என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
    • இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யாரப் நகர் மசூதி தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மகன் முரளி (வயது 37). ஆட்டோ ஒட்டி வந்தார்.

    இவருக்கும் அவரது தம்பி தேவராஜ் (வயது 35), என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே மர்ம நபரால் முரளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முரளியின் தாய் கீதாம்மாள் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார்.

    கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் நிலப்பிரச்னை காரணமாக அவரது தம்பி தேவராஜ் , தனது நண்பரான சின்ன மேனகரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் சேர்ந்து முரளியை கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.
    • தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் அடித்து கலைத்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னமனவாரணபள்ளி கிராமத்தில் சசிகுமார் என்பவரது வீட்டிற்குள் தேனீக்கள் கூட்டம் புகுந்துள்ளது.

    தேனீக்கள் கூட்டத்தை பார்த்த சசிகுமார் குடும்பத்தினர் அலறிய டித்து வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் கிராம மக்கள் தேனீக்களை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஆனால் தேனீக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அப்பகுதியில் பொதுமக்களை கொட்ட முயன்றது. இதனால் கிராம மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்டுக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரியில் இருந்து மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து வந்து வீட்டிற்கு புகுந்த தேனி கூட்டை தண்ணீர் பீச்சி அடித்து கலைத்தனர்.

    பின்பு அப்பகுதியில் இருந்த தேனீக்களை அகற்றி பையில் போட்டுக்கொண்டு வனப்பகுதியில் கொண்டு சென்று தேனிக்களை பத்திரமாக விட்டனர்.

    வீட்டிற்குள் இருந்த தேனீக்கள் கூட்டை அகற்றியதால் அப்பகுதி பொதுமக்களும் சசிகுமார் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர். வீட்டுக்குள் தேனிகள் கூட்டம் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
    • வீடுகள்தோறும் நேரிடையாக பார்வையிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட வண்ணார் தெரு, ஜனப்பர் தெரு, கீழ் கொல்லர் தெரு, செம்படவர் தெரு, காஜல் பண்டா, சுண்ணாம்பு தெரு, பாகலூர் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சினைகள் குறித்து வீடுகள்தோறும் நேரிடையாக பார்வை யிட்டார்.

    பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிர மணியன், பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • கோழிப்பண்ணையில் தரைதளத்தில் தேங்காய் நார்கள் போடப்பட்டதால் தீ வேகமாக பரவியுள்ளது.
    • முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு கோழிகுஞ்சுகள் இறந்தது தெரியவந்தது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்துள்ள வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது (வயது45). இவர் அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்றிரவு திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ குபுகுபுவென பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது பற்றி கல்லாவி போலீசாருக்கும், ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர்.

    கோழிப்பண்ணையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் வெகுநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தால் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 3700 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.

    கோழிப்பண்ணையில் தரைதளத்தில் தேங்காய் நார்கள் போடப்பட்டதால் தீ வேகமாக பரவியுள்ளது. முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு கோழிகுஞ்சுகள் இறந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
    • லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் ரோந்து சென்றனர், அப்போது அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்து லாட்டரி சீட்டுக்கள் மற்றும் ரூ.350 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சூதாட்டத்தில் ஈடுபட்ட சுரேஷ்(வயது 35), தங்கராஜ்(44), சுரேஷ்(35), ராஜு (35), மணி (35), சதீஷ்குமார் (31) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோல மகாராஜா கடை போலீசார் மேல்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ராஜேந்திரன்(49) என்பவரை கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி பகுதியில் கஞ்சா விற்ற ரிஸ்வான் (25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது.
    • யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்பு காடு உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி அருகில் கடூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ளது அக்குபாய் கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.

    இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். அந்த பட்டா நிலத்திற்கு அடிக்கடி காட்டுபன்றிகள் வந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால் அந்த பட்டா நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கு யானைகள் கூட்டம் ஒன்று வந்தது.

    அந்த நேரம் குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது. இந்த நிலையில யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் அந்த குட்டி யானையை குழி தோண்டி புதைத்தார். இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரிய வர, அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்திசாரதி அங்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் குட்டி யானை மின் வேலியில் சிக்கி இறந்ததும், அதை அருகில் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அனைத்தும் ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்தில் நடந்துள்ளது.

    இது குறித்து வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்திகேயனிக்கு தெரிவித்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் குழுவினரும், நாகமங்கலம் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர்.

    அதே போல மின்வாரிய ஊழியர்களும், வருவாய்த்துறையினரும் அங்கு சென்றனர். இந்த நிலையில் இரவு ஆகி விட்டதால் யானையை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இன்று மதியம் கோவையில் இருந்து வனத்துறை சிறப்பு கால்நடை மருத்துவர் வந்த உடன் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செயயப்பட உள்ளதாக ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் விசாரணை நடத்தி வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து எல்லப்பனைது கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலு கொண்டப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது.

    இங்குள்ள பொதுமக்கள் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 22.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணி நடைபெற்று அனைத்து பணிகளும் நிறைவுபெற்றது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நாகவேணி பிரபாகர், ஒன்றிய அவை தலைவர் கிரிஷ், துணை செயலாளர்கள் ரமேஷ், மஞ்சு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி, துணை தலைவர் சைத்ரா சுரேஷ் வரவேற்றனர்.

    இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பா ளராக கலந்துகொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் 75 பயனாளிகளுக்கு முதியோர் ஒய்வூதிய ஆணை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சீனிவாசன், சுந்தர், ரத்தினம்மா, சசிகலா, அனிதா, லட்சுமி, கீதா, ரவி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.

