என் மலர்
கிருஷ்ணகிரி
- கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- மாவட்டம் முழுவதும் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி போச்சம் பள்ளி முல்லை நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேல்முருகன் (வயது 44) என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
இதேபோல மத்திகிரி பகுதியில் குலாம் முகமது (70) என்பவரையும், சூளகிரி பகுதியில் முருகேசன் (60), பைசல் (23) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கெலமங்கலம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய நாகராஜ் (55), மஞ்சுநாத் (35) மற்றொரு நாகராஜ் (35) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
- துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பாக 74-வது இந்திய குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.பெருமாள் தலைமை ஏற்று தேசிய கொடியினை ஏற்றினார். கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளிபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் பெருமாள் மாணவர் களிடையே பேசும்போது தாய்மொழி யையும் தாய்நாட்டையும் அனைவரும் இரு கண்களாக போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
கல்வியின் பயன் தன்னை உருவாக்கிய தாய்நாட்டிற்கு பயன் பெறுமாறு மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிந்து நம் நாட்டை வல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும். ஜெய் ஜவான், ஜெய்கிசான் என முன்னாள் பிரதமர்லால்பகதுர் சாஸ்திரி கூறியது போல அனைவரும் ராணுவத்தினரையும், விவசாயிகளையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
மாணவர்கள் எங்கு பயில்கிறார்கள் என்பதை விட கல்வியை எவ்வாறு கற்கிறார்கள் என்பது முக்கியமாகும் என்று வாழ்த்தினார். இவ்விழாவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.
- தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள், கட்டண கழிப்பிடம், நகராட்சி கட்டிடங்கள் குத்தகை உள்ளிட்டவற்றுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம்.
இதில் குத்தகை இனத்தொகை குறைவாக பதிவு செய்தும், உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இது தொடர்பாக நகராட்சி இளநிலை உதவியாளர் சரஸ்வதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்கம் வசூல், புதிய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய கட்டணக் கழிப்பிடம், புதிய பஸ் நிலைய தட்டுமுறுக்கு கிழங்கு மற்றும் பூவிற்கும் உரிமம் உள்ளிட்டதற்கான டெண்டர்கள் விடப்பட்டதில் குத்தகை இனம் தொகை மிகவும் குறைவான அளவில் கோரப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதில் உரிமை தொகையும் செலுத்தப்படவில்லை. அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த முறைகேடுகள் இருப்பது தெரிந்தது. மேலும் டெண்டரில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் தற்போது டெண்டர் விடப்பட்டதில் நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்திய நகராட்சி பொறியாளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஞானசேகரன், உதவியாளர் புஷ்பராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அதே போல இதற்கு முன்பு விடப்பட்டதிலும் முறைகேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அப்போதைய நகராட்சி பொறியாளராகவும், தற்போதைய ஜோலார்பேட்டை நகராட்சி பொறியாளர் கோபு என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவுபடி, தற்போது ஏலம் விடப்பட்ட தினசரி மார்க்கெட் புதிய, பழைய, பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், புதிய பஸ் ஸ்டாண்ட் தட்டு முறுக்கு, கிழங்கு, உரிம தினசரி வசூலை நகராட்சி பணியாளர்களே மேற்கொள்ள வேண்டும் எனவும், வசூல் தொகையை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் . மறு ஏலம் விடப்படும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகிறது.
- கந்தமாரி அம்மன் , விநாயகர் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
- மகா தீப ஆராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள கந்தமாரி அம்மன் , விநாயகர் மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா சண்டி யாகம் நடைபெற்றது.
கடந்த 25-ம் தேதி குருபூஜை, திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை நடைபெற்றது. 26-ம் தேதி திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சிவ சூரிய பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம், நவகிரக ஓமம் நடைபெற்றது.
மகா பூர்ணாகூதியை தொடர்ந்து, கந்தமாரி அம்மன் கோவில் கோபுரம் கும்பாபிஷேகம் நன்னீராட்டு நடைபெற்றது. சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று கந்த மாரியம்மனுக்கு நூதன ஆதி கந்த மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு விசேஷ சண்டி ஓமம் மங்கள திரவிய பொருள்கள் யாக வேள்வி நடைபெற்றது.
