என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான மாணவி ஏரியில் பிணமாக மீட்பு
- சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.
- தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மோடி குப்பம் அருகே உள்ள கீழ்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகள் பார்கவி (வயது 17). இவர் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அரசு மேல்நிலை ப்பள்ளி யில் பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு மாணவி வழக்கம் போல சென்றார். மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்.
இந்த நிலையில் ஐகுந்தம் பெரிய ஏரி பகுதியில் நேற்று பிற்பகல் சீருடை அணிந்த நிலையில் மாணவி பார்கவி இறந்து கிடந்தார்.
இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஏரி பக்கமாக நடந்து சென்ற போது மாணவி ஏதேனும் தவறி விழுந்தாரா? அல்லது தண்ணீரில் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






