என் மலர்
கிருஷ்ணகிரி
- தூய்மை நடை பயணம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
- நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டாகரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு முழு சுகாதாரத்தை நோக்கி மக்களின் பயணம் என்ற பெயரில் தூய்மை நடை பயணம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் கஜேந்திரன், சுகாதாரத்துறை ஆய்வாளர் கந்தவேல், மற்றும் வார்டு உறுப்பினர்கள் அஜய்குமார் , புனிதவதி சங்கர் , நித்யா சரவணன், பிரபு, லட்சுமி சக்திவேல், சின்ன பாப்பா, தர்மன், பாலமுருகன், வேலு, காயத்ரி, சுமன் , தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் நன்றி உரை வழங்கினார்.
- 20 நாட்களுக்கு பிறகு டெலிவரி வழங்கப்பட்ட போது ஆர்டரில் 60 சதவீத பொருட்கள் மட்டுமே இருந்துள்ளது.
- பழனிவேல் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் ரூபிங் ஷீட் கடை நடத்தி வருபவர் பழனிவேல் (வயது 45). இவர் ஒசூர் அருகே கலுகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரூபிங் ஷீட் தயாரிப்பு நிறுவனத்தில், ரூபிங் ஷீட் பெற 8,80,000 ரூபாய் பணம் செலுத்தினார்.
20 நாட்களுக்கு பிறகு டெலிவரி வழங்கப்பட்ட போது ஆர்டரில் 60 சதவீத பொருட்கள் மட்டுமே இருந்துள்ளது. இது குறித்து பழனிவேல் நிறுவனத்திடம் கேட்டதற்கு, மேலும் 25 நாட்கள் கழித்து வழங்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பழனிவேல் 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது 100 சதவீதம் முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக நிறுவனத்தார் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அந்த நிறுவன நிர்வாகத்திடம் பலமுறை பேசியும் எந்த பதிலும் இல்லாததால், மனமுடைந்த பழனிவேல், அந்த நிறுவனத்தை தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் எந்த சுமூக தீர்வும் ஏற்படாததால், தனியார் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக மத்திகிரி போலீசில் பழனிவேல் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, உலக மரபு வாரத்தை கொண்டாடி வருகிறது.
- நடுகற்களின் வகைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, உலக மரபு வாரத்தை கொண்டாடி வருகிறது. அதன்படி, காவேரிப்பட்டணம் அடுத்த அகரம் கிராமத்தில், வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தருமபுரி மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இக்களப்பயணத்தில், அகரம் அடுத்த தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னந்தோப்பில் அமைந்துள்ள பலவகையான நடுகற்கள் குறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர், நடுகற்களின் வகைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.
இங்கு மாடுபிடி சண்டையில் இறந்த வீரர்களுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் போன்ற பல காரணங்களுக்காக உயிரிலந்த நமது முன்னோர்களின் நடுகற்கள் காணப்பட்டன. இவற்றின் பொருள் என்ன, இவற்றை எவ்வாறு பாதுகாப்பது, போன்ற நமது மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இதில், பேராசிரியர்கள் கிருத்திகா, சரண்யா உள்பட, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது.
- உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பாக பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தை சார்ந்த, வாழ்வோருக்கான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் மற்றும் பிற மரபு வழி சார்ந்த வனத்தில் குடியிருப்போர் அடிப்படை ஆதார வசதிகளான இலவச பட்டா, குடிநீர் வசதி, பள்ளிக் கூடங்கள், மருந்தகம் அல்லது மருத்துவமனை, அங்கன்வாடிகள், நியாய விலைக்கடைகள், மின்சாரம், தொலைத்தொடர்பு, குளங்கள், சிறிய நீர்நிலைகள், நீர் அல்லது மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், சிறுபாசன கால்வாய்கள், மரபு சாரா எரிபொருள் மூலாதாரம் அமைத்தல், திறன் வளர்ப்பு அல்லது வாழ்க்கை தொழில் சார்ந்த பயிற்சி மையங்கள், சாலை வசதி மற்றும் சமுதாய கூடங்கள் ஆகியவற்றை செய்து தர மாவட்ட அளவிலான வன உரிமை குழு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கோட்ட அளவில் உள்ள அலுவலர்கள் மற்றும் கிராம அளவில் உள்ள குழு உறுப்பினர்களுக்கு கிராமங்களில் மனுக்கள் பெற்று, தகுதியான மனுக்களை மாவட்ட அளவிலான குழுக்களுக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கி ருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கதிரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
- பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக்கூடத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வட்டார மருத்துவர் சரவணன் அறிவுறுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் சந்தனம் பூசி, பொட்டு வைத்து, கை வளையல் பூட்டி, மாலை அணிவித்து, பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்கள் அனை வருக்கும் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனை வருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
- ரூ.31.82 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகள், சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 36,176 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.31.82 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 8 ஊராட்சிகள், சிகரலப்பள்ளி மற்றும் 143 இதர குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 36,176 பேர் பயன் பெறும் வகையில் ரூ.31.82 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான ஆண்டு பராமரிப்பு செலவிற்காக ரூ-.41 லட்சத்து 50 ஆயிரத்திற்கு, நபார்டு வங்கியின் கடனுதவி 82 சதவீதமும், குறைந்தபட்ச தேவை திட்டத்தின் மூலமாக 15 சதவீதம் நிறைவேற்ற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும், பென்னேஸ்வரம் மடம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் 3 நீர் உறிஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைமையிடத்தில் உள்ள 0.85 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்சேகரிப்பு தொட்டிக்கு குடிநீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
இங்கிருந்து தொகரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, குட்டூர், பண்டசீமனூர், சிகரலப்பள்ளி, மல்லபாடி, ஒப்பதவாடி ஆகிய 8 ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டிகளுக்கும், பட்லப்பள்ளி,
கணமூர் கொல்லக்கொட்டாய் 2 நீர் உந்து நிலையத்திற்கும், நீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இதேபோல, ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பில் கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட வெலகலஹள்ளி மற்றும் 39 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே சீராக குடிநீர் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
- வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் கோரணப்பபாளய பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 47).இவர் கட்டிடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு தரும் வேலை பார்த்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் காரக்குப்பம் ஜங்சன் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த மனோகரன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மனோகரனின் மனைவி வெண்ணிலா தந்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல சூளகிரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற மோஹன்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
- அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் நவீன் (வயது 19).