மகா தீப ஆராதனை முடிந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
- 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் பகல் 12 மணி முதல் அம்மனின் கீழ் வைக்கப்பட்டிருந்த காமாட்சி விளக்கின் சுடர் அணைந்து பின்னர் பிரகாசமாக எரிந்தது.
காற்றில் இது போன்று நடந்திருக்கும் என நினைத்த கோவில் பூசாரி, தொடர்ந்து இதே போன்று அணைந்து பின் மீண்டும் பிரகாசமாக எரிவதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.
அம்மன் கோவிலில் 8 மணி நேரத்திற்கும் மேலாக விளக்கு அணையாமல் எரிந்த தகவல் பக்தர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இந்த அதிசயத்தை பார்த்து அம்மனை பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.
மேலும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இது குறித்து கோவில் பூசாரி பொன்னுசாமி கூறுகையில், காலையில் ஒரு முறை மட்டுமே எண்ணெய் ஊற்றினோம்.
ஆனால் தொடர்ந்து இதே போன்று விளக்கு அணைந்து பின்னர் சுடர்விட்டு எரிகிறது. இதை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர் என்றார்.
- கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார்.
- போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார்.
கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார்.
அப்போது அதில் 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
- சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஓசூர்,
குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் கட்சியினர் அனைவரும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி, கட்சி அலுவலகம் முன்பு மனித சங்கிலியாக கைகோர்த்து நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது, காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தேசத்தலைவர்களை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக, முரளிதரன் தலைமையில் எம்ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
- மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள அத்திபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மோனிஸ் கிருஷ்ணா (வயது 15). பள்ளி மாணவனான இவர் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
இது குறித்து அவரது தாய் சுதா கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.
இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள கொல்லபட்டியை சேர்ந்த குமரேசன் (34) என்பவர் கடந்த 25-ம் தேதி முதல் காணாமல் போய் விட்டார், இது குறித்து அவரது மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பெங்களூருவை சேர்ந்த சல்மான்கான் (23) என்ற வாலிபர் ஓசூர் ராம்நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஹிதாஜி பானு கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சல்மான்கானை தேடி வருகின்றனர்.
- பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்றும் கூறப்படுகிறது.
- லட்சுமி வீட்டில் யாருமில்லாதபோது தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகேயுள்ள ஜே.காரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 21).
இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமி தீராத வயிற்று வலியால் தவித்து வந்ததாகவும், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் லட்சுமி வீட்டில் யாருமில்லாதபோது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி கெலமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகி 2 வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- மாநகராட்சி அலுவலகத்தில், 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
- தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில், 74-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்,
அதனைதொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணி மேற்கொண்ட ஊழியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 57 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) எம்.வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகள் படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து தொடர்புடைய தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளிக்க வேண்டும்.
அதன் நகலை தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வைக்கு வைக்க வேண்டும். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 40 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் என 66 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 33 கடைகள் மற்றும் நிறுவனங்கள் , 24 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 57 நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாமந்தமலை கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
- கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சாமந்தமலை கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தவிர்ப்பது, அனைத்து வீடுகளிலும் திடக் கழிவுகளை தரம் பிரிப்பதை உறுதி செய்தல் மற்றும் 2023-24 ஆம் ஆண்டில் புதியதாக தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
சாலைகள் அப்போது பேசிய கலெக்டர், இந்த ஊராட்சியில் அங்கன்வாடி மையம், வீட்டுமனை பட்டா, பஸ் வசதி, விதவை உதவித்தொகை, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு போன்ற கோரிக்கை வைத்துள்ளீர்கள். தகுதிவாய்ந்த விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இந்த ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ.3 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கருத்துரு தயார் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பச்சிகானப்பள்ளி மற்றும் சின்னகுட்டூர் கிராமங்களில் தலா ரூ.3.42 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேப் போல ஓடு வீடுகள், கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த வாக்காளர்களின் உறுதிமொழி ஆகிய 3 உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில், வேளாண்மை துறை இணை இயக்குநர் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகர், தாசில்தார் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசமூர்த்தி, பத்ரிநாத், வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொதுப்பணித்துறை பொறியாளர் (நீர்வளம்) கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் ராணி சின்னப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் பவானி முனியப்பன், துணைத் தலைவர் மல்லிகா, ஊராட்சி செயலர் முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