    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
    • ஆத்திரம் அடைந்த நாராயணன், குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கண்ணுகானூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் குமரன் (வயது26). அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நாராயணன் (23).

    மரம் ஏறும் தொழிலாளியான இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் பிரச்சினை இருந்து வந்தது.

    கடந்த 19-ந்தேதி அன்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாராயணன், குமரனை சரமாரியாக தாக்கியுள்ளார். படுகாயம் அடைந்த குமரன் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

    • பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
    • மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, தையல் எந்திரம், முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 279 மனுக்களை வழங்கினார்கள்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கடந்த 1.10.2019 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பம் கிராமத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சிறுமிகள் சித்ரா, யேசுப்பிரியா ஆகியோர் அங்குள்ள ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

    அவர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண தொகை தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலை களை சிறுமிகளின் பெற்றோரிடம் கலெக்டர் நேற்று வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நெடுமருதியை சேர்ந்த நந்தகுமார் என்ற மாற்றுத்திறனாளி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனக்கு காதொலி கருவி கேட்டு மனு கொடுத்து இருந்தார். அவருக்கு உடனடியாக ரூ.3 ஆயிரத்து 200 மதிப்புள்ள காதொலி கருவியை கலெக்டர் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அயயப்பன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நந்தியம் பெருமானுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.

    ஓசூர்,

    கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு, நேற்று கார்த்திகை கடைசி சோமவாரம் ஆகும்.

    இதையொட்டி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள ஸ்ரீ சோமேஸ்வரசாமி உள்ளிட்டசிவ ஆலயங்களில் மூலவருக்கு பால், தயிர்,நெய், , பஞ்சாமிர்தம், திருநீறு, மஞ்சள் குங்குமம், பன்னீர்,இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    மேலும் நேற்று பிரதோஷ நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில், சிவன்கோவில்க ளில் உள்ள நந்தியம் பெருமானுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தி சென்றனர்.

    • வட்டாட்சியர் இளங்கோ வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • 150-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கண்டெய்னர் லாரிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்ட வட்டாட்சியர் இளங்கோ வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

    அப்பொழுது மத்தூர் அருகே உள்ள பெரிய ஜோகிபட்டி பிரிவு சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பறக்கும் படை வட்டாட்சியர் இளங்கோ துரத்தி பிடித்து விசாரணை நடத்தியதில் வண்டியை ஓட்டி வந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சின்ன கொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25 ) என தெரியவந்தது. மேலும் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

    பின்னர் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தார். மேலும் ரேஷன் அரிசி கடலில் ஈடுபட்ட சரத்குமார் என்ற நபரை கைது செய்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 165 கிராம மக்களின் வாழ்விடம் அமைந்துள்ளது.
    • 2006 வன மசோதா சட்டத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேன்கனிக்கோட்டை,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா தாசில்தாருக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் அமைப்பதற்கு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 686.405 சதுர கி.மீ., பரப்பில் திட்டமிட்டு அரசாணை அறிவித்துள்ளது. இத்திட்ட பகுதிக்குள் 165 கிராம மக்களின் வாழ்விடம் அமைந்துள்ளது. மேற்கண்ட திட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா பகுதியும் உள்ளடக்கியதாகும்.

    எனவே இத்திட்ட அமலாக்கத்தின்போது எல்லைக்குள் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் வனத்தை ஒட்டி வாழும் பழங்குடியினர் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காவிரி தெற்கு வன உயிரியல் சரணாலயம் அமைப்பது குறித்து பழங்குடியினர், விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் திட்டம் குறித்து விளக்கம் அளித்து கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும். பூர்வீகமாக மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காதவண்ணம், குடிமனைப்பட்டா, அனுபவ நிலங்களுக்கு பட்டா உள்ளிட்டவை 2006 வன மசோதா சட்டத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்கனவே வனச்சரனாலயங்கள் அமைக்கும்பொழுது பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் 3 கி.மீ., தூரம் வாழ்விடத்திலிருந்து தள்ளி அவர்களின் வாழ்வா தாரம் பாதிப்பில்லாமல் அமைத்திட உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. அதனடிப்படையில் திட்டம் அமல் படுத்த வேண்டும்.

    பாரம்பரிய காடுகளில் கால்நடைகள் வைத்து வரும் விவசாயிகளுக்கு பட்டிபாஸ் மற்றும் மேய்ச்சல் பாஸ் வழங்க வேண்டும். வனத்தையொட்டி 1 கி.மீ., தூரத்திற்கு மேய்ச்சல் உரிமை என்பதை அமலாக்கிட வேண்டும். வன ஓர இடங்களில் சாகுபடி செய்து வரும் நிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றக்கூடாது.

    காடுகளில் சிறு மகசூல் சேகரிக்க 2006 வன மசோதா சட்டப்படி அனுமதிக்க வேண்டும். மேய்ச்சலுக்கான பகுதிகளை வனச்சரனாலயங்கள் உள்ள பகுதிகளை வனத்துறை அனுமதி அளித்து ஒதுக்கித்தர மதுரை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே நமது மாவட்டத்திலும் அதற்கான நடைமுறைகளை அமலாக்க வேண்டும். வனப்பகுதிக்குள் வனத்துறையினர் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    காட்டிற்குள் சென்று வர விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரியமான பாதை களை அடைக்கக்கூடாது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×