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த இவர் ஓசூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் தனக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை வா ங்கி தரச்சொல்லி நவீன் தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.ஆனால் அவர் மறுத்துவிட்டார்.இதனால் மனம் உடைந்த நவீன் விஷம் குடித்து விட்டார்.
அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் உயிரிழந்தார்.இது குறித்து சதீஷ்குமார் தந்த புகாரின் பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
- சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மாதம்பதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 3 பேரையும் மடக்கி அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.சூதாடிய முருகன், சுரேஷ்குமார்,சபீர் ஆகிய அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல வேப்பனபள்ளி போலீசார் சீலேபள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது இருசக்கரவாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்,அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்திவந்த தருமபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்த நூரான் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.
- பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள நாகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 40).இவரது கணவர் ஹரிகிரு ஷ்ணன். ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு சுமதி தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு தெரியாமல் பானுபிரியா என்ற பெண்ணை ஹரிகிருஷ்ணன் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பற்றி அறிந்த சுமதி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் ஹரிகிருஷ்ணன், அவரது பெற்றோர் வைரப்பன்,ஜோதி,2-வது மனைவி பானுபிரியா மற்றும் உறவினர்கள் ராஜன்,அமுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
- பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளி எப்போது மற்ற அரசு பள்ளிகளை விட தனித்துவமாக செயல்பட்டு பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாண வர்களுக்கு பல்வேறு வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் பலூன் வைத்து நடத்தல், கண்ணை கட்டி முட்டை உடைத்தல், தண்ணீரில் ஆப்பிள் சாப்பிடுதல், கண்ணை கட்டி தண்ணீர் ஊற்றுதல், சைக்கிள் போட்டிகள், பிஸ்கட் மீது காசு வைத்தல், செங்கல் மீது நடத்தல், காலால் முறுக்கு சாப்பிடுதல், மாவு பிஸ்கட் சாப்பிடுதல் என வித்தியாசமான முறையில் பள்ளி குழந்தைகளுக்கு போட்டியில் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் அனைத்திலும் விறுவிறுப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில் வட்டார கல்வி அலுவர் மரியா ரோஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சந்திரகலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளியில் இது போன்று வித்தியா சமான முறையில் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்பகுதி பெற்றோர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
- யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.
- எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு பகுதியில் யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி உள்ள அக்குபாய் கொட்டாயை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 63). விவசாயி.
இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். அந்த நிலத்தில் அடிக்கடி காட்டு பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் நிலத்தை சுற்றிலும் எல்லப்பன் மின்வேலி அமைத்து இருந்தார். இந்த நிலையில் அந்த நிலத்திற்கு வந்த யானைகள் கூட்டத்தில் குட்டி யானை ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது.
இதையறிந்த எல்லப்பன் தனது மகன்களுடன் சேர்ந்து குழி தோண்டி யானையை புதைத்தார். இந்த தகவல் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் நேற்று முன்தினம் அங்கு சென்றனர்.அப்போது இரவு நேரமாகி விட்டதால் யானையின் உடலை தோண்டி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எல்லப்பனை போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை அங்கு ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமையில், ஓசூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வனச்சரக அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
அதேபோல கோவையில் இருந்து சிறப்பு வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும் அங்கு வந்தனர்.
தொடர்ந்து பொக்லைன் மூலம் குழி தோண்டி கிரேன் மூலமாக யானையின் உடல் மேலே எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த பரிசோதனையின் முடிவில் யானை மின்வேலியில் சிக்கி இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து யானையின் உடல் அந்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மின்வேலி அமைத்து யானையை கொன்ற குற்றத்திற்காகவும், யானையின் உடலை புதைத்து தடயத்தை அழித்த குற்றத்திற்காக விவசாயி எல்லப்பனுக்கு உடந்தையாக இருந்த அவரது மகன்கள் முனிராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.






