் மூன்றாமிடமும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர். இதில் முதலிடம் பெற்ற 9 மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில் ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டும் விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார். ஊத்தங்கரை மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் நினைவுப்பரிசுகளை ஜே.ஆர்.சி. கணேசன் வழங்கினார். பேரொளி சிலம்பப்பள்ளி ஆசான் சதாசிவம், மற்றும் விழாவை சிறப்பித்த அழைப்பாளர்கள் அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு மைதானத்தின் பொறுப்பாளர் அந்தோணி, தலைமை ஆசிரியர் வீரமணி, உதவி தலைமை ஆசிரியர் ஜே.ஆர்.சி. கணேசன், ஏ.ஆர்.எஸ். ராஜவேல், எம்.எஸ்.எம். சுரேஷ், கணபதி குணசேகரன், உடற்கல்வி ஆசிரியர் திருப்பதி, யூத் ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக பென்சிகர், கார்த்திக்,ஜீவா, சுகுணாவிலாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிலம்பம் மாஸ்டர் சதாசிவம் செய்திருந்தார்.
- புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில், மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் யசஷ்வினி மோகன், எம்.கே. வெங்கடேஷ் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது.
- மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழகத் தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகம் மற்றும் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஆகியவை இணைந்து, உலக மரபு வார விழா கடந்த 19-ந் முதல் 25-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொண்டாடி வருகிறது. 19-ந் தேதி தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி மற்றும் இருதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள கல்வெட்டுக்களை படித்து, அவ்வூர் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விளக்கிக் கூறியதோடு, மரபுச் சின்னங்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், ஓவியப்போட்டி நடந்தது. இந்த போட்டியில் 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, பறவை, விலங்கு என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்புக்கு எனக்கு பிடித்த சுற்றுலா தளம், 11, 12-ம் வகுப்புகளுக்கு அருங்காட்சியக காட்சிப் பொருள் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் பரிசு வழங்கி பாராட்டினார்.
வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்செல்வி, மாணவர்களை வாழ்த்திப் பேசினார். தொல்லியல் அலுவலர் பரந்தாமன், மாணவர்களுக்கு தொல்லியல் பற்றி விளக்கம் அளித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார் ஒருங்கி ணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஓவியப்போட்டியை அருங்காட்சியகப் பணியா ளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வானவில் பன்னீர்செல்வம் பரிசுக்குரிய ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.
- மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார்.
- உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜி.ராமு உள்ளிட்ட துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில், ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ. சத்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- 60,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒசூர்,
ஒசூர் கோகுல்நகர், நந்தவனம் லே- அவுட் அருகே வசித்து வருபவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் நாகராஜ்(வயது 58).
இவர் நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்பிக்க வெளியே சென்றுள்ளார். இவரது வீட்டில் யாருமில்லாத சமயத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைந்து பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 60,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பயிற்சிக்கு பிறகு வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து ஒசூர் நகர போலிசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகிறார்.
- தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டம் தட்டர அள்ளியில் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
காவேரிப்பட்டணம் ,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் மற்றும் நாகரசம்பட்டி பேரூர் சார்பில் தி.மு.க. பொது உறுப்பினர் கூட்டம் தட்டர அள்ளியில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அதிமகேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா, கவுன்சிலர்கள் குமரவேல், வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ், விமலா, மணி, பெரியசாமி, மாதவி முருகேசன், வெண்ணிலா முருகேசன், மகேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் சுரேஷ் நன்றி கூ றினார்.
- வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கோகுல்நகர், நந்தவனம் லே-அவுட் அருகே வசித்து வருபவர் சிலம்பாட்ட பயிற்சியாளர் நாகராஜ் (வயது58). இவர் நேற்று மாலை பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்பிக்க வெளியே சென்றுள்ளார்.
இவரது வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த நாகராஜ், வீட்டில் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் ஒசூர் நகர போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டார். மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது.
- யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஏக்கல்நத்தம் வனப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 9 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த காட்டு யானைகள் அவ்வப்போது அப்பகுதியில் ஊருக்கள் புகுந்து விவ சாய நிலங்களையும், பயிர்க ளையும் நாசம் செய்து வந்தது.
இந்த நிலையில் காட்டு யானைகளை வனத்துறையினர் ஏக்கல்நத்தம் வனப்பகுதிக்கு விரட்டி இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் 9 காட்டு யானைகளும் தமிழக எல்லை வனப்பகுதியான எப்ரி பகுதியில் முகா மிட்டுள்ளது. மீண்டும் 9 காட்டு யானைகள் எப்ரி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகளும் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வேறு வனப்பகுதி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எப்ரி வனப்பகு தியில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஆடு, மாடுகள் மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்து றையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கர்நாடகா மாநில கோலார், ராம்நகர் பட்டுக்கூடு அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
- 10 மாதங்களில் 1,425 டன் அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7432.65 ஏக்கர் பரப்பளவில் 3,720 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அதிகப்பட்ச மல்பெரி பரப்பு (15 சதவீதம்) இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.
இந்த ஆண்டில் கூடுதலாக 715 ஏக்கர் பரப்பளவில் 395 விவசாயிகள் மல்பெரி சாகுபடி செய்துள்ளனர். குறிப்பாக கடந்த 10 மாதங்களில் 1,425 டன் அளவில் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள், கிருஷ்ணகிரி, ஓசூர் பட்டுக்கூடு அங்காடிகளிலும், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம் பட்டுக்கூடு அங்காடிகளிலும், கர்நாடகா மாநில கோலார், ராம்நகர் பட்டுக்கூடு அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.
பட்டு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு, பட்டு வளர்ச்சித்துறை மூலம் மாநில திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீரிய ரக மல்பெரி ரகங்கள் நடவு மேற்கொள்வதற்கு 1 ஏக்கருக்கு, ரூ.10,500 வீதம், 5 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. 1,000 முதல் 1500 சதுர அடி அளவில் தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை நிறுவுவதற்கு, ரூ.1,20,000 மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று, பட்டு புழு வளர்ப்பு மற்றும் பட்டு கூடு உற்பத்தி செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குட்டையின் அருகே தோழியுடன் விளையாடி கொண்டி ருந்தார்.
- நைனா ஸ்ரீ தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள அலேசீபம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர்.திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் நைனா ஸ்ரீ (வயது 10). இவர் அதே கிராமத்தில் உள்ள ஆங்கிலப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று நைனா ஸ்ரீ வீட்டின் அருகே உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் உள்ள குட்டையின் அருகே தோழியுடன் விளையாடி கொண்டி ருந்தார்.
அப்போது நைனா ஸ்ரீ தவறி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இதை அறிந்த அக்கம் பக்கத்தவர் இறந்த நைனாஸ்ரீ உடலை மீட்டனர். பின்பு ஓசூர் அரசு மருத்துமனைக்கு மாணவியின் உடலை உத்தனப்பள்ளி போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வின் 51- வது தொடக்க விழாவையொட்டி கட்சிக்கொடி ஏற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு அ.தி.மு.க.வின் நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி அ.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் எம்.எல்.ஏ., காவேரிபட்டிணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரவி, பேரூராட்சி முன்னாள் தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. பேசினார். அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஹரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
- சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.
- தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடி குப்பம் அருகே உள்ள கீழ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகள் பார்கவி (வயது 17). இவர் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அரசு மேல்நிலை ப்பள்ளி யில் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு மாணவி வழக்கம் போல சென்றார். மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
இந்த நிலையில் ஐகுந்தம் பெரிய ஏரி பகுதியில் நேற்று பிற்பகல் சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.
இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஏரி பக்கமாக நடந்து சென்ற போது மாணவி ஏதேனும் தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






