search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராயக்கோட்டை அருகே மின் வேலியில் சிக்கி பலியான   குட்டி யானையை வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த விவசாயி கைது
    X

    ராயக்கோட்டை அருகே மின் வேலியில் சிக்கி பலியான குட்டி யானையை வனத்துறைக்கு தெரியாமல் புதைத்த விவசாயி கைது

    • குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது.
    • யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் குழி தோண்டி புதைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்பு காடு உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி அருகில் கடூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தையொட்டி உள்ளது அக்குபாய் கொட்டாய். இந்த ஊரை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.

    இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். அந்த பட்டா நிலத்திற்கு அடிக்கடி காட்டுபன்றிகள் வந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இதனால் அந்த பட்டா நிலத்தை சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த நிலத்திற்கு யானைகள் கூட்டம் ஒன்று வந்தது.

    அந்த நேரம் குட்டியானை மின்வேலியில் சிக்கி உயிர் இழந்தது. இந்த நிலையில யானை குட்டி இறந்ததை எல்லப்பன் பார்த்து அருகில் உள்ள நிலத்தில் அந்த குட்டி யானையை குழி தோண்டி புதைத்தார். இந்த தகவல் கிராம மக்களுக்கு தெரிய வர, அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் பார்த்திசாரதி அங்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வில் குட்டி யானை மின் வேலியில் சிக்கி இறந்ததும், அதை அருகில் புதைத்து இருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அனைத்தும் ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள பட்டா நிலத்தில் நடந்துள்ளது.

    இது குறித்து வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்திகேயனிக்கு தெரிவித்தார். இதையடுத்து அவருடைய தலைமையில் ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ மாரியப்பன், ஓசூர் வனச்சரக அலுவலர் ரவி மற்றும் குழுவினரும், நாகமங்கலம் ஊராட்சி தலைவர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு நேற்று விரைந்து சென்றனர்.

    அதே போல மின்வாரிய ஊழியர்களும், வருவாய்த்துறையினரும் அங்கு சென்றனர். இந்த நிலையில் இரவு ஆகி விட்டதால் யானையை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இன்று மதியம் கோவையில் இருந்து வனத்துறை சிறப்பு கால்நடை மருத்துவர் வந்த உடன் குட்டி யானையின் உடல் பிரேத பரிசோதனை செயயப்பட உள்ளதாக ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராயக்கோட்டை வனச்சரக அலுவலர் விசாரணை நடத்தி வன உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து எல்லப்பனைது கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×